FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

இது ஃபிலிமும் கேமராவும் இல்லாத சினிமா!

இன்றைக்கு இருக்கும் இளைய தலைமுறைக்கு முந்தைய தலைமுறையினர் அனைவராலும் கொண்டாடப்பட்ட

Updated On : 22 ஜூன் 2013, 12:36 pm IST
பகிர்:

இன்றைக்கு இருக்கும் இளைய தலைமுறைக்கு முந்தைய தலைமுறையினர் அனைவராலும் கொண்டாடப்பட்ட சரித்திர தொடர் கல்கியின் "பொன்னியின் செல்வன்'. இந்த நீண்ட சரித்திரக் கதையை ஒலிவடிவமாக்கித் தந்திருக்கிறார் பம்பாய் கண்ணன். இதற்கு முன்பே கல்கியின் "சிவகாமியின் சபதம்' நூலை ஒலிப்புத்தகமாக்கிய அனுபவமும் இலக்கியச் சிறுகதைகளை ஒலிவடிவில் தந்திருக்கும் அனுபவமும் உள்ள பம்பாய் கண்ணன், "பொன்னியின் செல்வன்' ஒலிப் புத்தகத்தை இயக்கும்போது கிடைத்த சுவையான நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்:

""கல்கியின் "சிவகாமியின் சபதம்' நாவலை ஒலிப்புத்தகமாக்கியதைக் கேட்டுவிட்டு "பொன்னியின் செல்வனை' ஒலிப்புத்தகமாக தயாரிக்க முன்வந்தவர் சி.கே.வெங்கட்ராமன். ஏறக்குறைய 2200 பக்கங்கள் உள்ள "பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தை 78 மணிநேரம் ஒலிக்கும் வகையில் 3 டிவிடிகளில் கொண்டுவந்துள்ளோம். 60 கலைஞர்களுக்கு மேல் இந்த ஒலிப்புத்தகத்தில் பேசியிருக்கிறார்கள். இன்றைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் நவீன வடிவத்தில் "பொன்னியின் செல்வன்' கதையை கொண்டுபோவதுதான் எங்களின் நோக்கம். அதுமட்டுமல்ல; குழந்தைகளிடையே படிக்கிற பழக்கம் குறைந்துவருகிற நிலையில் இந்த ஒலிப்புத்தகம் நல்ல பலனைத் தரும்.

ஒலிப்புத்தகம் என்றாலே பலரும் மைக்கின் முன்னால் கதையைப் படித்துவிடுவது அவ்வளவுதானே?! என்று நினைத்துவிடுகின்றனர். அப்படியில்லை. வெறுமனே நாம் கதையைப் படிப்பதற்கும் அதை இன்னொருவரைக் கொண்டு பேசவைத்து பதிவுசெய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

Advertisement

Advertisement

ஒரு காட்சியை வர்ணிப்பது, கதையின் போக்கை கோடிட்டுக் காட்டுவது போன்றவை கதைசொல்லியின் உத்திகள். இந்த கதை சொல்லியின் குரல் முடியும் இடத்தில் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளத் தொடங்கும். குரல்களுக்குள் நடக்கும் இந்த "ரிலே-ரேஸ்'தான் இந்த ஒலிப்புத்தகத்தின் முழுமைக்கு உதாரணம். இதுதான் இந்தப் புத்தகத்தை முழுமையாக உங்களை கேட்பதற்குத் தூண்டும் கருவியுமாகும். நாடகபாணியிலான ஒலிச்சித்திர வடிவத்தை நாங்கள் கையாண்டிருக்கிறோம்.

இந்த ஒலிப்புத்தகத்தை தயாரிப்பதில் நேர்ந்த சவால்களைச் சொல்லவேண்டும். முதலில் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரிந்த தமிழர்களை தேர்ந்தெடுத்து பேசவைப்பதே சவாலாக இருந்தது. இரண்டாவது, பாத்திரத்தின் தன்மையறிந்து பேசுவது. அதற்கு இந்தக் கதையை ஒருமுறையாவது படித்த அனுபவம் இருக்கவேண்டும். உதாரணத்துக்கு, வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டால், அவன் சில இடத்தில் வீரனாக இருப்பான். சில இடங்களில் கோமாளியாக இருப்பான். தண்ணீரைக் கண்டாலே பயப்படுவான். இப்படி பல பரிமாணங்களை அந்த கதாபாத்திரத்திற்கு கல்கி அளித்திருப்பார். இப்படி பாத்திரத்தின் உணர்ச்சியை குரலில் கொண்டுவருபவர்களை மிகவும் சிரமப்பட்டே தேடிக் கண்டுபிடித்தோம். அப்படி தேர்ந்தெடுத்தவர்களில் வந்தியத்தேவனுக்கு இளங்கோ, அருள்மொழிவர்மனுக்கு ஆனந்த், ஆதித்த கரிகாலனுக்கு வெற்றி, பெரிய பழுவேட்டரையருக்கு வேலுச்சாமி, நந்தினிக்கு பாத்திமா பாபு ஆகியோர் மிகச் சிறப்பாக குரல் கொடுத்துள்ளனர்.

கதையின் சூழலுக்கு ஏற்ற இசையை, சிறப்பு சப்தங்களுடன் சேர்த்திருக்கிறோம். இந்த ஒலிப்புத்தகத்தில் 30 பாடல்களும் இருக்கின்றன. அதில் 15 பாடல்களை பின்னணி இசையோடு பதிவு செய்திருக்கிறோம். கல்கியே சில பாடல்களை எழுதியிருக்கிறார். சிலப்பதிகாரம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களை கதையின் போக்குக்கேற்ப கல்கி புகுத்தியிருக்கிறார். அதன் சுவை குன்றாமல் நாங்களும் அதைப் பதிவு செய்திருக்கிறோம்.

சுருக்கமாகச் சொன்னால் ஃபிலிமும் கேமராவும் இல்லாமல் ஒரு சரித்திரகால சினிமாவை இயக்கிய அனுபவம் எனக்கு இந்த ஒலிப்புத்தகத்தின் இயக்கத்தில் கிடைத்திருக்கிறது!'' என்றார் சாதித்த திருப்தியுடன் பம்பாய் கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments