முகப்பு
தினமணி கதிர்

பெரிய்...ய கோயில்...

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில், ராபின்விலில் 183 ஏக்கரில் அமைந்துள்ள ஸ்ரீசுவாமி நாராயணன் மந்திர், உலகின் இரண்டாவது பெரிய ஹிந்து கோயில் வளாகமாகும்.

Updated On : 30 நவம்பர் 2025, 12:01 am IST
பகிர்:

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில், ராபின்விலில் 183 ஏக்கரில் அமைந்துள்ள ஸ்ரீசுவாமி நாராயணன் மந்திர், உலகின் இரண்டாவது பெரிய ஹிந்து கோயில் வளாகமாகும். 'பி.ஏ.பி.எஸ்.' அமைப்பினரால், பல கோடி டாலர் மதிப்பில் உருவாகியுள்ள இந்தக் கோயில் அக்ஷர்தாம் வகையைச் சார்ந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ சுவாமி நாராயணர் என்கிற மகான் உருவாக்கிய ஆன்மிக இயக்கத்தின் வழிவந்தவர்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும், நைரோபி, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் உருவாக்கிய அக்ஷர்தாம்களில் மிகப் பெரியது இதுவேயாகும்.

நாகரி பாணியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் இந்தியக் கலாசாரத்தையும், பண்பாட்டையும், பாரம்பரிய கட்டடக் கலையால் உலகுக்குக் காட்சிப்படுத்துகிறது. உலக அமைதி, சகோதரத்துவம், ஒற்றுமைகளுக்கு வழிகாட்டியாக அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்.

Advertisement

Advertisement

பெரிய கோயில்களில் கம்போடியாவின் அங்கோர்வாட் (402 ஏக்கர்) முதல் இடத்தையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் (156 ஏக்கர்) மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.

1781இல் அயோத்தி அருகேயுள்ள குக்கிராமத்தில் பிறந்த, ஸ்ரீசுவாமி நாராயணனின் இயற்பெயர் நீலகண்டவாரிணி. இவர் தனது பதினோராவது வயதில் ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டார். ஹரித்வார், பத்ரிநாத், மானசரோவர், கயிலை, முக்திநாத், புரி, காஞ்சிபுரம், ராமேசுவரம், கன்னியாகுமரி, கர்நாடகத்தின் மேலக்கோட்டை, நாசிக், புணே உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களை தரிசித்தார். பல இடங்

களில் தவத்தை மேற்கொண்ட அவர், 12 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை 7 வருடங்கள், ஒரு மாதம், 11 நாள்களில் கடந்தார். பின்னர், குஜராத்தின் ஜுனாகட் மாவட்டத்துக்கு உள்பட்ட 'லோஜ்' பகுதியை அவர் அடைந்து, ஆசிரமத்தை அமைத்தார். சுவாமி நாராயணர் நினைவாக இவ்வாறு அமைந்ததுதான் இந்த அக்ஷர்தாம் கோயில்கள்.

கோயில் உருவானது எப்படி? ஐந்தாவது குருவான ஸ்ரீபிரமுகச்வரூப் மகராஜின் முன்னெடுப்பாலும், தற்போதைய குரு மகான் சுவாமி மகராஜ் வழிகாட்டுதலுடன் பி.ஏ.பி.எஸ். அமைப்பினரின உழைப்பின் காரணமாக, அமெரிக்காவில் ஸ்ரீசுவாமி நாராயண் அக்ஷர்தாம் உருவாகியுள்ளது.

2011இல் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கி, 2023ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது. சுமார் 12,500 தன்னார்வத் தொண்டர்கள் பணியாற்றினர்.

20 லட்சம் சதுரஅடி அளவுக்கு சுண்ணாம்புக்கல், மார்பிள், கிரானைட், சான்ட் ஸ்டோன் எனப் பல்வேறு கற்கள், கிரேக்கம், பிரேசில், பல்கேரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து தருவித்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன. இத்துடன் ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களையும் கொண்டு, கோயிலின் தூண்களும், வேலைப்பாடுகள் கொண்ட பல்வேறு சிற்பங்களும் 13 ஆயிரம் கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டன. பின்னர், கடல் மார்க்கமாக நியூஜெர்ஸி துறைமுகம் வந்தடைந்து, இந்தத் திருத்தலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலில் 191 அடி உயரம் உள்ள மகா மண்டபமும், 18 உப கோபுரங்களும், 12 சந்நிதிகளும் உள்ளன. வாகனங்களை நிறுத்தத் தாராளமாக இட வசதி உள்ளது.

சிறப்பு அம்சங்கள்: வளாகத்துக்குள் நுழைந்தால், மகான் சுவாமி நாராயணர் தனது பதினோராவது வயதில் பாலகனாக, வலது காலை மடித்து, இடது பாதத்தை ஊன்றி இரண்டு கரங்களையும் விண்ணை நோக்கி உயர்த்தியவாறு யோக முத்திரையாகத் தவம் மேற்கொண்ட காட்சி வெண்கலச் சிலையாக வரவேற்கிறது. அவர் வாழ்ந்த ஆண்டுகளைக் குறிக்கும்படி, இந்தச் சிலையின் உயரம் 49 அடியாக உள்ளது.

அழகிய பூங்காவின் வழியாக நடந்து சென்றால் பிரம்மகுண்டம் என்னும் தடாகத்தைக் காணலாம். இதைச் சுற்றிப் படித்துறையும், நடுவில் அழகிய நீரூற்றும் உள்ளது. கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயு நதிகளைக் குறிக்கும் வண்ணம், நதிமாதாக்களின் வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் இந்தக் குளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

வரவேற்பு மையத்தில் நுழைந்தால், ஹவேலி கட்டடக் கலைப் பாணியில் செதுக்கப்பட்ட, பர்மா தேக்கினாலான அழகிய தூண்கள், பின்னர் காணப்போகும் மண்டப காட்சிகளுக்குக் கட்டியம் கூறுகின்றன. இந்த அரங்கு முழுவதும் ஒளிரும் 2,700 பாரம்பரிய விளக்குகள், தீபாவளித் திருநாள் காட்சிகளை நினைவுபடுத்துகின்றன. இங்குள்ள 3 திரையரங்குகளில் 8 நிமிட படக்காட்சிகளாக இந்தக் கோயில் உருவான வரலாறு காட்டப்படுகிறது.

வரவேற்பு மையத்தை விட்டு வெளியே வந்தால், அகண்டவெளியில் பெரிய அரண்மனையைப் போல மகாமண்டபம் மிளிர்கிறது. அலங்கரிக்கப்பட்ட யானைச் சிலைகளின் கூட்டம் நுழைவாயிலின், பிரம்மாண்டத்துக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

மகாமண்டபத்தின் மையத்தில், மகான் சுவாமி நாராயணர் திருவுருவச் சிலை, அமர்ந்த நிலையில் உள்ளது. சிவ குடும்பம், ராதா, கிருஷ்ணர் சந்நிதிகள் வடஇந்திய பாணியில் அமைந்துள்ளன. வெள்ளை மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களும் மிக நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளன.

இறை வடிவங்கள், ராமாயண, மகாபாரத காட்சிகள், பகவான் கிருஷ்ணரின் லீலைகள், மகரிஷிகள், நவகிரகங்கள், தேவர்கள், இயற்கைக் காட்சிகள், விலங்குகள், பறவைகள், இசைக்கருவிகள், நடன அசைவுகள் என சிலைகள் இடைவெளியின்றி தூண்களிலும், மாடங்களிலும், விதானங்களிலும் கண்ணைக் கவருகின்றன.

இங்குள்ள ஒரு மேசையின்மீது, அழகான தூணின் சிறு பகுதியை வைத்திருக்கிறார்கள். இதை எத்தனை முறை வேண்டுமானாலும் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால், மண்டபத்தில் உள்ள எந்தத் தூணையும் தொடக் கூடாது. இங்குள்ள 'ஷயோனா' உணவகத்தில் இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் சைவ உணவு வகைகள் கிடைக்கின்றன.

காலை 9 மணி முதல் மாலை 7.30 வரை கோயில் திறந்திருக்கும். காலை 11.45 மணிக்கும், மாலை 4 மணிக்கும் மங்கள ஆரத்தி எடுக்கப்படுகிறது. இந்த வளாகம் பிரதி செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்புக்காக முழுவதும் மூடப்பட்டிருக்கும். முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நேரத்தில் சுற்றிப் பார்க்கும் வசதி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments