முகப்பு
தினமணி கதிர்

காலத்தின் துல்லியம்

'காலம் பொன் போன்றது' என்பது பழமொழி. பொன்னையும்கூட விலை கொடுத்து வாங்கிவிடலாம்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 10:39 PM
பகிர்:

'காலம் பொன் போன்றது' என்பது பழமொழி. பொன்னையும்கூட விலை கொடுத்து வாங்கிவிடலாம். ஆனால் காலத்தை, எதைக் கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாது. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கூறுக்கும் வயது உள்ளது. நாமிருக்கும் அண்டம், நம்முடைய பால்வெளித்திரள், சூரியன், பூமி என அனைத்துக்கும் வயதுக் கணக்கு உள்ளது. 'ரேடியோ கார்பன்' முறைப்படி சூரியன் உருவாகி 475 கோடி ஆண்டுகள் ஆகின்றது என்றும், பூமி தோன்றி 465 கோடி ஆண்டுகள் ஆகின்றது என்றும் விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். புவியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் சராசரி ஆயுள்காலம் உண்டு. அவ்வகையில் மனிதர்க்கும் உண்டு.

மனிதர்களின் சுவாசக் கணக்கையும் ஆயுள்காலத்தையும் ஞானத்தால் உணர்ந்து கூறுவார் ரோம ரிஷி.

புத்தரிடம் ஒரு சீடர், 'குருவே! மனிதனின் வாழ்நாள் ஒரு விநாடிதானா?' என்று கேட்டார். அதற்கு புத்தர், ' ஒரு விநாடியல்ல; ஆனால், ஒவ்வொரு விநாடியாக வாழ வேண்டும். அதாவது ஒவ்வொரு விநாடிக்குமான திட்டங்களை அவன் வைத்திருக்கப் பழக வேண்டும்' என்கிறார்.

Advertisement

அப்படிக் காலத்தை அளப்பதற்குப் பலவிதமான நுண்ணிய அளவுகள் உள்ளன. ஆண்டு, மாதம், வாரம், நாள், பொழுது, மணி, நாழிகை, நொடி, விநாடி போன்ற அளவுகள் நம் பழக்கத்தில் உள்ளன. விநாடி (செகன்ட்) இதை இன்னும் நுண்மையானதாக 'மில்லி செகன்ட்', 'மைக்ரோ செகன்ட்', 'செப்டோ செகன்ட்' என்று தொழில்நுட்பவாதிகள் பிரிக்கின்றனர். காலத்தை அளப்பதற்கு 'சூரியக் கடிகாரம்', 'மணற்கடிகாரம்', 'சாவி கொடுத்து சுருளை இயங்கவைக்கும் கடிகாரம்', 'மின்கலத்தினால் இயங்கும் குவார்ட்ஸ் கடிகாரம்', 'எண்ம கடிகாரம்', 'சூரிய ஒளியில் இயங்கும் எண்ம கடிகாரம்', 'நவீன தொடுதிரை கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்' உள்ளிட்ட பலவற்றை மனிதனின் அறிவு வளர்ச்சியால் உலகம் கண்டு வருகிறது.

'அணுக் கடிகாரம்' என்பது காலத்தை மிகத் துல்லியமாக அளவிடும் கடிகாரமாகப் பார்க்கப்படுகிறது. இவை வழக்கமாக, 'சீசியம்' அல்லது 'ரூபீடியம் அணுக்களின் ஒத்ததிர்வு' எனும் அடிப்படையில் நேரத்தைக் கணக்கிடுகிறது. அணுக் கடிகாரத்தில், 'சீசியம்-133' பயன்படுத்தப்படுகிறது. 'சீசியம்-133' என்பது சீசியத்தின் ஒரு நிலையான ஐசோடோப்பாகும். 1967- ஆம் ஆண்டு முதல் ஒரு விநாடி என்பது சீசியம்-133 ஐசோடோப்பில் அதன் இயல்பு ஆற்றல் நிலையில் அதன் மீநுண் ஆற்றல் மட்டங்களுக்கிடையே 9,192,631,770 முறை கதிரியக்கம் நிகழ்வதற்கான கால அளவாக வரையறுக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள தேசிய தரநிலைகள், தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் துல்லியமான அணுக் கடிகாரத்தைச் சென்ற ஆண்டு உருவாக்கியுள்ளனர். இது நேரத்தை 19-ஆவது தசம இலக்கம் வரை துல்லியமாக அளவிடும் திறன் கொண்டது.

கடந்த இருபது ஆண்டுகளாகத் தொடர் மேம்பாட்டுக்கு உள்படுத்தப்பட்டு வரும் இந்த 'குவாண்டம் தர்க்கக் கடிகாரம்', மின்சாரம் ஏற்றப்பட்ட ஓர் அலுமினியம் அணுவை ஒரு மக்னீசியம் அயனியுடன் இணைக்கும் குவாண்டம் கணினி நுட்பங்களைச் சார்ந்திருக்கிறது.

உலகிலேயே மிகச் சிறந்த துல்லியத் தன்மையை முந்தைய சாதனையைவிட 41% அதிகம் கொண்டிருப்பதுடன் இந்தப் புதிய கடிகாரம் வேறு எந்த அயனிக் கடிகாரத்தையும்விட 2.6 மடங்கு அதிக நிலைத்தன்மையையும் கொண்டுள்ளது. மிக உயர்ந்த துல்லியத்துடன் விநாடியை வரையறுப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பு வலு சேர்ப்பதோடு, புதிய அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கிறது.

தில்லியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். எனும் தேசிய இயற்பியல் ஆய்வகத்தினர் இந்திய சீர் நேரத்தை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளனர். நேர நிர்ணய முறை, சீசியம் அணுக் கடிகாரங்களின் தொகுப்பு, ஒரு ஹைட்ரஜன் மேசர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கடிகாரங்கள் மிகத் துல்லியமானவை. சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளில் இவை ஒரு விநாடியை மட்டுமே இழக்கும் அல்லது ஈட்டும். நேர அளவுகோலின் தடமறியும் திறன், சில நானோ விநாடிகள் அளவிலேயே உள்ளது.

முதன்மை அணுக் கடிகாரங்கள் தொடர்பான ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பணிகளையும் இவர்கள் மேற்கொண்டுள்ளனர். 15-ஆவது தசம இலக்கம் வரை துல்லியத்தைக் கொண்ட முதல் சீசியம் 'ஃபவுண்டன்' கடிகாரம் 2011-ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது. இரண்டாவது சீசியம் 'ஃபவுண்டன்' கடிகாரம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

ஒற்றை எட்டெர்பியம் அயனியை அடிப்படையாகக் கொண்டு, ஒளியியல் அலைநீளங்களில் இயங்கும் இன்னும் அதிக துல்லியமான (17-ஆவது தசம இலக்கம் ஒரு கடிகாரத்தை உருவாக்கும் பணியை இவர்கள் தொடங்கியுள்ளனர்.

ஒரு விநாடியை இவ்வளவு துல்லியமாகப் பகுத்துகொண்டு அறிவியல் உலகம் செல்கிறது. நாமும் நேரத்தின் அருமை கருதி அதை வீணடிக்காமல் பயன்படுத்தினால் அவரவர் துறையில் வெற்றியாளராக வரலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments