FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

மனித எண்ணங்களை இயக்கும் ஏ.ஐ.!

மனிதர்கள் தங்கள் கைகளையோ, குரலையோ பயன்படுத்தாமல், வெறும் எண்ணங்கள் மூலமாகவே கணினியையும் கைப்பேசிகளையும் இயக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 4:08 am IST
பகிர்:

ஜோதிமணி பாண்டியன்

மனிதர்கள் தங்கள் கைகளையோ, குரலையோ பயன்படுத்தாமல், வெறும் எண்ணங்கள் மூலமாகவே கணினியையும் கைப்பேசிகளையும் இயக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இந்தப் புரட்சிகரமான தொழில்நுட்பத்துக்கு 'மூளை-கணினி இணைப்பு' என்று பெயர்.

Advertisement

Advertisement

நாம் எதையாவது நினைக்கும்போது அல்லது ஒரு செயலைச் செய்ய முற்படும்போது, மூளையில் உள்ள நூற்றுக்கணக்கான கோடி நரம்புச் செல்களுக்கு இடையே சிறிய அளவிலான மின் சமிக்ஞைகள், அலைகள் உருவாகின்றன. இந்த மூளை அலைகளை முக்கியமாக நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

நாம் அமைதியாகவும் தளர்வாகவும் இருக்கும் போது ஆல்ஃபா அலைகளும், தீவிரமாக சிந்திக்கும் போதும் ஒரு வேலையில் கவனம் செலுத்தும் போதும் பீட்டா அலைகளும் வெளிப்படுகின்றன. ஆழ்ந்த தியானம் அல்லது தூக்க கலக்கத்தில் இருக்கும்போது தீட்டா அலைகளும், முற்றிலும் விழிப்புணர்வற்ற ஆழமான உறக்கத்தின் போது டெல்டா அலைகளும் ஏற்படுகின்றன.

மூளையிலிருந்து வெளியாகும் மின் அலைகள் மிகவும் பலவீனமானவை. தேவையற்ற இரைச்சல்கள் நிறைந்தவை. இதில் மனிதன் என்ன நினைக்கிறான் என்பதைத் துல்லியமாகப் பிரித்தெடுப்பது சாதாரண கணினியால் சாத்தியமற்றது. இங்கிருந்துதான் செயற்கை நுண்ணறிவின் கணிப்பீட்டு முறைகள் தங்கள் ஆட்டத்தைத் தொடங்குகின்றன.

செயற்கை நுண்ணறிவு முக்கியமாக நான்கு கட்டங்களில் இந்த மூளைத் தரவுகளைக் கையாள்கின்றன. முதலாவதாக, தலைக்கவசம் அல்லது மூளைச் சில்லுகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இரண்டாவதாக, தேவையற்ற மூளை அதிர்வுகள் நீக்கப்பட்டு, எண்ண அலைகள் மட்டும் தனிமைப்படுத்தப்படுகின்றன. மூன்றாவதாக, குறிப்பிட்ட எண்ணத்துக்கு எந்த நரம்புச் செல்லின் அலைப்பின்னல் பொறுப்பு என்பது கண்டறியப்படுகிறது. கடைசியாக, அந்த எண்ணம் கணினித் திரையில் ஒரு எழுத்தாகவோ அல்லது சுட்டியின் இயக்கமாகவோ மாற்றப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் தற்போதைய உச்சகட்ட மைல்கல் எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் ஆகும்.

மனித மூளையினுள் நேரடியாக ஒரு சிறிய நாணயம் அளவிலான சில்லைப் பொருத்தி, மனிதர்கள் எண்ணங்கள் மூலம் மட்டுமே கணினியை இயக்க வைப்பதில் இந்த நிறுவனம் சாதித்துள்ளது. பக்கவாதம், தண்டுவடப் பாதிப்பால் கை, கால்களை அசைக்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு இது ஒரு புதிய வாழ்க்கையை வழங்கியுள்ளது.

இருப்பினும், சில மிகப்பெரிய தார்மிக, பாதுகாப்பு சவால்களும் ஒளிந்துள்ளன. குறிப்பாக, மனித உறவுகளில் இது மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்தக்கூடும். கணவன் மற்றும் மனைவி இடையே உள்ள உறவில் பரஸ்பர நம்பிக்கை, சிறு மறைமுக எண்ணங்கள், சுய தனிப்பரிமாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. ஏ.ஐ. மூலம் ஒருவரின் மனதை நேரடியாகப் படிக்க முடியும் என்ற நிலை வந்தால், தம்பதியினருக்கு இடையே உள்ள ரகசியங்களும், தற்காலிகமாக மனதில் தோன்றி மறையும் தவறான எண்ணங்களும் கூட வெளிப்பட்டு,

அநாவசிய சந்தேகங்களையும் மனக்கசப்புகளையும் உருவாக்கும். இதனால் குடும்ப உறவுகள் முறிந்து போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

மேலும், செயற்கை நுண்ணறிவு நம் மூளையை நேரடியாகப் படிக்கும் போது, நமது தனிப்பட்ட ரகசியங்கள், கடவுச்சொற்கள் அல்லது அந்தரங்க நினைவுகள் ஊடுருவிகளால் திருடப்பட வாய்ப்புள்ளது. இயற்கையான மனிதச் சிந்தனைக்கும் செயற்கைக் கட்டளைகளுக்கும் இடையே உள்ள எல்லைக் கோடு மறைந்து, மனிதர்களின் சுய புத்தித்திறன் பாதிக்கப்படலாம்.

எதிர்காலத்தில் நாம் கைப்பேசிகளில் தட்டச்சு செய்ய வேண்டியதில்லை. நாம் நினைக்க நினைக்க, செய்திகள் தானாகவே அனுப்பப்படும். 'செயற்கை தொலைவுணர்வு' எனப்படும் இந்தத் தொழில்நுட்பம் மனித குலத்துக்கு நன்மைகளைத் தந்தாலும், உறவுகளையும் தனிமனித சுதந்திரத்தையும் அது எவ்வாறு பாதிக்கும் என்பதைச் சிந்தித்துச் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments