FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வியப்பூட்டும் பறவைகள்!

பறவைகள் கட்டும் கூடுகள் என்பது வெறும் குச்சிகள், இலைகள், நார்கள் கொண்ட அமைப்புகள் மட்டுமல்ல.

22 ஆகஸ்ட் 2026, 7:41 pm IST
பகிர்:

பறவைகள் கட்டும் கூடுகள் என்பது வெறும் குச்சிகள், இலைகள், நார்கள் கொண்ட அமைப்புகள் மட்டுமல்ல. அவற்றில் பாதுகாப்பு, அறிவு, பொறுமை, உழைப்பு, தொழில்நுட்பம் என இயற்கையின் எண்ணற்ற ரகசியங்கள் பொதிந்துள்ளன. ஒவ்வொரு பறவையின் கூடும் அதன் வாழ்வியல் அறிவுக்கும் இயற்கையோடு கொண்டுள்ள நெருக்கத்துக்கும் மிகச் சிறந்த சான்றாகும்.

பறவைகள் வெறும் பறந்து திரிவதற்காக மட்டுமே வாழ்வதில்லை. அவற்றின் வாழ்க்கையில் கூடு கட்டுவது மிக முக்கியமான பணியாகும். முட்டையிடவும், முட்டைகளை அடை காக்கவும், குஞ்சுகளைப் பாதுகாப்பாக வளர்க்கவும் அவை தங்களுக்கு ஏற்ற இடங்களில் கூடுகளை அமைத்துக் கொள்கின்றன.

ஒவ்வொரு பறவையும் அதன் வாழிடத்துக்கும் உடல் அமைப்புக்கும் ஏற்ப வெவ்வேறு முறைகளில் கூடு கட்டுவது இயற்கையின் வியப்பூட்டும் படைப்பாகும்.

Advertisement

Advertisement

பறவைகளின் கூடுகள் சிலவற்றை அறிவோம்.

தூக்கணாங்குருவியின் தொங்கும் கூடு: தூக்கணாங்குருவி கட்டும் கூடு பார்ப்பதற்கே அழகானது. நூற்றுக்கணக்கான இலை நார்களை அலகால் கிழித்து, அவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து நுட்பமாகத் தொங்கும் கூட்டை உருவாக்குகிறது. இதில் ஆண் பறவையின் பங்கு முக்கியமானது. அது கட்டிய கூட்டைப் பெண் பறவை பார்வையிட்டு, கூட்டின் தரம், பாதுகாப்பு ஆகியன திருப்திகரமாக இருந்தால் மட்டுமே இணைந்து வாழத் தொடங்குகிறது.

உமிழ்நீரால் கூடு கட்டும் நாட்டு உழவாரன்: நாட்டு உழவாரன் போன்ற பறவைகள் பசை போன்ற உமிழ்நீரைப் பயன்படுத்தி, இறகுகள், புற்கள் உள்ளிட்ட பொருள்களை ஒன்றோடு ஒன்று ஒட்ட வைத்து, கூட்டை உருவாக்குகின்றன. பழைய கட்டடங்கள், சுவர்கள், பாறைகள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களைத் தேர்ந்தெடுக்கும் இப்பறவைகள், ஒரே கூட்டை பல ஆண்டுகள் பழுதுபார்த்துப் பயன்படுத்துகின்றன.

மற்றொரு பறவையின் கூட்டில் முட்டையிடும் குயில்: தனக்கெனக் கூடு கட்டாமல் மற்றொரு பறவையின் கூட்டைப் பயன்படுத்தும் பறவைகளில் குயில் முக்கியமானது. காகத்தின் கூட்டில் குயில் முட்டையிடும். காகம் அதைத் தன் முட்டை என்றே நினைத்து அடைகாத்து குஞ்சு பொரிக்கச் செய்கிறது. பின்னர் குயில் குஞ்சுக்கும் உணவு அளித்து வளர்க்கிறது. இயற்கையில் காணப்படும் இந்த நடத்தை பறவைகளின் தனித்துவமான வாழ்வியல் முறைகளில் ஒன்றாகும்.

தாமரைக் கோழியின் மிதக்கும் கூடு: நீர்வாழ் தாவரங்களின் மத்தியில் கூடு கட்டும் பறவையாக தாமரைக் கோழி உள்ளது. நீரில் கிடைக்கும் தாவரப் பொருள்களைப் பயன்படுத்தி கூடு அமைத்து, அதில் முட்டையிடுகிறது. நீரின் சூழலுக்கு ஏற்ப தன்னுடைய இனப்பெருக்கத்துக்கான பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் திறன் இப்பறவைகளிடம் காணப்படுகிறது.

எறும்புக் கூட்டில் கூடு: மரக்கிளைகளில் கூடு கட்டும் மரக்கொத்திகளில் சில இனங்கள் எறும்புகளின் வாழிடத்தையே தங்கள் கூட்டுக்கான இடமாகத் தேர்வு செய்கின்றன. மரத்தில் உருவாகும் எறும்புக் கூட்டுக்குள் நுழைந்து, அதற்குள் தங்கள் முட்டைகளை இடுகின்றன. இயற்கையில் உள்ள பிற உயிரினங்களின் வாழிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வியப்பூட்டும் திறன் இதன் மூலம் வெளிப்படுகிறது.

தரையில் குழி தோண்டி கூடு கட்டும் பறவைகள்: சில பறவைகள் மரங்களையோ, கட்டடங்களையோ நாடாமல் நிலத்திலேயே கூடு அமைக்கின்றன. அவை மண்ணில் ஆழம் குறைந்த குழிகளைத் தோண்டி, அதன் உள்ளே சிறிய கற்களைப் பரப்பி, முட்டைகளை இடுகின்றன. முட்டைகளின் நிறமும் வடிவமும் சுற்றுப்புறச் சூழலை ஒத்திருப்பதால் எதிரிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்க உதவுகிறது. இது இயற்கை வழங்கிய ஒரு சிறந்த மறைமுகப் பாதுகாப்பாகும்.

கூட்டைக் கட்டாமல் முட்டையைப் பாதுகாக்கும் பென்குயின்: தென் துருவப் பகுதியில் வாழும் சக்ரவர்த்தி பென்குயின்கள், பனியில் வழக்கமான கூடு கட்டுவதில்லை. கடுமையான குளிரில் முட்டை உறைந்து விடக்கூடும் என்பதால், அவற்றை உடலின் வெப்பத்தால் பாதுகாக்கும் தனித்துவமான முறையைப் பின்பற்றுகின்றன. பெண் பென்குயின் முட்டையிட்டதும், அதை ஆண் பென்குயினிடம் ஒப்படைக்கிறது. ஆண் பென்குயின் தனது பாதங்களின் மீது முட்டையை வைத்து, உடலின் கீழ்ப் பகுதியால் அதை மூடி, வெப்பமாகப் பாதுகாக்கிறது. இந்தக் காலத்தில் ஆண் பென்குயினால் உணவு தேடிச் செல்ல முடியாது. எனவே முட்டை பொரியும் வரை நீண்ட காலம் உணவின்றி விரதம் இருப்பதும் இயற்கையின் அற்புதமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments