முகப்பு
தினமணி கதிர்

96 ஆண்டு கால கனவு!

கால்பந்தின் பேராலயம் என்று அழைக்கப்படுகிறது மெக்சிகோ நகரில் அமைந்துள்ள 'எஸ்டாடியோ அஸ்டெகா' விளையாட்டரங்கம்.

Updated On : 21 ஜூன் 2026, 4:07 am IST
பகிர்:

கால்பந்தின் பேராலயம் என்று அழைக்கப்படுகிறது மெக்சிகோ நகரில் அமைந்துள்ள 'எஸ்டாடியோ அஸ்டெகா' விளையாட்டரங்கம். இதுவரை மூன்று ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை (1970, 1986, 2026) நடத்திய ஒரே அரங்கம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. 2026 உலகப் போட்டிகளில் பலவும் இந்த விளையாட்டு அரங்கில் நடந்து வருகின்றன.

கால்பந்தாட்ட பீஷ்மர்களான பீலே, மாரடோனா இந்த அரங்கில் விளையாடி உலகக் கோப்பையை வென்ற தருணங்கள் என்றும் நினைவுகூரத்தக்கன. மரடோனாவின் புகழ்பெற்ற 'கடவுளின் கை' கோல் அடிக்கப்பட்டதும் இங்கேதான்.

1960-இல் கட்டப்பட்ட இந்த அரங்கம் 2026 உலகப் போட்டிக்காக சுமார் 1188 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில், ஒரே நேரத்தில் 87,523 பேர் அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும்.

Advertisement

Advertisement

புகழ்பெற்ற மெக்சிகோ நாட்டின் கட்டடக் கலைஞர்களான பெட்ரோ ராமிரெஸ் வாஸ்குவேஸ் மற்றும் ரஃபேல் மிஜாரெஸ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட இந்த அரங்கம், மெக்சிகோ நகரில் நடைபெற்ற 1968 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்குச் சற்று முன்னதாக, 1966-இல் திறந்து வைக்கப்பட்டது.

பல அரங்கங்கள் செவ்வக வடிவில் வடிவமைக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில், இதன் நேர்த்தியான நீள் வட்ட வடிவம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. உட்புறத் தூண்கள் ஏதுமின்றி, ஒரு தொடர்ச்சியான நீள்வட்டக் கிண்ணமாக இது கட்டப்பட்டிருப்பதால், அரங்கில் எங்கு அமர்ந்தாலும் விளையாட்டை எந்தத் தடங்கலும் இன்றிப் பார்க்க முடியும்.

லத்தீன் அமெரிக்காவிலேயே மிகப் பெரிய விளையாட்டு அரங்கமான 'எஸ்டாடியோ அஸ்டெகா' அரங்கத்தை கோடிக்கணக்கான மெக்சிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். விளையாட்டுகள் மட்டுமன்றி, பல பொது நிகழ்ச்சிகளும் இந்த அரங்கில் நடக்கின்றன.

போப் ஆண்டவர் இந்த அரங்கில் உரையாற்றியபோது பல லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். ஜூலியோ சீசர் சாவேஸின் குத்துச்சண்டைப் போட்டிக்கு சுமார் 1 ,30,000 பேர்கள் வருகை தந்தனர். இந்த மைதானத்தில் இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், சர்வதேசத் தொடர் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

'எஸ்டாடியோ அஸ்டெகா' அரங்கம் மெக்சிகோவில் இருந்தாலும், உள்ளூர் மெக்சிகோ அணிக்கு என்னவோ ராசியானதாக அமையவில்லை. இங்கே விளையாடிய போட்டிகளில் மெக்சிகோ அணி இதுவரை வெற்றி பெறவில்லை. அதுவும் போட்டியின் முதல் நாள் நடக்கும் போட்டியில் மெக்சிகோ கலந்துகொண்டு திறமையாக ஆடினாலும் வெற்றி நழுவிப் போய்விடும்.

மெக்சிகோ அணி 1930 முதல் விளையாடி வருகிறது. 1930-இல் பிரான்ஸ் அணி மெக்சிகோவை ஒரு கோலுக்கு நான்கு கோல் அடித்து வெற்றி பெற்றது. அன்று முதல் தனது உலகக் கோப்பை முதல் நாள் போட்டிகளில் மெக்சிகோ அணி வென்றதே கிடையாது.

தனது பயணத்தில், மெக்சிகோ அணி இரண்டு முறை (1970, 1986) காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 16 உலகக் கோப்பையில் விளையாடியிருக்கிறது. 1974, 1982 ஆம் ஆண்டுகளில் தேர்வாகாத மெக்சிகோ அணி 1990-இல் பங்கேற்க தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில், கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளின் சரித்திரத்தில், மெக்சிகோ அணியின் 96 ஆண்டு கால சாபம் 2026 -இல் விலகியுள்ளது. மெக்சிகோ அணி தான் விளையாடிய முதல் போட்டியிலேயே சொந்த பூமியில் சொந்த அரங்கில் முதல்முறையாக வென்று வரலாற்றுச் சாதனையை ஜூன் 11 நள்ளிரவு நிகழ்த்தியுள்ளது. ஆம்...! மெக்சிகோ அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments