என்னால் முடிகிறது... உங்களாலும் முடியும்!
காலநிலை நடவடிக்கை சிறப்பு ஊராட்சி விருதை 2025-இல் வென்ற முதல் இந்திய கிராமமாகத் திகழ்கிறது, மகாராஷ்டிராவின் கோண்டியா பகுதியில் சதக் அர்ஜுனி வட்டத்தில் உள்ள தவ்வா கிராமம்.
காலநிலை நடவடிக்கை சிறப்பு ஊராட்சி விருதை 2025-இல் வென்ற முதல் இந்திய கிராமமாகத் திகழ்கிறது, மகாராஷ்டிராவின் கோண்டியா பகுதியில் சதக் அர்ஜுனி வட்டத்தில் உள்ள தவ்வா கிராமம்.
விருதுடன் ரூ. 1 கோடி பரிசையும் பெற்றுள்ளது. ஏற்கெனவே பல கெளரவங்களைப் பெற்றுள்ள 'தவ்வா'வில் இப்போது நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது, பழத்தோட்டங்கள் பெருகியுள்ளன, கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றன, பொது மக்களுக்கான மன்றங்கள், பள்ளிகள் சூரிய சக்தியால் இயக்கப்படுகின்றன. இந்த மாற்றங்களுக்குப் பின்னணியில் இருப்பவர் யோகேஸ்வரி சத்ருகன் சௌத்ரி.
கிராம மக்கள் சந்தோஷத்தில் வாழ்ந்தாலும், 2003 -இல் திருமணமான யோகேஸ்வரியின் வாழ்க்கை சோகம் நிரம்பியது.
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன், கிராமத்துக்கு மணமகளாக வந்தார். கணவரின் ஆதரவுடன், யோகேஸ்வரி பி.ஏ., பி.எட். மற்றும் டி.எட். பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றார். 2017-இல், கணவர் திடீரெனக் காலமாக, குடும்பப் பொறுப்பை அவரே சுமந்தார். இனி யோகேஸ்வரியே தொடர்கிறார்.
'தவ்வா கிராமத்தின் மோசமான நிலை, சீரழிந்த வயல்கள், வாடும் பயிர்கள், வேலை தேடி இளைஞர்களின் நிலையான இடம்பெயர்வு, கணவரின் மரணம் என்னை கவலை அடையச் செய்தது. குடும்பப் பொறுப்பு ஒருபுறம் இருக்க, கிராமத்துக்குத் தீர்க்கமான தலைமை தேவை என்பதை உணர்ந்தேன். ஊராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். டிசம்பர் 2023-இல், தவ்வா கிராம ஊராட்சித் தலைவராகப் பொறுப்பேற்றேன்.
எங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 3,418. 796 வீடுகளில் அவர்கள் வசிக்கின்றனர். கிராம கூட்டங்களில் மக்களுடன் மனம் திறந்து பேசினேன். மக்களின் முன்னுரிமைகளை பட்டியலிட்டேன். நீர் பாதுகாப்பு முதல் சமூகக் காடு வளர்ப்பு வரை ஒவ்வொருவரையும் கலந்து ஆலோசித்தேன். சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் பேரிடர் தயார்நிலை குறித்த குழுக்கள் உருவாக்கினேன்.
நிர்வாகத்தில் நடைமுறை சவால்களில் எனக்கு வழிகாட்டுதலாக இருந்தவர் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஸ்ரீ பஹேகர். சில மாதங்களுக்குள், தவ்வா 'முதல் ஸ்மார்ட் கிராம' விருதைப் பெற்றது. எனது அடுத்த நோக்கம் விவசாயத்தை மீட்டெடுப்பதாக இருந்தது. ஐந்து விவசாயிகள் அடங்கிய குழுக்கள், 38 பெண்கள் அடங்கிய சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, சூரிய சக்தியில் இயங்கும் நீர்ப்பாசனம், பண்ணை பள்ளிகளை அறிமுகப்படுத்தினேன்.
சூரிய சக்தியில் இயங்கும் நீர்ப்பாசனம் வெகு விரைவிலேயே சாத்தியமானது. தவ்வாவை பசுமையாக்குவது என்பது கிராம மக்களின் கூட்டு விருப்பமாக இருந்தது. அதற்காக அரசு அதிகாரிகளைத் தொடர்ந்து அணுகிக் கொண்டே இருந்தேன். விவசாயிகளுக்குப் பயிர் சார்ந்த பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. வயலைப் பதப்படுத்துதல், தரம் கூட்டுதல், விதைத்தல், பூச்சிக் கட்டுப்பாடு, அறுவடை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
ஒற்றைப் பயிர் வேளாண்மை சார்ந்திருப்பதை விட்டு விலகி, லாபம் தரும் பல பயிர்வகைகளை விளைவிக்க விவசாயிகளை ஊக்குவித்தோம். எனக்குச் சொந்தமான எட்டு ஏக்கர் நிலத்தை, நவீன வேளாண்மை முறைகளுக்கான செயல் விளக்க இடமாக மாற்றினேன். 'என்னால் முடிகிறது... உங்களாலும் முடியும்' என்று விவசாயிகளை நம்பவைத்தேன்.
பெண்கள் தங்கள் சொந்த நிலங்களை அவர்களே நிர்வகிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெண்களிடத்தில் விதைத்தேன். பெண்களால் முடிவுகளை எடுக்க முடியும், கணக்கு வழக்குகளைக் கையாள முடியும், பண்ணைகளை நடத்த முடியும் என்று தன்னம்பிக்கையை பெண்களுக்கு ஊட்டினோம்.
ஒரு காலத்தில் அழிவிலிருந்து மீள போராடி வந்த தவ்வா இப்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களால் செழித்து நிற்கிறது. மரக் கன்றுகளுடன் நம்பிக்கையையும் சேர்த்து நாங்கள் நட்டோம். இப்போது எங்கள் கிராமம் ஒவ்வொரு நாளும் வலுவடைந்து வளர்ந்து வருகிறது.
சுமார் 400 வீடுகள் பகலில் சூரிய ஒளியில் தயாரிக்கப்படும் மின்சக்தியை சேமித்து, இரவில் அந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. கிராமத்தில் மின் சக்தியில் ஓடும் வாகனங்கள் அறிமுகம் ஆகியுள்ளன.
'எனது கடமை சாலைகள் அல்லது வடிகால்களைப் பராமரிப்பது மட்டுமல்ல... நீர்நிலைகளை மாசு அடைவதிலிருந்து காப்பதும் ' என்பதைப் புரியவைத்தேன்.
கிராமத்தின் எதிர்காலத்துக்காக பூமி, காற்று, நீர், நெருப்பு, சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டார்கள்' என்கிறார் யோகேஸ்வரி சத்ருகன் சௌத்ரி.