FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

கோலிவுட் ஸ்டூடியோ!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள மொழிகளில் அதிரடியான லைன் அப்களை கையில் வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Updated On : 24 மே 2026, 4:04 am IST
கீர்த்தி சுரேஷ்
பகிர்:

மனரீதியான பின்னடைவுகள் - கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள மொழிகளில் அதிரடியான லைன் அப்களை கையில் வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அண்மையில், இயக்குநர் மிஷ்கினுடன் இவர் நடிக்கும் 'சத்யவான் சாவித்ரி' படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடைய ஃபிட்னெஸ் பயணம் குறித்து ஒரு காணொலியைப் பதிவிட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

Advertisement

Advertisement

அதில் அவர், பிட்னெஸ் பயணத்தில் எதிர்கொண்ட விஷயங்கள் பற்றி, அது அவருக்கு எத்தகைய நம்பிக்கையைக் கொடுத்தது எனக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், 'என்னுடைய பிட்னெஸ் பயணம் குறித்து நான் இதுவரை எங்கும் விரிவாகப் பேசியதே இல்லை. ஆனால், அதுதான் எனக்குப் மிகப்பெரிய பாடங்களைக் கற்றுக்கொடுத்தது.

ஒவ்வொரு நாளும் என்னுடைய உடலைப் பற்றியும், என்னைப் பற்றியும் புதிய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன். 2013-ஆம் ஆண்டு நான் ஒரு நடிகையாக அறிமுகமாகும்போது எதைப் பற்றியும் பெரிய புரிதல் இல்லாத ஒரு சாதாரணப் பெண்தான்.

பலரைப் போலவே, ஜிம்முக்கும் நமக்கும் ஒத்துவராது என்றுதான் நானும் நினைத்தேன். என்னுடைய உடலுக்கு உண்மையாகவே என்ன தேவை என்கிற அடிப்படையான விஷயங்களை நான் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், 2018-இல் 'மகாநடி' திரைப்படத்துக்குப் பிறகு கிடைத்த ஒரு இடைவெளியில், 'ஏன் நாமும் முயற்சி செய்து பார்க்கக் கூடாது?' என்கிற யோசனை தோன்றியது. உடனடியாக டயட் உணவு முறையோடு சேர்த்து, ஹெச்.ஐ.ஐ.டி., கார்டியோ பயிற்சிகளில் இறங்கினேன். அடுத்த 9 மாதங்களில் 10 கிலோ எடையைக் குறைத்தேன். அதை நினைத்து நான் மிகவும் பெருமைப்பட்ட நேரத்தில்தான், மக்கள் என்னை பலவீனமாக இருக்கிறேன் எனவும், நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என்றும் பேசினர்.

ஆனால், என்னுடைய முகம் உட்பட அனைத்தையுமே நான் எப்போதுமே இயற்கையான முறையில்தான் பராமரித்து வருகிறேன். அப்படி இருக்கும்போது, என்னுடைய இத்தனை உழைப்பைப் பற்றியும் இப்படி சுலபமாகப் பேசியதைக் கேட்டபோது கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது.

ஆனாலும், சிலர் என்னிடம் வந்து, 'நீ குண்டாக இருந்தபோதுதான் நன்றாக இருந்தாய்' என்று தங்களது கருத்துகளைச் சொல்லிவிட்டுப் போகிறார்கள். சமீபகாலமாக எனக்குச் சில உடல்நல, மனரீதியான பின்னடைவுகள் ஏற்பட்டது உண்மைதான்.

இந்த ஃபிட்னெஸ் பயணம் எனக்கு ஒன்றை தெளிவாக நினைவூட்டுகிறது. ஒருவேளை ஏதாவது ஒரு சூழலில் நான் உடையவோ, சில காலம் ஓய்வெடுக்கவோ வேண்டியிருந்தால் கண்டிப்பாக அதைச் செய்வேன். ஆனால், எப்போதுமே நான் என் முயற்சியைக் கைவிட மாட்டேன் என்பதை இந்த ஃபிட்னெஸ் பயணம் கற்றுத் தந்திருக்கிறது' எனப் பதிவிட்டிருக்கிறார்.

சூர்யா

ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் போது, திரையரங்குகளில் சில ரசிகர்கள் சாமியாடும் காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சினிமா என்பதையும் தாண்டி, மக்கள் இதை ஒரு ஆன்மிக எமோஷனல் அனுபவமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இது தொடர்பாக இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'படத்துக்கு மக்கள் அளித்து வரும் பேராதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றி. மேலும், திரையரங்குகளில் ரசிகர்களுக்கு அருள் ஏற்பட்டால், அருகில் இருப்பவர்கள் அவர்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்று அன்பான வேண்டுகோள் வைக்கிறேன். மேலும், திரையரங்கு ஊழியர்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து, அவர்களைக் கண்ணியமான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும்' எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக நடிகர் சூர்யாவும் தன் எக்ஸ் பக்கத்தில், 'கருப்பு திரைப்படத்துக்கு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முழு ஆதரவு தந்து, வெற்றிகரமாகத் திரையிட்டுவரும் என் அன்புக்குரிய திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள், வெளியீட்டுக்கு உறு

துணையாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விநியோகஸ்தர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

மேலும், திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைபவர்களுக்கு, உரிய முதலுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் மற்றவர்கள் அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்த அன்போடு வேண்டுகிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பார்த்திபன்

சினிமாவில் சிறுபான்மை மக்கள் - பார்த்திபன்!

'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' படங்களின் இயக்குநர் மீரா கதிரவனின் அடுத்த எதார்த்த படைப்பான 'ஹபீபி' படத்தின் ஆடியோ, ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.

கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம், வருகிற மே 28-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தத் திரைப்படம் தொடர்பான விழாவில் பேசிய இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், 'காசு சம்பாதிப்பதைவிட கலையை நேசித்து மீரா கதிரவன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் கேமராவுக்கு முன்னால் நடிகர்கள் நடித்தது போலவே தெரியவில்லை.

இயக்குநர் கஸ்தூரி ராஜா வீட்டில் எப்படி இயல்பாக இருப்பாரோ, அதேபோல இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார்' என்றவர், முதல்வர் விஜய் குறித்து, 'தனிமனித நம்பிக்கையால் சாதித்துக் காட்டியுள்ள நம் ஊர்ப் பிள்ளை முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள். 200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு, இன்று ஒரு அரசு ஊழியரைப் போல காலை முதல் மாலை வரை மக்களுக்காக அவர் உழைப்பது பிரமிப்பைத் தருகிறது.

சினிமாவில் 'சிறுபான்மை மக்கள்' என்றால் சின்னப் படங்களை எடுப்பவர்கள்தான். தியேட்டர்கள் கிடைக்காமல், படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் அவர்கள் சந்திக்கும் போராட்டங்கள் அதிகம்.

எனவே, முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசாங்கம், திரையரங்கு கிடைக்காமல் தவிக்கும் இதுபோன்ற நல்ல சின்ன படங்களுக்கு நிச்சயம் உதவ வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments