சென்னை ஐ.ஐ.டி. கோயிலில் ராம யந்திரம்
சென்னை ஐ.ஐ.டி. தொடங்கப்படுவதற்கு முன்பு அப்பகுதி குளங்களாலும், கோயில்களாலும் நிரம்பியிருந்தது.
சென்னை ஐ.ஐ.டி. தொடங்கப்படுவதற்கு முன்பு அப்பகுதி குளங்களாலும், கோயில்களாலும் நிரம்பியிருந்தது. இப்போதும் ஐ.ஐ.டி. வளாகத்தில் சில கோயில்கள் உள்ளன. இதில் தில்லி அவென்யூவில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில், ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் ஆதிபுரீஸ்வரர் லிங்கம், கைலாசநாதர் லிங்கம் என சிவன் சந்நிதிகள் மற்றும் துர்கா பீலி அம்மன் கோயிலும் உள்ளன. இவை அனைத்தும் 400 முதல் 600 ஆண்டுகள் பழைமையானவை.
ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பன்முக தத்துவஞானியும் அத்வைத வேதாந்தியுமான அப்பைய தீட்சிதர் பூஜை செய்து வந்துள்ளார். அதற்கான வரலாற்றுப் பதிவுகள் ஆளுநர் மாளிகையில் உள்ள ஒரு நாடி (பழைமையான ஆவணம்) பதிவில் இடம்பெற்றுள்ளது. இப்படி தற்போதைய சென்னை ஐ.ஐ.டி. வளாகம் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குவதற்கு முன்பு ஒரு தெய்வீக இடமாக சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறது.
ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீராமர் சந்நிதி தனியாக இருக்க, இங்கு 'ராம யந்திரத்தை' ஐ.ஐ.டி. நிர்வாகம் பிரதிஷ்டை செய்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த ராம யந்திரத்துக்கு பல நூற்றாண்டு வரலாறு உள்ளது.
இதன் பின்னனி வருமாறு காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் அருகே இருப்பது உபநிஷத் பிரம்மேந்திர மடம். 108 உபநிஷத்துகளுக்கு உரை எழுதியவரும், அத்வைத வேதாந்தம், 'ஸ்ரீ ராம தரங்கம்', 'ராம அஷ்டபதி' போன்றவைகளை இயற்றிய சந்நியாசியுமான ஸ்ரீராமச்சந்திரேந்திர சரஸ்வதி என்கிற ஸ்ரீ உபநிஷத் பிரம்மயோகியின் பெயரில் இந்த மடம் இருக்கிறது.
இந்த மடத்தில் ஸ்ரீசக்ர மஹா மேருவைப் போன்ற ராம யந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லைத் தேய்த்துப் பார்த்து ஆய்வு செய்தபோதுதான், இது சுமார் 1400 ஆண்டுகளுக்கு முந்தைய, அதாவது ஆறாம் நூற்றாண்டில், சாளக்கிராமக் கல்லில் செதுக்கப்பட்ட ராம யந்திரம் எனத் தெரியவந்தது. தமிழ் கிரந்த எழுத்துகளால் ராமருடைய முழு அவதாரம் இந்த ராம யந்திரத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வந்த நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கல் மாதிரியை அயோத்தியில் வைக்க முயற்சித்தனர். அப்போது ஐ.ஐ.டி. நிபுணர்கள் இந்த உபநிஷத் பிரம்மேந்திர மடத்து, ராம யந்திர கல்லை பெரிதாக 3டி மாடலில் எடுக்க முயற்சித்தினர். பல தாமரை இதழ்களும் பீஜாட்சரங்களும் இருந்தன. 3டி மாடலில் எடுக்க முடியவில்லை. பின்னர் 2டி மாதிரியில் எடுக்கப்பட்டு, அயோத்தியில் ராமர் கோயில் கருவறையில் வைக்கப்பட்டது. இதை குடியரசுத் தலைவரே திறந்து வைத்தார்.
பின்னர் ஐ.ஐ.டி. விஞ்ஞானிகளை காஞ்சிப் பெரியவர் அழைத்து, '80-80 என்ற அளவில் ராம யந்திரத்தை செய்ய முடியுமா?' எனக் கேட்க, அவர்கள் இதைச் சவாலுடன் செய்தனர்.
இது குறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடியிடம் கேட்டபோது, அவர் விளக்கினார்.
'காஞ்சிப் பெரியவர் கூறியவுடன், 'உங்கள் அருள் இருந்தால் அதைச் செய்வோம்' என்று நாங்கள் கூறினோம். 70 செ.மீ. ல 70 செ.மீ. ல 10 செ.மீ என்ற அளவில் பித்தளைக் கலவையில் செய்யப்பட்டது. இதற்கு 99.99999 சதவீதத் தூய்மை தேவைப்பட்டது. துல்லிய குறைபாடுகள் இன்றிச் செய்யவேண்டும். இரண்டு முறை தோல்வியடைந்து, மூன்றாவது முயற்சியில் வெற்றிகரமாக அமைந்தது.
அதன்பிறகு, ஒரு லேத் இயந்திரத்தில் 500 மணிநேரம் அதை இயக்கினோம். 0.12 மி.மீ. அளவுள்ள கருவியை நிமிடத்துக்கு 14,000 சுழற்சிகள் வேகத்தில் இயக்கினோம். 40 கோடி சுழற்சிகளுக்குப் பிறகு, அதன் முழு நீளத்தையும் நிறைவு செய்தோம். இது ஒரு துல்லியமான நகல். அப்படி உருவாக்கிய ராம யந்திரம் தான் 'பிராண பிரதிஷ்டை' செய்து சென்னை ஐ.ஐ.டி. ஸ்ரீ ஜலகண்டேஸ்வர சுவாமி கோயிலில் வைக்கப்பட்டது. இதைத் தான் பிரதமர் நரேந்திர மோடி வந்து தரிசித்தார். பிரதமர் ராம யந்திரம் குறித்த முழுவிவரங்களை அறிந்து வியப்புற்றார்.
இதை உருவாக்கிய சென்னை ஐ.ஐ.டி.யின் முயற்சி ஒரு மேம்பட்ட புதிய செயல்முறை.
8 நிலைகளைக் கொண்ட ஒரு செயல்முறை. 2டி (இரு பரிமாண) படத்தை 3டி(முப்பரிமாண) வடிவமாக மாற்றி, அங்கிருந்து அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டோம். இதன் மூலம் நாங்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டோம். இதன் மூலம் இரண்டு காப்புரிமைகள் கிடைத்தன.
'காஞ்சி, உபநிஷத் பிரம்மேந்திர மடத்தின் ராம யந்திரம் மாதிரி இப்போது உருவாக்க முடியுமா?' என இப்போதுள்ள கல்வெட்டாளர்களிடம் கேட்டால், 'இது போன்ற ஒரு கல் நமக்கு கிடைக்காது' என்கின்றனர். 1400 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் எப்படி இதுபோன்ற ஒரு கல்லைச் செதுக்கினார்கள்? என்பது புரியவில்லை. இதுதான் நமது இந்திய அறிவு அமைப்பு. இதுவே பாரதிய ஞான பரம்பரை' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.