கோலிவுட் ஸ்டூடியோ!
'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் பட அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
அஜித்துக்கு ஜோடியாகிறார் ஸ்ரீலீலா!
'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் பட அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
'டேர்டெவில்' எனத் தலைப்பிட்டிருக்கும் படத்தின் மூலம் அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிப்பாளராக உருவெடுக்கிறார். புதிய தயாரிப்பு நிறுவனத்துக்கு 'ப்ரேவ் ஹார்ட்' எனப் பெயரிட்டிருக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். நடிகர் பார்த்திபனும் படம் தொடர்பாக, ட்வீட் போட்டிருந்தார்.
Advertisement
Advertisement
படத்தின் பூஜை நடைபெற்றிருக்கிறது. கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். மலையாள நடிகர் உன்னி முகுந்தன், நடிகர்கள் பிரபு, பார்த்திபன், சுனில், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
வில்லியாக புது அனுபவம்
சுந்தர் சி. இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'மூக்குத்தி அம்மன் 2'. நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஊர்வசி, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்திருக்கின்றனர். 'விடாமுயற்சி' திரைப்படத்தைத் தொடர்ந்து இதிலும் மிரட்டும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரெஜினா.
'என் திரைப்பயணத்திலேயே முதல்முறையாக இந்த மாதிரியான ஒரு பெரிய கமர்ஷியல் படத்தில் வில்லியாக நடித்திருக்கிறேன். தொழில்நுட்ப ரீதியாகவும் எமோஷனல் ரீதியாகவும் ஒவ்வொரு தருணத்தையும் மிகவும் ரசித்துச் செய்தேன். உங்களுக்கும் அதே போன்றதொரு அனுபவம் கிடைக்கும். நான் வருகின்ற காட்சிகள், ஷாட்டுகளில் கிராபிக்ஸ் அதிகமாக இருக்கும். படத்தில் குறைந்தபட்சம் 3,000 சி.ஜி. ஷாட்கள் உள்ளன. கிராபிக்ஸýக்காக ஒரு பெரிய குழு கடந்த ஒரு வருடமாக உழைத்து வந்துள்ளது.
வரலாற்றுப் படங்கள் என்றாலே ஹெவி மேக்கப் மற்றும் ஆடைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், ஒரு நடிகையாக நான் அதை மிகவும் ரசித்துச் செய்கிறேன். மேக்கப் போட நேரம் எடுக்கும் என்றாலும், மனதளவில் அதை ஏற்றுக் கொண்டு செய்யத் தொடங்கிவிட்டால் அது கடினமாகத் தெரியாது. வில்லியாக நடித்திருப்பதும் முற்றிலும் புதிய அனுபவம். தினமும் என் மேக்கப்புக்கே 2 மணி நேரம் செலவாகும். குறிப்பாக, என் இண்ட்ரோ காட்சிக்கு தேன் மற்றும் பிஸ்தா பச்சை நிறத்திலான ஒரு பிசுபிசுப்பான திரவத்தைத் தலை முதல் கால் வரை என் மீது ஊற்றிவிட்டார்கள். அதைச் சமாளித்து நடித்ததே ஒரு தனி அனுபவம்தான்' என்றார் ரெஜினா.
'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்துக்காக நடிகை நயன்தாராவுக்கு 60 அடியில் கட்-அவுட்டை அவருடைய ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். அதுகுறித்துப் பேசிய ரெஜினா, 'ஆண் சூப்பர் ஸ்டார்களுக்கு மட்டுமே பிரமாண்டமான கட்-அவுட்கள் வைக்கப்பட்டுப் பார்த்திருக்கிறோம். ஆனால், நயன்தாராவுக்கு கட்-அவுட் வைக்கப்பட்ட பிறகுதான், ராதிகா மேமுக்கு 'தாய் கிழவி' படத்துக்காக கட்-அவுட் வைத்திருந்த விஷயம் எனக்குத் தெரியவந்தது. ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. வைத்திருக்கிறார்கள்' என்றார்.
தென்னிந்தியப் படங்களில் ஏன் நடிப்பதில்லை? - ராதிகா ஆப்தே பதில் !
தர்மராஜ் ஷெட்டி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே, தன்வி ஆஸ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வெப் சீரிஸ் 'அக்கா', பெண்கள் ஆளும் கற்பனை கேங்ஸ்டர் உலகை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ள நிலையில், இந்த வெப் சீரிஸ் புரொமோஷனுக்காகப் பேசியுள்ள ராதிகா ஆப்தேவிடம், '2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்திய திரைப்படங்களில் ஏன் நடிக்கவில்லை?' என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த அவர், ' எனது பார்வையில், வடஇந்திய நடிகைகள் வெள்ளையாக இருப்பதால்தான் தென்னிந்திய திரைப்படங்களில் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நான் அதிகம் வெள்ளையாக இல்லை. தென்னிந்தியப் படங்களில் நடிக்க தென்னிந்திய நடிகைகளையே தேர்வு செய்யலாமே? எதற்காக வடஇந்திய நடிகைகளைத் தேடிச் செல்கிறார்கள்? தென்னிந்திய நடிகைகள் அழகானவர்கள், திறமையானவர்கள். அந்தந்த மொழிகளையும் நன்றாக அறிந்தவர்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
வேறு மொழி நடிகைகளை நடிக்க வைத்து, அவர்களுக்குப் பதிலாக மற்றொருவரை டப்பிங் பேச வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதுபோன்ற நடைமுறைகளை நான் ஊக்குவிக்க விரும்பவில்லை. தென்னிந்திய மொழிகள் தெரியாததால், அந்த மொழிகளில் நடிப்பது எனக்குச் சவாலாக இருக்கிறது. வசனங்களைப் பேசுவது மட்டுமின்றி காட்சிகளுக்கு ஏற்ப இயல்பாக நடிப்பதற்கும் மொழி அறிவு அவசியம்' என்று பதில் அளித்திருக்கிறார்.
'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'வெற்றி செல்வன்', 'கபாலி' உள்ளிட்ட படங்களில் நடித்த ராதிகா ஆப்தே, கடைசியாக 2019-ஆம் ஆண்டு வெளியான 'சித்திரம் பேசுதடி 2' என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார்.
பொறுமை காக்க வேண்டும் - ஏ.ஆர்.ரஹ்மான் !
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்துள்ள இதிகாசப் படம் 'ராமாயணா'. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் அரிஜித் சிங் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள 'மங்கல் ரங்' பாடல் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. ராமர் - சீதை திருமணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு கவ்வாலி, சூஃபி இசையின் சாயல் இருப்பது எந்த விதத்தில் பொருத்தமாக இருக்கும் என்றும், ரஹ்மானின் 'குன் ஃபயா குன்' பாடலின் குரல் அமைப்பை இது நினைவுபடுத்துவதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்து வந்தனர்.
இதுகுறித்து ஏ.ஆர் ரஹ்மான் பேசுகையில், 'இசை குறித்த விமர்சனங்களுக்காக எனது தூக்கத்தை இழக்க நான் விரும்பவில்லை. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியதைப் போல, அனைவரையும் மகிழ்விக்க நினைத்தால் தலைவராக இருக்க முடியாது. ஒரு பாடலை நாங்கள் ஒரே நாளில் உருவாக்குவதில்லை. மாதக்கணக்கில் யோசித்தே உருவாக்குகிறோம். ஒரு பாடலின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து ரசிகர்கள் உடனே கருத்துத் தெரிவிக்காமல், முழுமையாக உணர்ந்துகொள்ள சிறிது பொறுமை காக்க வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார்.