கோலிவுட் ஸ்டூடியோ! | 4-10-2026
நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் இப்போது 'லஸ்ட் ஸ்டோரீஸ் 3' திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
4 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை!
நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் இப்போது 'லஸ்ட் ஸ்டோரீஸ் 3' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. தனது திரைப்பயணத்தில் எதிர்கொண்ட மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்றைக் குறித்து சமீபத்திய பேட்டியில் இவர் பகிர்ந்திருக்கிறார்.
'சினிமாவில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதைப் பற்றிப் பேசுவது சுலபம். ஆனால், அப்படி நான் நடித்த படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் கசிந்தபோது, என்னால் தொடர்ந்து 4 நாள்களுக்கு வீட்டை விட்டே வெளியே வரமுடியவில்லை. இது போன்ற பிரச்னைகள் சமூக வலை
Advertisement
Advertisement
தளங்களோடு நின்றுவிடுவதில்லை. மிக விரைவாக நமது வீட்டின் கதவு வரை வந்துவிடும். யாராவது தவறான எண்ணத்தோடு நமது வீட்டு வாசலில் வந்து நிற்கக்கூட வாய்ப்பு இருக்கிறது. அந்தக் காட்சி லீக்கானபோது, எனது ஸ்டைலிஸ்ட்டின் டிரைவர் அந்த விடியோவைப் பார்த்துவிட்டு, 'நீங்க உண்மையிலேயே அவர் வீட்டுக்குத்தான் செல்கிறீர்களா?' என்று கேட்டுக்கொண்டே இருந்தாராம்.
எனது வாட்ச்மேனும் அந்த விடியோவைப் பார்த்திருந்தார். அந்தச் சமயத்தில் நான் தனியாகத்தான் வசித்து வந்தேன். அதனால் பாதுகாப்பு குறித்து எனக்குப் பயம் ஏற்பட்டது. ஆனால் அவர், 'நாங்கள் உங்களைப் பார்த்துக் கொள்கிறோம்' என்று கூறி, எனக்கு ஆதரவாக நின்றார்கள்' எனப் பகிர்ந்திருக்கிறார்.
ஆஸ்கர் தேர்வில் அரசியல் - அனுராக் காஷ்யப் !
ஆஸ்கர் விருதின் 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' பிரிவுக்காக இந்தியாவின் அதிகாரபூர்வத் தேர்வாக மராத்தி படமான 'கோந்தல்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரை குறித்துப் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்த விமர்சனம் தற்போது மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தப் படம் குறித்து அனுராக் காஷ்யப், 'ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்தியா தொடர்ந்து முற்றிலும் தவறான படங்களையே தேர்வு செய்து வருகிறது. தகுதியான சிறந்த படங்களைத் தேர்வு செய்ய வாய்ப்பு இருந்தும், அதை நாமே கெடுத்துக் கொண்டோம். தேர்வுக் குழுவின் முடிவுகளில் அளவுக்கு அதிகமான அரசியலும் விழிப்புணர்வின்மையும் இருக்கின்றன.
தற்போது தேர்வாகியுள்ள 'கோந்தல்' படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் அதைப் பற்றி இப்போதே எதுவும் கருத்துச் சொல்ல முடியாது. ஆனால், ஆஸ்கருக்கு அனுப்பப்படும் படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விளம்பரங்களுக்காகப் பணத்தை வீணடிப்பது தேவையில்லாதது' எனக் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து 'கோந்தல்' இயக்குநர் சந்தோஷ், 'அனுராக் காஷ்யப் சார் மீதும் அவரது படைப்புகள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. கடந்த ஏப்ரல் மாதம் மும்பை விமானப் பயணத்தின்போது, 'கோந்தல்' படம் பற்றி அவரிடம் நேரில் எடுத்துரைத்தேன். அப்போதே அவர் இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை என்றும், கண்டிப்பாய்ப் பார்ப்பதாகவும் கூறினார். தயவுசெய்து எந்தவொரு முடிவுக்கும் வரும் முன், முதலில் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சியுங்கள்.
சினிமா பின்னணி எதுவுமில்லாத ஓர் அறிமுக இயக்குநராக, மராத்தி கலாசாரத்தை வைத்து இந்த த்ரில்லர் படத்தை உருவாக்கியிருக்கிறேன். இது திரையரங்குகளுக்காக உருவாக்கப்பட்ட படம். இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பு எங்களுக்கு நன்றாகவே தெரியும். கண்டிப்பாய் நாட்டின் பெருமையைக் காப்பாற்றுவோம்' எனத் தெரிவித்திருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் மீது பொறாமையாக இருக்கிறது - இயக்குநர் மணிரத்னம்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் செப்டம்பர் 25-இல் வெளியான 'டோரதி' படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. 'பாலின பாகுபாடு பார்க்கக் கூடாது' என்கிற கான்செப்ட்டில் உருவாகி உள்ள இந்தப் படத்துக்கு திரையுலகில் ஆதரவு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இயக்குநர் மணிரத்னம் பேசி வெளியான விடியோவில், 'கார்த்திக் சுப்புராஜ் மிக மிக விசேஷமான திறமைசாலி. நம்மிடம் பல இளம் நம்பிக்கையளிக்கும் இயக்குநர்கள் உள்ளனர். அவர்களில் கார்த்திக்தான் லீடராக இருப்பார் எனத் தோன்றுகிறது. இவரது 'டோரதி' திரைப்படம் ரொம்ப ஸ்பெஷல். இப்படத்தின் சினிமா மொழி மிக மிக நன்றாக, மிகவும் ஈர்க்கும் வகையில் உள்ளது.
உண்மையிலேயே எனக்கு இவர் மீது பொறாமையாக இருக்கிறது. சினிமா மொழியின் மீதான கட்டுப்பாடு, காட்சி அமைப்புகள் மீதான கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்பம் என அனைத்துமே மிக அற்புதமாக உள்ளது. இதனுடன் இளையராஜா சாரின் இசையும் சேரும்போது மிக மிக அற்புதமாக இருக்கிறது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒன்று. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ரசிகர்கள் கூட்டத்தில் சூர்யா!
சூர்யாவுக்கு 'கருப்பு', 'விஸ்வநாத் & சன்ஸ்' என இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன. அதோடு தீபாவளி வெளியீடாக மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 'சீன்' படமும் வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் சூர்யா பேசியவை இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தக் காணொலியில் அவர், 'அன்பை மட்டுமே விதைப்போம். ஒரு சோஷியல் மீடியாவில் ஒரு முட்டாள் ஒரு பதிவைப் போட்டான் என்பதற்காக நாம் பதிலளிக்கும்போதுதான் நாம் காயப்படுவோம். நாம் நாமாகவே இருப்போம், அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். அவர்களுக்குப் புரிய வைப்பதும், அவர்களை மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்வதும் கொஞ்சம் கஷ்டம்.
சில பேருக்குப் புரியும். ஆனால், பல பேருக்கு அது புரியாது. அதனால் நீண்ட நேரம் பேசி, உங்களுடைய எனர்ஜியை அதில் வேஸ்ட் பண்ணிக் கொள்ள வேண்டாம்.
உங்களுக்குப் பிடித்ததைத் தினம் தினம் செய்யுங்கள். இந்த உலகம் வேகமாக மாறிக்கொண்டு இருக்கிறது. உங்களுக்குப் பிடித்ததை நேர்மையாகச் செய்தால், நிச்சயமாக அதில் வெற்றி கிடைக்கும். உங்கள் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியும். சுற்றி இருப்பவர்களுக்குத் திரும்பத் திரும்ப நான் அன்பை மட்டுமே கொடுக்க விரும்புகிறேன்.' எனப் பேசியிருக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.