முகப்பு

காலத்தால் அழியாத சின்னங்கள்

கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஹிரேபெனக்கல் கிராமத்தில், காலத்தால் அழியாத வகையில் நினைவுச் சின்னங்கள் உள்ளன.

8 வினாடிகள் முன்பு
காலத்தால் அழியாத சின்னங்கள்
பகிர்:

கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஹிரேபெனக்கல் கிராமத்தில், காலத்தால் அழியாத வகையில் நினைவுச் சின்னங்கள் உள்ளன.

ஹம்பியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கிராமத்தில் புதிய கற்காலத்துக்கும், இரும்புக் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் (கி.மு. 800-200களில்) உருவாக்கப்பட்ட புதைக் குழிகள், நினைவுச் சின்னங்கள் உள்ளன.

தென் இந்தியாவில் கண்டறியப்பட்ட 2000 பெருங்கற்கால ஈமச்சின்னத் தளங்களில் இதுவே மிகப் பெரியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

பெரிய பாறைப் பலகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சுமார் நானூற்றுக்கும் அதிகமான பெருங்கற்காலக் கல்லறைகள், நினைவுச்சின்னங்கள் இங்குள்ளன. பல ஜன்னலுடன் கூடிய சிறு வீடுகளைப் போல் காட்சி அளிக்கின்றன. இதனால் இவை 'மொரியர் குடா' (குள்ளர்கள் வீடு) என்றே அழைக்கப்படுகிறது.

இங்குள்ள சுவர்களில், குகைகளில் சிவப்பு, பழுப்பு நிறக் கலவையைப் பயன்படுத்தி ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதில் மனிதர்கள், நடனங்கள், வேட்டையாடுதல், மான்கள், மிருகங்கள் எனப் பலவற்றைக் காணலாம்.

பத்து மீட்டர் பாறையின் மீது இயற்கையாக அமைந்த அரைக் கோள கல் முரசு உள்ளது. மரக்கட்டையால் இதனை தட்டினால் சத்தம் ஒரு கி.மீ. தூரத்துக்கு ஒலிக்கிறது என்கின்றனர். இது முன் அறிவிப்பு செய்யும் பலகையாக இருந்திருக்கக் கூடும் என்றும், இவை 2, 500ஆண்டுகள் பழைமையானவையாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இருந்தாலும் சரியாகக் கண்டறிய கார்பன் சோதனைகள் இதுவரை நடத்தப்படவில்லை.

1835-ஆம் ஆண்டில் இந்தத் தளம் கண்டுபிடிக்கப்பட்டாலும், சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியத் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டவுடன் தான் இந்த இடம் சரியான கவனம் பெற்றது.

ஹிரேபெனகல்லில் விளைநிலங்களுக்கு அப்பால் கரடுமுரடான மஞ்சள் நிற அம்புக் குறிகள் காணப்படுகின்றன. இவை துணிச்சலான பயணிகளை பாறைகளின் ஊடாக மலை உச்சிக்குச்செல்ல வழிகாட்டுகின்றன.

ஒன்றரை மணி நேரம் அபாயகரமான பாறைகளின் மீது ஏறிச்சென்றால், ஒரு பெரிய தட்டையான உச்சியை அடையலாம். அங்கு கிரானைட் கட்டமைப்புகளால் சூழப்பட்ட அல்லிப் பூக்களால் நிறைந்த குளம் உள்ளது.

இதற்கடுத்து நீள் வட்டப் பலகையைத் தாங்கும் மூன்று செங்குத்தான பலகைகள் 20 ஹெக்டர் அளவில் பரந்து காணப்படுகின்றன. இது தற்போது யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய அந்தஸ்து பெற்றுள்ளது. அதே சமயம் இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமும்கூட!

700 இடங்களில்...

கர்நாடகத்தில் ஐஹோல், பட்டக்கல், சித்ரதுர்கா உள்ளிட்ட இடங்களில் 700 ஆவணப்படுத்தப்பட்ட பெருங்கற்காலத் தளங்கள் உள்ளன. இவற்றில் செங்குத்தாக நிற்கும் பாறையில் வெட்டப்பட்ட குகைகள், சிட்ஸ்கள் (கற்களால் ஆன புதைக் குழிகள்) ஆகியன இடம் பெற்றுள்ளன. இவை அசப்பில் கல் தங்குமிடங்கள் போல் காட்சி தருவதால், இவற்றை 'டோலமென்கள்' என அழைக்கின்றனர்.

இங்கு கருகிய எலும்புகள், மண்பாண்டத் துண்டுகள் காணப்படுகின்றன. இவை புதைக் குழிகளாகவோ அல்லது நினைவிடமாகவோ இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

-ராஜி ராதா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.