எவரெஸ்ட்டில் ஏறுவோம்!
மலையேற்றம் என்பது உடலுக்கும், மனதுக்கும் பலனளிக்கும் சாகச விளையாட்டு.
மலையேற்றம் என்பது உடலுக்கும், மனதுக்கும் பலனளிக்கும் சாகச விளையாட்டு. பல ஆண்டுகளாக மலையேற்றப் பயிற்சியை மாணவர்களுக்குப் அளித்தவர், கோவில்பட்டியைச் சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ரெ.சுப்பா ராஜூ. அதுதவிர அவர் கிளைடர், பாராசூட், நீண்ட தூர சைக்கிள் பயணம், கடல் நீச்சல் போன்றவற்றிலும் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சியளித்துள்ளார். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் பலர் ராணுவம், காவல், தீயணைப்புத் துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம், குருவிகுளம் கோ. நா. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், தேசிய நாட்டு நலப் பணித்திட்ட அலுவலராகவும் செயல்பட்டு, பணி நிறைவு பெற்ற இவர், இந்திய ராணுவத்தில் நான்காண்டுகள் தன்னார்வச் சேவை புரிந்துள்ளார்.
இதழியல் உட்பட நான்கு படிப்புகளில் முதுகலைப் பட்டங்களும், தேசிய தடகளப் பயிற்றுநர் மற்றும் யோகாவில் பட்டயக் கல்வியும் முடித்துள்ள இவர், 63 வயதிலும் துடிப்புடன் செயல்பட்டு, இன்றும் இளைஞர்களுக்கு அரசு சார்பாகவும், தனியாகவும் மலையேற்றப் பயிற்சியை அளித்து வருகிறார்.
Advertisement
Advertisement
அண்மையில் தமிழ்நாடு அரசு சூழலியல் துறை மற்றும் வனத்துறை இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மலையேற்றப் பயிற்சியை நடத்தின. இதில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து 12 பேர், பல்வேறு கட்டப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மலையேற்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதில் சுப்பா ராஜூம் ஒருவர். இவர் நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி பகுதியில், கடல்மட்டத்தில் இருந்து 8629 அடி உயரமுள்ள கொலரிபெட்டா மலைச் சிகரத்தை ஏறி பலரது பாராட்டைப்பெற்றார்.
மலையேற்றப் பயிற்சியளிப்பது குறித்தும், அவரது தனிப்பட்ட சாதனைகள் குறித்தும் அவர் கூறியது:
'இயற்கையாகவே நம் பாரத தேசம் வடக்கு, வடகிழக்கு மற்றும் மேற்கில் மலைத்தொடர்கள் சூழ்ந்த பகுதியாகும். ராஜபாளையம் பகுதியில் வசித்து வந்ததால், காலை எழுந்தவுடன் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசித்து வந்ததுடன், என்றாவது ஒருநாள் அந்த மலைத்தொடரில் ஏறவேண்டும் என்ற எண்ணம் 12 வயதிலேயே என் மனதில் பதிந்து விட்டது. ஓரிரு ஆண்டுகளில் அந்த மலைத்தொடரின் அடிவாரம் வரை செல்ல வாய்ப்பு கிடைத்தது. பின்னர் கல்வி, பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல நேரிட்டது.
முதல் மலையேற்றம்
எனது 22- ஆவது வயதில், மதுரை தியாகராசர் கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படையினருடன் நீண்ட தூர சைக்கிள் மற்றும் மலையேற்றம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. மதுரையில் இருந்து சைக்கிள் மூலம் 85 கி.மீ. பயணம் செய்து, பெரியகுளம் சென்று, இரவு அரசுப் பள்ளியில் தங்கி, மறுநாள் காலை சோத்துப்பாறை வழியாகக் கொடைக்கானலுக்கு அடர்ந்த வனப் பகுதி வழியாக மலையேறிச் சென்றோம். நடுவில் வழி தவறி நீண்ட நெடுநேர மலையேற்றத்துக்குப் பின் மாலை 7 மணி அளவில் கொடைக்கானலை அடைந்தோம். எனது முதல் மலையேற்றப் பயணம் கடும் சவாலாகவும், பொறுப்பு மிக்கதாகவும், வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாகவும் இருந்தது.
பள்ளி மாணவர்களுக்கு மலையேற்றப் பயிற்சி
தேசிய நாட்டு நலப் பணித் திட்ட அலுவலராகவும் 25 ஆண்டுகள் செயல்பட்டதால் வழக்கமான இந்த அமைப்பின் பணியான குப்பைகளை அகற்றுதல், தெருத்தூய்மை, வாருகால் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகளில் இருந்து சற்று விலகி, மேல்நிலைக் கல்வி மாணவர்களுக்கு தொலைநோக்க சிந்தனையுடன் மலையேற்றப் பயிற்சி அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற சிந்தனை எனக்கு உதித்தது.
அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் மலையேற்றப் பயிற்சிக்குச் சாதகமாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்திருந்தது. முண்டந்துறை, பாபநாசம், செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், தேவதானம் மற்றும் ராஜபாளையம் பகுதி வழியாக மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் செல்வதால், வருடம் குறைந்தபட்சம் இரண்டு மலையேற்ற முகாம்கள் வீதம் சிறுமலை, குருமலை, சாய மலை, காரிசாத்தான் மலை உட்பட 46 மலையேற்றப் பயிற்சி முகாம்களை வனத்துறையினரின் ஒத்துழைப்புடன் நடத்தியுள்ளேன்.
தேசிய அளவிலான மலையேற்றம்
1988-ஆம் ஆண்டில் மலையேற்ற வீரர்களுக்கான அழைப்பு விடுத்திருந்த விளம்பரம் எதேச்சையாக என் கண்ணில் பட்டது. முறையாக விண்ணப்பித்து பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு தேர்வானேன். குறுகிய நாள்களில் பயிற்சிக் கட்டணமும் கட்ட வேண்டி இருந்தது. எனது கணையாழியை அடகு வைத்து, கையில் இருந்த சொற்பப் பணத்துடன் தில்லிக்கு ரயிலில் பயணமானேன்.
அங்குள்ள இளைஞர் நலத்துறை அலுவலகம் சென்றதும், மலையேற்றக் குழு முதல் நாளே அடிவார முகாம் சென்று விட்டதாகக் கூறினார்கள். மனம் தளராமல், அங்கிருந்து அரசுப் பேருந்தில் ஹரியானா, பஞ்சாப், சிம்லா வழியாக அடிவார முகாமை மறுநாள் அடைந்தேன்.
அங்கிருந்து பிரதான அடிவார முகாமுக்கு இரண்டு நாள்கள் தனிப் பேருந்தில் பயணமானோம். செல்லும் வழியில் நிலச்சரிவால் இடையில் உள்ள ராம்பூர் எனும் சிற்றூரில் தங்கி ஒரு வாரம் கழித்து பயணத்தைத் தொடர்ந்தோம். அடிவார முகாம் சென்றதும், குளிர் கடுமையாக வாட்டி எடுத்தது.
அங்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்த பின்பு, சங்கலகண்டா சிகரம் ஏறத் தேவையான பொருள்களுடன் பயணமானோம். ஏழு நாள்கள் மலையேற்றத்துக்குப் பின் சிகரத்தைச் சென்றடைந்தோம். இடையில் 5 கூடார முகாம்களில் தங்கிச் சென்றோம். பலவிதமான அனுபவங்களுடன் வெற்றிச் சான்றிதழை மத்திய அரசிடம் இருந்து பெற்று மகிழ்வுற்றோம்.
தனிப்பட்ட சாதனைகள்
கடந்த ஆண்டில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்தியாவின் உயரமான அணைக்கட்டான தேரி அணை மீது பாரா கிளைடிங் பயிற்சி, பாராசெய்லிங், கங்கை நதி நீரோட்டத்தில் ரிவர் ராப்டிங், இமயமலைத் தொடரில் மலையேற்றம் ஆகியவற்றில் பங்கு பெற்றேன். இந்த ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள உயரமான மீசை புலிமலை மலையேற்றம், சில வாரங்களுக்கு முன் அவலாஞ்சி - கொலரிபெட்டா மலையேற்றப் பயிற்சியை முடித்து வந்துள்ளேன்.
எவரெஸ்ட் ஏறுதல்
இயற்கையிலேயே மன தைரியமும், கடுமையான பயிற்சியும் இருந்தால்தான் எவரெஸ்ட்டில் ஏற முடியும். மேலும் நமது உடல் குளிரை ஏற்றுக்கொள்ள வேண்டும். உடல் எடை குறைவாக இருக்க வேண்டும். எவ்வித உடல் உபாதைகளும் இல்லாமல் ஒரு நல்ல தடகள வீரருக்கு இருக்கும் உடலமைப்பைப் பெற்றிருக்க வேண்டும். எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு மேற்கூறிய அனைத்துத் தகுதிகளும் இருந்தாலும், வலுவான பொருளாதாரப் பின்புலமும் அவசியம். எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.55 லட்சம் செலவாகும்.
இவற்றில் ஏதாவது ஒன்று குறைவாக இருந்தாலும் சாதனைக் கனவு கானல் நீராகிவிடும். எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு கடந்த வருடம், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனைக்கு அரசு பொருளாதார உதவி செய்தது. அதைப் போல் எம்போன்ற மலையேற்ற வீரர்களுக்கும் அரசு பொருளாதார உதவி செய்தால், நாங்களும் ஒருநாள் எவரெஸ்ட்டில் ஏறுவோம்!' என்றார் சுப்பா ராஜூ.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.