உயிர்களைக் காக்கும் 'ஹீரோ எலிகள்'
போர்க்களத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க ராணுவ வீரர்களும், நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்படுவது நமக்குத் தெரியும்.
போர்க்களத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க ராணுவ வீரர்களும், நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்படுவது நமக்குத் தெரியும். ஆனால், சாதாரணமாக வீட்டில் காணப்படும் எலிகளைப் பயிற்றுவித்து, அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாமல், கண்ணிவெடிகளைக் கண்டறிய முடியும் என்றால் நம்ப முடிகிறதா?
உலகின் பல பகுதிகளிலும், மண்ணுக்குள் புதைந்திருக்கும் கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து, மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்காக செயல்படுத்தப்படும் திட்டத்தின் பெயர் 'ஹீரோ எலிகள்.'
இளவரசி டயானா ஏற்படுத்திய தாக்கம்
Advertisement
Advertisement
இந்தத் திட்டத்தின் துவக்கம் பற்றித் தெரிந்துகொள்ள நாம் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பார்ட் வீட்ஜென்ஸை சந்திக்க வேண்டும். சிறுவயதிலிருந்தே எலிகளை வளர்ப்பதிலும், அவற்றுக்குப் பயிற்சி அளிப்பதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. எலிகளின் மோப்பத் திறனையும் கற்றுக்கொள்ளும் ஆற்றலையும் அவர் நன்கு அறிந்திருந்தார்.
1997-ஆம் ஆண்டு அங்கோலாவில், இங்கிலாந்து இளவரசி டயானா கண்ணிவெடிகள் நிறைந்த பகுதியில் நடந்து சென்று, அவற்றால் ஏற்படும் பேராபத்து குறித்து உலகின் கவனத்தை ஈர்த்தார். அந்தக் காட்சி வீட்ஜென்ஸின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. போருக்குப் பிறகும் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் கண்ணிவெடிகள் அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார்.
எலிகளின் இயல்பான மோப்பத் திறனை இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகப் பயன்படுத்த முடியுமா என்று சிந்தித்தார். ஆண்ட்வெர்ப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களின் உதவியுடன், ஆப்பிரிக்கப் பெரிய பை எலிகளைப் பயிற்றுவிக்கும் முயற்சியைத் தொடங்கினார். 1997 நவம்பரில் இந்தத் திட்டத்துக்கு வடிவம் கிடைத்தது. இதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் அடஞடஞ என்ற பெல்ஜியத்தின் மனிதநேயத் தன்னார்வ அமைப்பு.
2004 -இல் கிடைத்த வரலாற்றுச் சாதனை
இந்த எலிகளுக்குப் பயிற்சி அளிப்பது எளிதான காரியமல்ல. முதலில், வெடிபொருள்களில் உள்ள டிஎன்டி என்ற வேதிப்பொருளின் மணத்தை அடையாளம் காண அவற்றுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அந்த மணத்தை உணர்ந்ததும், குறிப்பிட்ட இடத்தில் நின்று மண்ணைக் கீறுவது அல்லது பயிற்சியாளருக்குச் சைகை செய்வது போன்ற செயல்களைச் செய்தால் உணவு வழங்கி ஊக்கப்படுத்தினர்.
பல கட்டப் பயிற்சிகளுக்குப் பிறகு, 2004 ஜூலையில் பதினொரு கண்ணிவெடி கண்டறியும் எலிகள் சர்வதேச கண்ணிவெடி நடவடிக்கைத் தரநிலைகளின்படி அங்கீகாரச் சோதனைகளில் வெற்றி பெற்றன. மொசாம்பிக்கின் கண்ணிவெடி அகற்றும் அமைப்பும், ஜெனீவா சர்வதேச மனிதநேய கண்ணிவெடி அகற்றும் மையமும் இந்தச் சோதனைகளில் பங்காற்றின. இது எலிகளை கண்ணிவெடி அகற்றும் பணிகளில் பயன்படுத்துவதற்கான முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
எலிகளால் கண்ணிவெடிகளை எப்படிக் கண்டுபிடிக்க முடிகிறது?
இந்த ஆப்பிரிக்க எலிகளின் மோப்பத் திறன் அபாரமானது. பயிற்சியின்போது கண்ணிவெடிகளில் காணப்படும் வெடிபொருளின் மணத்தை அவை அடையாளம் காணக் கற்றுக்கொள்கின்றன. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் அவற்றை முறையாக நகரச் செய்து, சந்தேகத்துக்குரிய இடங்களில் அவை அளிக்கும் சைகைகளைப் பயிற்சியாளர்கள் கவனிக்கிறார்கள்.
இந்த எலிகளின் உடல் எடை குறைவாக இருப்பதால், கண்ணிவெடிகளின் மீது நடக்கும்போது அவற்றை வெடிக்கச் செய்யும் அளவுக்குப் பொதுவாக அழுத்தம் ஏற்படாது. அதனால் மனிதர்கள் நேரடியாகச் சென்று சோதிப்பதைவிட, சில சூழல்களில் இவற்றைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கிறது.
எனினும், எலிகள் சுட்டிக்காட்டும் பகுதிகள் பின்னர் உலோகக் கண்டறியும் கருவிகள், இயந்திரங்கள் மற்றும் பயிற்சி பெற்ற கண்ணிவெடி அகற்றும் நிபுணர்களால் சோதிக்கப்பட்டு, பாதுகாப்பான அகற்றும் பணியை நிபுணர்கள் மேற்கொள்கிறார்கள்.
மொசாம்பிக்கில் மாறிய மக்களின் வாழ்க்கை
இந்தத் திட்டத்தின் வெற்றி மொசாம்பிக்கில் தெளிவாகத் தெரிந்தது. மொசாம்பிக்கின் காசா மாகாணத்தில் 2012-ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்தன. ஆறு மில்லியன் சதுர மீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு ஆய்வு செய்யப்பட்டு, 2,406 கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர், 2015-ஆம் ஆண்டு மொசாம்பிக் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.
கண்ணிவெடிகள் காரணமாக விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்த குடும்பங்கள், பாதுகாப்பற்ற பாதைகளால் பள்ளிக்குச் செல்ல அஞ்சிய குழந்தைகள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியாத கிராம மக்கள் எனப் பலரின் வாழ்க்கையை இந்தப் பணி பாதித்திருந்தது. நிலங்கள் பாதுகாப்பானவை என்பது உறுதியாகும்போது, அவை மீண்டும் விவசாயத்துக்கும் போக்குவரத்துக்கும் குடியிருப்புகளுக்கும் பயன்படுகின்றன.
ஒரு எலியின் வெற்றியில் ஒரு கிராமத்தின் நம்பிக்கை!
தனது எலிகள் முதன்முதலில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளைச் சரியாகக் கண்டறிந்த தருணம் பார்ட் வீட்ஜென்ஸூக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. செல்லப் பிராணிகளாகக் கருதப்படும் எலிகள், மனிதர்கள் உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ள வேண்டிய பணியில் உதவ முடியும் என்பது நிரூபணமானது.
கண்ணிவெடிகளைத் தாண்டியும் சேவை
இன்று அடஞடஞ அமைப்பு கண்ணிவெடிகளைக் கண்டறிவதுடன், காசநோயைக் கண்டறியவும் எலிகளின் மோப்பத் திறனைப் பயன்படுத்துகிறது. மேலும், கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு உதவ மோப்ப நாய்களையும் பயிற்றுவிக்கிறது. அதன் தற்போதைய திட்டங்கள் அங்கோலா, கம்போடியா, மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளில் செயல்படுகின்றன; பிற நாடுகளிலும் திட்டங்களின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழிவைச் சரிசெய்ய, மனிதர்களுடன் இணைந்து உழைக்கும் இந்தச் சிறிய உயிரினங்கள் உண்மையிலேயே பெரிய கதாநாயகர்கள்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.