சுப்புடு நூறு!
சங்கர் வெங்கட்ராமன் முன்முயற்சி எடுத்து, சுப்புடு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடாவிட்டால்,
சங்கர் வெங்கட்ராமன் முன்முயற்சி எடுத்து, சுப்புடு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடாவிட்டால், பலரும் அவரை மறந்திருப்பார்கள். சுப்புடு-100 விழாவின் முதல் நிகழ்ச்சியாக, எஸ்.எல். நரசிம்மன் தொகுத்திருந்த "சுப்புடு- குறும்படம்' சுமார் ஒரு மணி நேரத்துக்கு அந்த மனிதரை நம் முன் கொண்டு வந்து நிறுத்தியது.
வாலி தன் வார்த்தைகளால் வாழ்த்துப் பூக்களைச் சூட்டி, குறும்படத்தில் அவர் யோகாசனம் செய்வதிலிருந்து தொடங்கி, பேட்டியளிப்பது வரை, தொய்வில்லாமல் தொகுத்திருந்தார்கள். (செம்மங்குடியும் உண்டு) ஆங்காங்கே மிளகாய் கடித்த "சுர்ர்' என்ற உணர்வு தவிர்க்க முடியவில்லைதான். ஆனால், அதுதான் சுப்புடு.
வாழ்த்துரையில் தில்லி குமார் முதலில் பேசினார். 1967-இல் தில்லியிலிருந்து சென்னை வந்து கிருஷ்ண கான சபாவில் ஐந்து நாடகங்கள் போட வந்ததையும், சுப்புடு அவற்றின் இயக்குநராக இருந்து பாத்திரத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுத்ததையும் சொன்னார். சுப்புடுவின் நாடகப் பரிமாணத்தையும் தெரிந்துகொள்ள முடிந்தது.
Advertisement
Advertisement
கிருஷ்ணகான சபா செயலர் பிரபு தங்களது வீட்டுக்கு சுப்புடு வருகை தரும்போதெல்லாம் கூட இருந்து அவரைக் கவனித்ததை நினைவுகூர்ந்தார். ஒருமுறை சிதார் கலைஞர் விலாயத் கான், கிருஷ்ண கான சபா யக்ஞராமன் வீட்டுக்கு வந்திருந்த போது, அவர் எம்.டி. ராமநாதனையும் அங்கே அழைத்திருந்தாராம். அடிக்கொரு தடவை குடுமியைத் தட்டி மீண்டும் முடிந்துகொள்வதும், கணுக்கால் வரை வேட்டியும், மாறு கண்ணுமாக இருந்த எம்.டி.ஆரை லட்சியம் செய்யவே இல்லை விலாயத் கான். ஆனால், யக்ஞராமன் அவரை ஒரு கீர்த்தனை பாடும்படி கேட்டுக்கொண்டார். எம்.டி.ஆர். பாடியவுடன், விலாயத்தால் அவர் காலைத் தொட்டுக் கும்பிடுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
பிரமாதமாக நடனம் ஆடும் கலைஞர் ஒருவரைப் பற்றி, "உடல் சுற்றைக் குறைத்தால் உலகையே சுற்றி வரலாம்' என்று நாசுக்காகக் கிண்டல் செய்து எழுதினாராம் சுப்புடு.
ஹெச். ராமகிருஷ்ணனின் நாம சங்கீர்த்தனத்துக்கு அவர் ஹார்மோனியம் வாசித்திருக்கிறார் என்று தெரியும். ஆனால், அந்த ராகங்களில் அவர் வாசித்த வாசிப்பு எப்படி இருந்தது என்று ஒரு சிறிய துண்டை ஒலி பரப்பிய போதுதான் சுப்புடு இசையில் எந்த அளவு ஊறியிருந்தார் என்பது தெரிந்தது. சுப்புடு உடல் நலம் குன்றி தில்லியில் இருந்த போது, அதைக் கேள்விப்பட்ட அன்றைய முதல்வர் கலைஞர், அவருக்கு ஒரு தொகையை நல்லி குப்புசாமியிடம் கொடுத்து சேர்ப்பிக்கச் சொன்னாராம். நல்லி அதை சுப்புடுவிடம் சேர்ப்பித்தார். இதில் அவர் நிதி அளித்தது முக்கியமல்ல. அந்த நிதி தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்டது என்பதுதான் முக்கியம். அதுதான் கலைஞர் சுப்புடுவுக்குக் கொடுத்த கௌரவம் என்றார் ஹெச்.ராமகிருஷ்ணன்.
முன்னாள் சென்னை வானொலி இயக்குநர் விஜய திருவேங்கடம், சுப்புடுவின் எழுத்து நடையை சிலாகித்துவிட்டு, அவருடைய நடையை ஆராய்ச்சி செய்ய கல்லூரி-பல்கலைக் கழக மாணவர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கண்ணதாசனும் சுப்புடுவும் ஒரு சமயம் அடுத்தடுத்த அறைகளில் ஓர் ஓட்டலில் தங்கியிருந்த போது, கண்ணதாசன் சொன்னாராம்: "அவர் விமர்சன உலகில் கண்ணதாசன்; நான் கவிதை உலகில் சுப்புடு'.
நடனக் கலைஞர் ஸ்ரீநிதி சிதம்பரம் நடனக் கலைஞர்கள் சார்பாகப் புகழாரம் சூட்டினார். தங்கள் குடும்பமும் சுப்புடுவின் குடும்பமும் அவர்கள் ரங்கூனில் வசித்த காலத்திலிருந்தே பழக்கம் என்றார். தன் கணவர் கார்த்தியும், மாமனார் சிதம்பரமும் சுப்புடுவின் பரம ரசிகர்கள் என்றார்.
விழாவில், சுப்புடுவின் உதவியாளர் சொன்ன தகவல்களில் சில குபீர் சிரிப்பை வரவழைத்தன. ""எதிரே யாராவது கலைஞர்கள் தேடி வந்துவிட்டால், ஒன்றும் தெரியாத மாதிரி கையை உயர்த்தி நெற்றியில் வைத்துக்கொண்டு, "யார்ரா அது?' என்று கேட்டுத் தப்பித்துக்கொள்ளும் கலையை அவர்தான் வெளிப்படுத்தினார்'' என்றார்.
- சாருகேசி