FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதிய முறையில் JEE Main தேர்வு!

பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஐஐடி, என்ஐடி மற்றும் பல தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி தொடர விரும்பும் மாணவர்கள் எழுதும்  முக்கியமான நுழைவு தேர்வான JEE  Main தேர்வு வரும் ஆண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு முறை

பகிர்:


பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஐஐடி, என்ஐடி மற்றும் பல தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி தொடர விரும்பும் மாணவர்கள் எழுதும்  முக்கியமான நுழைவு தேர்வான JEE  Main தேர்வு வரும் ஆண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறவுள்ளது. இதன் மூலம் அகில இந்திய அளவில் பொறியியல் மற்றும் ஆர்க்கிடெக்சர் இளநிலை படிப்புகளை பயில மாணவர்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

2019-ஆம் ஆண்டு முதல் இத்தேர்வு 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டம் 2019-ஆம் ஆண்டு  ஜனவரி 6 முதல் 20 வரையிலும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 6 முதல் 20 வரையிலும் தேசிய தேர்வு முகமை(என்டிஏ) மூலமாக நடத்தப்படவுள்ளது. தேர்வு பாட திட்டத்தில் எந்த ஒரு பெரிய மாற்றமும் இல்லையென்றாலும் தேர்வு முறைகளில் சில மாற்றங்களை தேசிய தேர்வு முகமை புகுத்தியுள்ளது. இரண்டு கட்டங்களிலும் முதல் தாள் பி.இ/பி.டெக் படிப்புகளுக்கும், இரண்டாம் தாள் பி.ஆர்க்/பி.பிளானிங் படிப்புகளுக்கும் 
நடைபெறும்.

முதல் தாள் முழுவதும் கணினி வழி தேர்வாகும். இரண்டாம் தாளில் வரைகலை தேர்வைத் தவிர்த்து ஏனைய கேள்விகள் கணினி வழித் தேர்வாக நடத்தப்படும். கணினி வழி தேர்வில் அனைத்து கேள்விகளும் கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையில் கொள்குறி வினாவிடை  வடிவில் அமைந்திருக்கும்.

Advertisement

Advertisement

முதல் தாளில் பாடப்பிரிவிற்கு 30 கேள்விகள் வீதம் இயற்பியல், வேதியல் மற்றும் கணிதம் ஆகிய 3 பாடப்பிரிவுகளில் இருந்து மொத்தம் 90 கேள்விகள் கேட்கப்படும். இந்த கேள்விகள் அனைத்தும் ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத்திய மொழிகளில் (குஜராத், டாமன் & டையூ,  நாகர்  ஹவேலி பகுதி மாணவர்களுக்கு)  வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இரண்டாம் தாளில் கணிதத்தில் 30 கேள்விகள், திறனறிவு கேள்விகள் 50 மற்றும் வரைகலை கேள்விகள் 2 என மொத்தம் 82 கேள்விகள் கேட்கப்படும். வரைவதற்கு பேனா மற்றும் பேப்பர் ஆகியவை தேர்வு மையத்திலேயே வழங்கப்படும். வரைகலை கேள்வி ஒவ்வொன்றிற்கும் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும். கணினி வழித் தேர்வில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடைக்கு 4 மதிப்பெண்களும், தவறான விடைக்கு எதிர்மறையாக 1 மதிப்பெண் கழித்தும் கணக்கிடப்படும்.

புதிய மாற்றங்கள்

மாதிரித் தேர்வுகள்: மாணவர்கள், தேர்வுக்கு பயிற்சி பெறும் வகையில் ஜேஇஇ மாதிரித் தேர்வுகளுக்காக பதிவு செய்வதை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் என்டிஏ தொடங்கியுள்ளது. . இதன் மூலம் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு குறித்து சரியான புரிதல் கிடைக்கும்.

பொது சேவை மையங்கள்: தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்தவது, சமர்ப்பிப்பது தொடர்பான விசயங்களில் மாணவர்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 1.5 லட்சம் பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு : 2017,2018 ஆம் ஆண்டுகளில் 2 முடித்தவர்களும் 2019-ஆம் +2 தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கு வயது வரம்பு ஏதுமில்லை.

தேர்வு: JEE  Main தேர்வு 2019 ஜனவரி மற்றும் ஏப்ரல் என இருமுறை நடைபெற உள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் இருமுறையுமோ அல்லது ஏதாவது ஒரு முறையோ தேர்வு எழுதிக் கொள்ளலாம். இரு தேர்வுகளிலும் பங்கு பெற்ற மாணவர்களுக்கு இரண்டில் சிறந்த மதிப்பெண் பெற்ற தேர்வின் முடிவை வைத்து  தரவரிசை நிர்ணயம் செய்யப்படும். 

நெறிமுறைப்படுத்துதல்: பல்வேறு தினங்களில் தேர்வுகள் நடைபெறவுள்ளதால் ஒருங்கிணைந்த தரவரிசை பட்டியல் தயாரிக்க தேர்வுகளின் மதிப்பெண்களை நெறிமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே நிர்ணயிக்கப்பட்ட சூத்திரத்தின் அடிப்படையில் மாணவர்களின் சதவிகித மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தரவரிசை நிர்ணயம் செய்யப்படுகிறது. இரண்டாம் தாளைப் பொருத்த வரையில் ஒரே நாளில் தேர்வு நடத்தப்படுவதால் மதிப்பெண் நெறிமுறைப்படுத்தப்படுவதில்லை.

தேர்வு முடிகள்: ஜனவரி 6 முதல் 20 வரை நடைபெறவுள்ள முதல் கட்ட தேர்வின் முடிவுகள் ஜனவரி 31 அன்று வெளியிடப்படும். இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் மாதம் முடிவடைந்த பிறகு இதன் தேர்வு முடிகளுடன் தகுதியான கட்-ஆப் மதிப்பெண் விவரம் மே மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.

பொதுவான தரவரிசைப் பட்டியல்: ஏப்ரல் மாத 2-ஆம் கட்ட தேர்வு முடிவடைந்த பிறகு மே முதல் வாரத்தில் பொதுவான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலில் தேர்வாளர்களின் தேசிய அளவிலான மற்றும் வகுப்பு வாரியான தரவரிசை எண் குறிப்பிடப்படும். இந்த தரவரிசை எண் அடிப்படையிலேயே என்.ஐ.டி, ஐ.ஐ.டி மற்றும் ஜி.எப்.ஐ.டி ஆகிய கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்ட படிப்பில் சேர அனுமதி வழங்கப்படும்.

தரவரிசையைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்கள்: இயற்பியல், வேதியல் மற்றும் கணிதத்தில் உள்ள முக்கியமான தலைப்புகளில் தெளிவான அறிவு பெற்றிருப்பது.  அதிக அளவிலான பயிற்சி மேற்கொண்டிருப்பது. கொள்குறி வினாவிடை கேள்விகளுக்கு சரியான நேரத்தில் பதில் வழங்குவது. வியூகம் மற்றும் நேர ஆளுமை.  பொறுமை, அமைதி மற்றும் நம்பிக்கையுடன் தேர்வை எதிர்நோக்குவது.

மேற்சொன்னவற்றை எல்லாம் தெளிவாக கவனத்தில் கொண்டு முறையாக தேர்வை எதிர்கொண்டால் நுழைவு தேர்வில் சிறந்த தரவரிசை எண் பெற்று தேசிய அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களில் நுழைந்து விடலாம் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. எனவே மாணவர்களே புத்தியை தீட்டிக்கொள்ளுங்கள். பரீட்சைக்கு நேரமாச்சு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments