FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பின்லாந்தில் மகிழ்ச்சிக்கு பின்னடைவு இல்லை

ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் அமைப்புடன் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து, 2026-ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலை வெளியிட்டது.

பகிர்:

ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் அமைப்புடன் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து, 2026-ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. இதில் தொடர்ந்து 9-ஆவது ஆண்டாக பின்லாந்து நாடு முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. தனிநபர் சராசரி உற்பத்தி, சுதந்திரம், ஆரோக்கியமான ஆயுள்காலம், ஊழலற்ற நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பின்லாந்து மகிழ்ச்சிகரமான நாடாக முதலிடத்தில் இருக்கிறது.

'பின்லாந்தில் அப்படி என்னதான் இருக்கிறது? அந்த நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன?' என்று, நான்கு ஆண்டுகளாக அந்த நாட்டில் குடும்பத்துடன் வசித்துவரும் சென்னையைச் சேர்ந்த கவிதா சுவாமிநாதனிடம் கேட்டபோது, அவர் கூறியது:

'பின்லாந்து நாட்டில் ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வே கிடையாது. பெரிய நிறுவனத்தின் சி.இ.ஓ.வின் குழந்தைகளும், துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகளும் ஒரே பள்ளிக்குத்தான் செல்வார்கள். பெரும்பாலானவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அரசு மானியம் வழங்குவதால், மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. வேலைக்கேற்ற ஊதியம், அதற்கேற்றவாறு வருமான வரி என்பதால், வருமானத்தின் அடிப்படையில் பெரிய வித்தியாசம் இல்லை.

Advertisement

Advertisement

திருமணம், விவாகரத்து, மறுமணம், லிவிங் டுகெதர் என எல்லாமும் இருக்கிறது. குழந்தை பெற்ற பெண்ணுக்குக் கிடைக்கும் ஐந்து மாத விடுமுறையானது அந்தப் பெண்ணின் கணவருக்கும் அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகள் குறைவு. அரசு மருத்துவமனைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதால், மக்கள் அங்குதான் செல்கிறார்கள். பிரசவமும் இலவசம்தான். சிறப்பு அறைகள் வேண்டுவோருக்கு மட்டும் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிறந்த குழந்தைக்குத் தடுப்பூசிகள், பரிசோதனைகள் இலவசம்.

எனது மூத்த மகள் ஸாதிகா, நான்காவது படிக்கிறாள். இரண்டாவது குழந்தை கேசவ், பின்லாந்தில்தான் பிறந்தான். இந்த நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு குழந்தை பராமரிப்புத் தொகையாக மாதம்தோறும் 300 யூரோ என மூன்றாண்டுகளுக்குக் கொடுக்கப்படுகிறது.

'மறுநாள் என்ன உணவு வழங்கப்படும்?' என்கிற மெனுவை முதல் நாள் மாலையே பெற்றோர்களுக்கு அனுப்பிவிடுகிறார்கள். சத்தான உணவு இலவசம்தான். பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஃபின்லாந்து அரசு மாதம் நூறு யூரோ ஊக்கத்தொகை வழங்குகிறது.

பணி நிமித்தம் இங்கு வந்து குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டவரின் மனைவிக்கு ஃபின்னிஷ் மொழியை இலவசமாக அரசே கற்றுத் தருவதுடன், அதற்கு உதவித்தொகையும் வழங்குகிறது. ஃபின்னிஷ் மொழி தெரியாதவர்களுக்கு இங்கு வேலை கிடைக்காது. அந்த மொழி தெரியாவிட்டாலும் பிற நாட்டவர்கள் இங்கு ஏதேனும் வணிகம் செய்வதற்குத் தடையில்லை. இலங்கையிலிருந்து இங்கு வந்து பல்வேறு வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் உள்ளனர்.

பள்ளிகளில் கைவேலைகள், குரோஷே நெய்தல், ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வது எனப் பல்வேறு பயிற்சிகளும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. குளிர், மழை, பனிப்பொழிவு என அனைத்து விதமான சீதோஷ்ண நிலைகளுக்கும் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் குழந்தைகளைப் பழக்கு

கிறார்கள்.

கற்பித்தலின் ஓர்அங்கமாக, வனத்தின் வரைபடத்தையும், திசைகாட்டும் கருவியையும் ஒவ்வொரு குழந்தையின் கையிலும் கொடுக்கிறார்கள். இவற்றை உபயோகித்து குழந்தைகள் தனியாக நடந்து வழியைக் கண்டறிந்து தாங்கள் சேர வேண்டிய இடத்தை அடையும்போது, அவர்கள் பயத்தையும் வெல்கிறார்கள். அகதிகளாக வந்து இங்கு தஞ்சமடைபவர்களுக்கும், அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரையில் பின்லாந்து அரசு உதவித்தொகை வழங்குகிறது.

தேர்தல் பிரசாரங்களில் எவரும் தரம் தாழ்ந்து பேசுவதில்லை. ஆட்சியாளர்கள் மாறினாலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் தொடர்கின்றன. முக்கியமான நாள்களில் அனைத்து இடங்களிலும் தேசியக் கொடிகள் ஏற்றப்படுகின்றன.' என்றார்.

பிரபல எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம்:

'பின்லாந்து சாலைகள் படுசுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன. வாகன ஓட்டிகள் சிக்னல்களை மதிக்கிறார்கள். சிக்னல் இல்லாத இடங்கள் என்றால் பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கு முன்னுரிமை அளித்து, தங்கள் வாகனங்களை சற்றுத் தொலைவிலேயே நிறுத்திவிடுகிறார்கள். பொது இடங்களிலும்கூட சுத்தம் பேணப்படுகிறது. கடற்கரைகளில் அலைகளோ, ஆழமோ இல்லை. பூங்காக்களைப் பராமரிக்கும் பணியை ரோபோக்கள் மேற்கொள்கின்றன.

இயற்கைமணல் திட்டுகள் பாதுகாக்கப்படுகின்றன. நூலகங்களில் கணினி மூலமாகவே நூல்களை எடுக்கவும், திருப்பிக் கொடுக்கவும் முடியும். பழங்காலப் பொருள்களை பிரமாண்டமான பல அடுக்குகள் கொண்ட அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கிறார்கள்.

ஃபின்னிஷ் மொழிக்கு எழுத்துரு கிடையாது. பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள இந்த மொழியை எழுதுவதற்கு ஆங்கில அட்சரங்களை உபயோகிக்கிறார்கள். மக்கள் யாரிடமும் அநாவசியமாகப் பேசுவதில்லை. ஃபின்னிஷ் மொழியில் வணக்கத்தை 'மொய்' என்பார்கள். சைக்கிள், கிட்ஸ்கூட்டி போன்றவற்றில் எங்கு வேண்டுமானாலும் குழந்தைகள் தனியே சென்று வருகிறார்கள். குழந்தைகளைச் சீண்டுபவர்களுக்குக் கடும் தண்டனையும் விதிக்கப்படுகிறது.

கார் வைத்திருந்தாலும்கூட இங்குள்ளோர் சைக்கிளை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். வாடகைக்குக் கிடைக்கும் சைக்கிள்கள், கிட்ஸ்கூட்டிகளுக்கு மொபைல் ஆஃப் மூலம் பணம் செலுத்தி, அவற்றை எடுத்துச்செல்லமுடியும். இயன்றவரை அதிக அளவு நடப்பதால், அவர்கள் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்.' என்றார்.

-ஜி.மீனாட்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments