தென்னிந்தியாவிலிருந்து முதல் 'அழகி'
'அழகிப் போட்டிக்காக நான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாராகி வந்துள்ளேன்.
'அழகிப் போட்டிக்காக நான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாராகி வந்துள்ளேன். இந்தக் கிரீடத்தை எனது மாநிலமான கேரளத்துக்குக் கொண்டு வருவதிலும், எனது சொந்த ஊரை உலகுக்கு அறிமுகப்படுத்துவதிலும், அதை 'மிஸ் யுனிவர்ஸ்' மேடைக்குக் கொண்டு செல்வதிலும் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்' என்கிறார் கேரளத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயதான கஸியா லிஸ் மெஜோ.
இவர் அண்மையில் ஜெய்ப்பூரில் ஜீ ஸ்டூடியோஸில் நடைபெற்ற பிரம்மாண்டமான இறுதிப் போட்டியில், 52 போட்டியாளர்களைத் தோற்கடித்து, 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026' ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென்னிந்தியாவிலிருந்து 'அழகி' பட்டம் பெற்றிருக்கும் முதல் அழகியான கஸியா, நவம்பர் மாதம் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெறும் 75-ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.
பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ள கஸியா லிஸ் மெஜோ, கேரளத்தின் மாவேலிக்கராவைச் சேர்ந்த சட்டம் படிக்கும் மாணவி. இவர் நடிகையும்கூட.
Advertisement
Advertisement
17 -ஆவது வயதில் 'மிஸ் டீன் திவா 2024' பட்டத்தை வென்ற கஸியா, பின்னர் 'மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025' போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் மிஸ் யுனிவர்ஸ் கேரளா 2026 பட்டத்தை வென்று, மிக இளம் வயதில் மாநிலப் பட்டத்தை வென்றவரானார். 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா' பட்டத்தை வென்ற முதல் கேரள அழகி கஸியா லிஸ் மெஜோதான். அவர் சொல்வதாவது :
'நான் பிறந்தது கேரளத்தில் என்றாலும், படித்தது வளர்ந்தது வளைகுடா நாடான அபுதாபியில்தான். எமிரேட்ஸ் நேஷனல் பள்ளி, செயின்ட் ஜோசப் பள்ளி, அபுதாபி இந்தியன் பள்ளிகளில் படித்தேன். தற்போது சட்டம் படித்துக்கொண்டே மாடலாகவும் பணியாற்றி வருகிறேன். அழகிப் போட்டிகள் மட்டுமே எனது பிடித்த விஷயம் அல்ல.
12 ஆண்டுகளாக பாரம்பரிய நடனத்திலும் பயிற்சி பெற்று வருகிறேன். நன்றாகப் பாடுவேன். டிரம்ஸ், வயலினை அநாயசமாக இசைப்பேன். மேடைப் பேச்சு, நடிப்பு என்னைக் கவர்ந்த இரண்டு துறைகள். 'ஷைலாக்' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானேன்.
இந்திய அழகிப் போட்டி உலகின் மிகப்பெரிய ஆளுமைகளை நடுவராகக் கொண்டு நடத்தப்பட்டது. இதன் இறுதிப் போட்டியில் நான் வெற்றி பெற்றுள்ளேன். முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென் நடுவர் குழுவுக்குத் தலைமை தாங்கினார். முன்னாள் 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா' வெற்றியாளர்களான ஊர்வசி ரவுத்தேலா, செலினா ஜெட்லி ஆகியோரும் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
கடந்த ஆண்டு, மணிகா விஸ்வகர்மா 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா' பட்டத்தை வென்று, சர்வதேசப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த ஆண்டு, புதிய வெற்றியாளர்களுக்கு மகுடம் சூட்டுவதற்காக தேசிய அளவிலான இறுதிப் போட்டிக்கு அவர் வருகை தந்தார். இப்போது மிக முக்கியமான போட்டி காத்திருக்கிறது. நவம்பர் மாதம் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெறவுள்ள 75-வது 'மிஸ் யுனிவர்ஸ்' போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த நான் செல்கிறேன்.
ஒருவர் எதிர்கொள்ளும் மிகக் கடினமான போராட்டம் எப்போதும் தனக்குள்ளேயேதான் நிகழ்கிறது என்று நான் நம்புகிறேன். அதாவது, நாம் நினைப்பதை விடவும் அதிக மதிப்புடையவர்கள் என்பதை நம்புவதே அந்தப் போராட்டம். 19 வயதிலேயே 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா' போன்ற ஒரு பெரிய மேடையில் நிற்பதற்கு மிகுந்த துணிச்சலும் மன உறுதியும் தேவைப்பட்டன. அந்தச் சவாலை நான் வெற்றிகரமாகக் கடந்து, இப்போது வெற்றியாளருக்கான மகுடத்துடன் இங்கே நிற்கிறேன்' என்கிறார் கஸியா.
- சுதந்திரன்
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இளம் தாய்
போர்ட்டோ ரிக்கோவில் நடக்க இருக்கும் இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு, அதன் ஆளுநர் 90 லட்சம் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி இருக்கிறார்.
இதையொட்டி அமெரிக்காவில் நடைபெற்ற அழகிப் போட்டியில், மிஸ் வர்ஜீனியாவாகத் திகழ்ந்த ஜஸ்டஸ் கெல்லி, நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டார். இவர் இரு குழந்தைகளுக்கான வளர்ப்புத் தாய். மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு ஒரு தாய் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் தடவை. இவருக்கு வயது 31. இவர் குழந்தை எழுத்தாளரும்கூட.
2023-ஆம் ஆண்டு, இந்த அழகிப் போட்டியை நடத்தும் குழுவினர், 'மணமானவர்களும், தாய்மார்களும் இதில் கலந்துகொள்ளலாம்' என்று தங்கள் விதியைத் திருத்தி அறிவித்தனர். 2024-ஆம் ஆண்டு, '18 வயதுக்கு மேற்பட்ட எந்தப் பெண்மணியும் இதில் கலந்துகொள்ளலாம்' என்றும் மேலும் திருத்தம் செய்யப்பட்டது. முந்தைய விதிகளின் படி 28 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ள முடியாது.
அமெரிக்காவை பிரதிநிதித்துவம் செய்யும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 51 அழகிகள் கலந்துகொண்டனர். இறுதியில் ஐந்து பேரிடம் மட்டும் கேள்வி கேட்கப்பட்டது. அதில் கெல்லியிடம், '75-ஆவது வருடத்தில் நீங்கள் மிஸ் யுனிவர்ஸாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இன்றைய அமெரிக்கப் பெண்மணிகளைப் பற்றி நீங்கள் என்ன கூறுவீர்கள்?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு கெல்லி, 'இன்று இதோ இந்த இரவில் நாம் மிஸ் யுனிவர்ஸின் 75-ஆவது ஆண்டுவிழாவைக்கொண்டாடுகிறோம். அத்துடன் ஒரு வரலாற்றைப் படைக்கப் போகிறோம். எனக்கு வயது 31. எனது கல்லூரிக் காதலனை நான் மணந்து ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன. இரண்டு குழந்தைகளின் வளர்ப்புத் தாயாக மனமார நான் விளங்குகிறேன். இந்த மேடையில் நான் நானாக இருக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் தழுவிக் கொண்டு நிற்கிறேன்' என்றார்.
சாதாரண உடையை அணிந்துகொண்டு அவர் மேடையில் நடந்தபோது நீதிபதிகள், 'அட, நீங்கள் பிரமிக்க வைக்கிறீர்களே!' என்று உடனடி விமர்சனம் செய்தனர்.
சிறந்த அழகியைத் தேர்ந்தெடுக்க பார்வையாளர்களின் ஓட்டுகளும் தேவை. இதற்கான இணையதளத்தில் விசிறிகள் 12 நிமிடங்களுக்குள் தங்கள் தேர்வைச் செய்து, ஓட்டளிக்க வேண்டும். இதில் அவர் வெற்றி பெற்று, புதிய வரலாற்றைப் படைத்தார்.
இறுதிப் போட்டி யாரை மிஸ் யுனிவர்ஸ் ஆகத் தேர்ந்தெடுக்கப் போகிறது என்பது நவம்பர் 24-ஆம் தேதி தெரியவரும்.
- ச. நாகராஜன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.