முத்துக் கதை: ஹேப்பி... ஹேப்பி கிறிஸ்துமஸ்...
சேரன் மாநகர் ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை பிரான்சிஸ் அடிகளார், ஜேம்ஸை அழைத்து இந்த வருட கிறிஸ்துமஸ் கேரல் ரவுண்டின்போது, "நீ தான் கிறிஸ்துமஸ்
சேரன் மாநகர் ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை பிரான்சிஸ் அடிகளார், ஜேம்ஸை அழைத்து இந்த வருட கிறிஸ்துமஸ் கேரல் ரவுண்டின்போது, "நீ தான் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடம் அணிய வேண்டும்' என்று சொன்னபோது அதை அவனால் தட்ட முடியவில்லை. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிய ஒத்துக்கொண்டான். என்றாலும் அவனால் உற்சாகமாக உள்ளுக்குள் மகிழ முடியவில்லை.
சிறுவர்களை மட்டுமே வைத்து நடத்தப்படும் கேரல் ரவுண்டில் இப்போது கிறிஸ்துமஸ் தாத்தாவாக ஜேம்ஸ். சிறுவர் சிறுமியர் புடை சூழ தொப்பையை ஆட்டிக்கொண்டு தள்ளாடியபடியே பரிசுப்பொருட்களோடு செல்ல சிறுவர் சிறுமியர் கீதங்களை இசைத்தபடியே நடந்து வந்தார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் இருந்த ஜேம்ஸ்க்கு இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது என்றாலும், வேண்டியவர் வேண்டாதவர் என பாகுபாடு பார்க்காமல் அனைவரின் வீடுகளுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா செல்ல வேண்டும். இது பங்கு குருவானவரின் அன்புக் கட்டளை என்பதால் உள்ளுக்குள் லேசான நெருடல்.
ஒவ்வொரு வீடாகச் சென்ற கிறிஸ்துமஸ் தாத்தாவின் கால்கள் ஜேம்ஸின் சித்தப்பா வீட்டின் முன் வந்தபோது வீட்டின் உள்ளே நுழையக் கூச்சப்பட்டன. சித்தப்பா பிள்ளைகளை கோபத்தில் அடித்ததால் சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை ஆகி, ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளாமல் பகைமை பாராட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ஜேம்ஸ் கூச்சப்படாமல் சித்தப்பாவின் வீட்டுக்குள் நுழைந்து தன் தங்கை தம்பிகளை கொஞ்சினான். சித்தப்பாவின் அருகே சென்று, ""என்னை மன்னியுங்கள் சித்தப்பா!'' என்றான். ""மன்னித்துவிட்டேன்'' என அவன் சித்தப்பா சொல்ல மனதுக்குள் இருந்த பெரிய பாரத்தை இறக்கி வைத்ததாக உணர்ந்தான். ரொம்பவே மகிழ்ந்தான் ஜேம்ஸ்! கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் இப்போது அவனை புது ஜேம்ஸ்ஸாக மாற்றிவிட்டது! அனைவரிடமும் சமாதானமாக இருக்கவே நினைத்தான்.
மறுநாள் காலை சித்தப்பா தனது மனைவியோடும் பிள்ளைகளோடும் அண்ணன் வீட்டிற்கு வந்தார் இனிப்புகளோடு. பேசாமல் இருந்த இருவரும் பேசிக் கொண்டார்கள். ஜேம்ஸின் தம்பி தங்கைகளும் சித்தப்பாவின் பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ், மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ் என உரக்க பாடி மகிழ அதைக் கேட்ட ஜேம்ஸ் ரொம்ப, ரொம்பவே மகிழ்ந்து போனான்.