இளம் படைப்பாளிகளை இனங்கண்டவர்
குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் குழந்தைக் கவிஞர், எழுத்தாளர் அழ. வள்ளியப்பா.
குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் குழந்தைக் கவிஞர், எழுத்தாளர் அழ. வள்ளியப்பா. அவருடைய 'சிரிக்கும் பூக்கள்', 'மலரும் உள்ளம்', 'பாலர் பாடல்கள்' ஆகிய நூல்கள் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
அழ. வள்ளியப்பா 1922- ஆம் ஆண்டு நவம்பர் 7- ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம், இராயவரத்தில் அழகப்பச் செட்டியார் - உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
Advertisement
Advertisement
அங்குள்ள காந்தி பாடசாலையில் 5- ஆம் வகுப்பு வரையிலும், இராமச்சந்திரபுரத்தில் உள்ள ஸ்ரீ பூமீஸ்வரஸ்வாமி உயர்நிலைப் பள்ளியில் இறுதிவகுப்பு வரையும் கல்வி பயின்றார்.
'பாலர் மலர்' என்ற சிறுவர் இதழை 'தமிழ் நிலையம்' 1944 முதல் 1951 வரை 7 ஆண்டுகள் நடத்தியது. அழ.வள்ளியப்பாவின் மேற்பார்வையில் நடந்த இந்த இதழில் கட்டுரை, கவிதைகள் எழுதினார்.
குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அழ. வள்ளியப்பா, 1950- ஆம் ஆண்டு குழந்தை எழுத்தாளர் சங்கத்தைத் தொடங்கினார். அச்சங்கத்தின் கூட்டம் 'பழனியப்பா பிரதர்ஸ்' பழனியப்பா இல்லத்தில் நடைபெற்றது. தலைவர் வை.கோவிந்தன்.
'கோகுலம்' குழந்தைகள் இதழின் கெளரவ ஆசிரியராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேரவையின் ஆயுள்கால உறுப்பினராகவும் இருந்தார். அப்போது குழந்தை இலக்கியத்தைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அழ. வள்ளியப்பா மீது பேரன்பு கொண்ட 'டிங்டாங்' குழந்தைகள் இதழின் ஆசிரியர் பி. வெங்கட்ராமன் மேற்கொண்ட முயற்சியால், கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மார்பளவுச் சிலை அவர் படித்த அண்ணல் காந்தி பள்ளியில் நிறுவப்பட்டது.
இளம் எழுத்தாளர்கள் பலரை 'பாலர் மலர்' இதழ் மூலம் அறிமுகப்படுத்தியதோடு, 'பாலர் கதைகள்', 'நிமிஷக் கதைகள்' என்னும் தொகுப்பையும் அழ. வள்ளியப்பா 'தமிழ் நிலையம்' மூலம் வெளியிட்டார்.
பாலர் மலருக்குப் பிறகு அரையணா விலையில் வெளிவந்த 'டமாரம்', காலணா விலையில் வெளிவந்த 'சங்கு' பத்திரிகைகளும் அழ.வள்ளியப்பாவின் மேற்பார்வையில்தான் வெளியாயின.
வை.கோவிந்தன் நடத்திய அணில், பாப்பா இதழ்களிலும், அ.கு.அரு.அருணாசலம் வெளியிட்ட பாப்பா மலர் இதழிலும், கவிஞர் பூவண்ணனை ஆசிரியராகக் கொண்ட கரும்பு என்னும் இதழிலும் அழ.வள்ளியப்பா எழுதியுள்ளார்.
தமிழ்வாணனை ஆசிரியராகக் கொண்ட அணில் வார இதழ்தான் குழந்தைக் கவிஞர் எனும் சிறப்புப்பெயரை அழ.வள்ளியப்பாவுக்குச் சூட்டியது.