திருப்புகழை பாடப் பாட...
வாக்குக்கு அருணகிரி என்பது பழைய மொழி, ஆனால் இது ஒரு பொய்யாமொழி. அவர் அருளிய திருப்புகழ்தனைப் பாடி நம்மை மெய்மறக்கச் செய்பவர் சுந்தரவல்லி. திருப்புகழ் பாடல்களைக் கொண்டே ஒரு முழுக் கச்சேரி செய்ய வல்லவர்
வாக்குக்கு அருணகிரி என்பது பழைய மொழி, ஆனால் இது ஒரு பொய்யாமொழி. அவர் அருளிய திருப்புகழ்தனைப் பாடி நம்மை மெய்மறக்கச் செய்பவர் சுந்தரவல்லி. திருப்புகழ் பாடல்களைக் கொண்டே ஒரு முழுக் கச்சேரி செய்ய வல்லவர். தனது கணவர் கிருஷ்ணனுடன் இணைந்து பல திருப்புகழ் விளக்கக் கூட்டங்களும் நிகழ்த்தியுள்ளார். இனி அவருடன்...
""திருப்புகழ் மீது அன்றும் இன்றும் அதே பற்றுடன் தான் இருக்கிறேன். திருப்புகழ் ஆர்வம் என்பது எங்கள் வீட்டிலே உருவானதுதான். திருவல்லிக்கேணியில் எங்கள் வீட்டில் பாட்டு சதா ஒலித்துக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் பஜனை நடப்பது உறுதி.
எனது பாட்டனார் டி. வி. சீதாராம பாகவதர் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆன பேர்வழி. எங்களுக்குப் பாடலின் ஒரு வரியை சொல்லிக் கொடுத்து உடனே பாட வைப்பார். எனது பாட்டனார் திருப்புகழ் பாடல்களை வெளி உலகிற்குக் கொண்டு வந்த வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளிடம் பயிலும் பாக்கியம் பெற்றவர். சங்கீதத்திலும் எனது பாட்டனாருக்கு நல்ல பாண்டித்தியம் உண்டு. ஒரு முறை பூச்சி ஸ்ரீனிவாஸ அய்யங்கார், எனது பாட்டனார் பாடுவதில் லயித்து, திண்ணையில் அமர்ந்து கேட்டு பாராட்டியிருக்கிறார். இத்தனைக்கும் எனது தாத்தா கேள்வி ஞானத்தினால்தான் எல்லாவற்றையும் வளர்த்துக் கொண்டவர்.
எனது தகப்பனாரும் இதில் மிகுந்த ஆர்வம் காட்டியதில் ஒன்றும் வியப்பில்லை. அவர் (டி.எஸ்.வாசுதேவன்) திருப்புகழின் பதங்கள், அதன் சந்தம், குறிலும் நெடிலும் அமையும் விதம் இவற்றையெல்லாம் மனதில் கொண்டு இந்த அழகிய பாடல்களுக்கு அழகிய மெட்டுக்களை அமைத்தவர். ஜி.என்.பி.யும் எனது தகப்பனாரும் ஒரே வயதுடையவர்கள். ஒன்றாகப் படித்தவர்கள். சிறுவயதில் ஆட்டம் ஆடும் தருணத்தில்கூட ஜி.என்.பி. ஒரு விளையாட்டைப் போலவே மாற்றி மாற்றி ஸ்வரங்கள் அமைத்துக் காட்டுவார் என்றும் அதைக் கண்டு தான் வியந்த விதத்தையும் எனது தகப்பனார் என்னிடம் கூறியிருக்கிறார்.
1979 ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. எனது கணவர் வலையபட்டி கிருஷ்ணனும் தமிழ் மொழியின் மீதும் திருப்புகழின் மீதும் நாங்கள் கொண்ட அதே அளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது எனக்கு ஏற்பட்ட மற்றொரு அதிர்ஷ்டம். அவர் ஸ்யாமா சாஸ்திரிகளின் வழி வந்தவர் என்பதும் எனக்குச் சேரும் பெருமையே ஆகும்.
சங்கீதத்தில் என் மனம் ஒன்றி இருந்ததால் பி. ஏ. மற்றும் எம். ஏ. இரண்டையும் இசைத்துறையிலேயே பெற்றேன். டாக்டர் எஸ்.ராமநாதனிடமும் எஸ்.ராஜத்திடமும் நான் இசை பயின்றுள்ளேன். ராமநாதன் தமிழையும், அதிலும் முக்கியமாக சிலப்பதிகாரத்தில் நம் இசை வழிகள், முறைகள் எங்ஙனம் விவரிக்கப்பட்டுள்ளது என்பதையும் நன்கு ஆராய்ந்துள்ளவர். எஸ்.ராஜம், எஸ்.பாலசந்தரின் சகோதரர். இவர் கோடீஸ்வர அய்யரின் 72 மேள கர்த்தா ராக க்ருதிகளை ஸ்வரப் படுத்தியதோடன்றி எனக்கு இவற்றை விவரமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். நேரம் காலம் போவதே தெரியாது. இது தவிர சுலோச்சனா பட்டாபிராமனிடமும் கற்றுக் கொண்டிருக்கிறேன். ராகத்தை ஒரு வரைபடம் போல நமக்குக்
காண்பிப்பார்.
ஆல் இண்டியா ரேடியோவும் மியூசிக் அகாடமியும் திருப்புகழைப் பரப்ப நிறைய உதவியிருக்கின்றன. எங்களுக்கு நிறைய வாய்ப்பும் கொடுத்திருக்கின்றன. சமீபத்தில் ஓய்வு பெற்ற பி. ஆர். குமார் முழு நேர திருப்புகழ் கச்சேரி என் மூலம் நடத்தியுள்ளார். லய வல்லுனர் ஜே. வெங்கட்ராமன் எனக்கு தம்பூரா ஸ்ருதி கொடுத்துள்ளார். அந்தத் தருணத்திலேயே உருகிப் போயும் இருக்கிறார். இது திருச்சி வானொலியில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. க்ளீவ்லேண்ட் இசை நிகழ்ச்சியிலும் திருப்புகழ் பாடச் சொல்லி எனக்கு தற்பொழுது அழைப்பு வந்துள்ளது.
உண்மையில் எனக்கு நன்றாக வீணை வாசிக்கத் தெரியும். எனது தாத்தாவும் வாசிப்பார். எனக்கு 12 வயதிருக்கும் போது திண்ணியம் வெங்கட்ராமன் என்ற மகாவித்வான் என்னை திடீரென்று பாடச் சொன்னார். நான் பாடுவதைக் கேட்டு குரல் இருக்கிறதே - குரல் இருக்கும் போது விரல் வேண்டாம் என்றார். என்னை வாய்ப் பாட்டிற்குள் இழுத்து விட்டவர் அவரே. நல்ல சாதகம் கொடுப்பார். விளக்கெண்ணையில் பேயம் பழத்தை ஊற வைத்து சாப்பிடச் சொல்லி மிகச் சன்னமாக இருந்த என் குரலைக் கேட்பவர்கள் போற்றும் வண்ணம் மாறி ஒலிக்கச் செய்தவர் அவரே.
எனது மகள் பவ்யாவும் இது போலவே திருப்புகழிலும் சங்கீதத்திலும் அக்கறை காட்டி நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறாள்.
எனது மாணவி ப்ரதிபா சென்னைப் பல்கலைக் கழகத்தில் இசை பயின்று வருகிறாள். இது போல மாணவிகள் வி .ஜி .அக்ஷயா, ஸ்ரீ வித்யா வானொலியில் இசை நிகழ்ச்சிகள் கொடுத்துள்ளார்கள்.
இசை கற்க வருபவர்களுக்கு முதலில் சுய ஆர்வம் இருக்க வேண்டும். கற்றுக் கொண்டதை பல முறை பாடி அது மிக மிகச் சரியாக வரும்வரை தளராமல் முயல வேண்டும். இதோடு நில்லாமல் பலர் பாடுவதைக் கேட்டு இன்புறவும் பயன் பெறவும் வேண்டும். பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடத்தல் அவசியம். நான் பழமைவாதி தான். குருவிற்கு சேவை செய்வதால் அவர்களிடம் உள்ள ஞானமும், அவர்களது திறனும் யாரும் அறியாமலே பயில்பவரை வந்தடையும் என்பதில் எனக்கு எந்த வித ஐயமும் இல்லை.''
படங்கள்: பி. ராதாகிருஷ்ணன்