FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஓலைச்சுவடிகளைப் படிக்கலாம்..!

பழமையான பனை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும் தமிழ் வார்த்தைகளைப் படிப்பது கடினம்.

Updated On : 6 ஜூலை 2025, 12:01 am IST
பனை ஓலைச் சுவடி
பகிர்:

பழமையான பனை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும் தமிழ் வார்த்தைகளைப் படிப்பது கடினம். படித்தாலும் என்ன எழுதியிருக்கிறது என்று அறிவது இன்னமும் சிரமம்.

இந்த நிலையில், ஓலைச்சுவடிகளை படிக்கும் கலையை தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ் ஆர்வலர்களுக்கு இலவச வகுப்புகளை நடத்தி வருகிறார் சரஸ்வதி நூலகத்தில் பணிபுரிந்து வரும் ஐம்பத்து ஐந்து வயதான முனைவர் மணிமாறன்.

அவரிடம் பேசியபோது:

Advertisement

Advertisement

'இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகளில் சுமார் பத்து சதவீத சுவடிகள் மட்டுமே படிக்கப்பட்டு, இன்றைய தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சுவடிகளில் கண்டுபிடிக்கப்படுவதற்கு நிறைய விஷயங்கள் மறைந்துள்ளன. நானும் எனது நண்பர்களும் ஓலைச்சுவடி படிப்பில் அதிக மக்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய அவசரத் தேவையை உணர்ந்தபோது இந்தப் பயணம் தொடங்கியது.

நாங்கள் 'ஏடகம்' என்னும் கல்வி, சமூக மேம்பாட்டுக்காக ஆராய்ச்சி மையம் ஒன்றை உருவாக்கினோம். லாப நோக்கம் இல்லாத அறக்கட்டளை அது. சுவடிகள் உள்பட பண்டைய தமிழ் நூல்களை எவ்வாறு படிப்பது, வெளியிடுவது என்பதை மற்றவர்களுக்குக் கற்பிப்பதே எங்கள் நோக்கம்.

தஞ்சை கோயிலுக்கு அருகில் இருக்கும் வாடகை இடத்தில் 15 ஆண்டுகளாக வகுப்புகளை நடத்தி வருகிறேன். தொடக்கத்தில் அலுவலக வேலை முடிந்தவுடன் மாலை நேரத்தில் வாரத்தில் மூன்று வகுப்புகளை நடத்தினோம்.

தற்போது ஞாயிறு மட்டும் என மாற்றிக் கொண்டுள்ளோம். கல்லூரி மாணவிகள், பெண் ஆசிரியைகள், சித்த மருத்துவர்கள் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த 12 பேர் தமிழ் ஆர்வத்தில் தற்சமயம் படித்துவருகின்றனர்.

பாரதிதாசன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளை சில ஆண்டுகள் நடத்தினோம். என்னிடம் படித்தோர் சிலருக்கு தமிழ் மெய்நிகர் பல்கலைக்கழகம், சித்த மத்திய ஆராய்ச்சி நிறுவனம், மனிதவளம், தமிழ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி திட்டங்களில் வேலைகள் கிடைத்துள்ளன.

தேவாரத்திலிருந்து சில பாடல்கள் விடுபட்டுப் போயுள்ளன. இன்னமும் கிடைக்கவில்லை. அவை ஏதோ ஒரு புரிந்துகொள்ளப்படாத சுவடியில் அல்லது கையெழுத்துப் பிரதியில் சேர்க்கப்பட்டு இருக்கலாம். அவ்வையார் எழுதிய 'விநாயகர் அகவல்' வாயிலாக, தேவாரத்திலிருந்து தொலைந்து போன நான்கு வரிகளை நான் கண்டுபிடித்துள்ளேன்.

'ஏடகத்தில்' கிரந்த எழுத்துகள் பாடம் நடத்தும் ஆசிரியர் ஜெயலட்சுமியும் உறுதுணையாக இருக்கிறார். சிலர் வேலைவாய்ப்புகளுக்காகவும், பலர் தமிழ், மீதான ஆர்வத்தால் உந்தப்பட்டும் படிக்க வருகின்றனர். அம்மாபேட்டையைச் சேர்ந்த சரவணமூர்த்தி, 'கோயில் கல்வெட்டுகளைப் படிக்க விரும்புகிறேன்' என்று வகுப்பில் சேர்ந்தார். கணினி பொறியாளர் கார்த்திக் மரபுவழி விவசாயியாக மாறினாலும் தமிழ் படிக்க வருகிறார்.

ஓலைச்சுவடிகளைப் படிக்கப் புரிந்து கொள்ள, தமிழ் இலக்கியம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எழுதப் படிக்கத் தெரிந்து, ஆர்வம் இருக்க வேண்டும்.பழைய ஓலைச் சுவடிகளை வாசித்தால் பழமையான கல்வெட்டுகளையும் வாசிக்கலாம்.

பல்லவர் காலத்தில் கிரந்த மொழி பரவலானது. சம்ஸ்கிருத எழுத்துகளை நேரடியாகக் கலக்காமல் புதிய வடிவில் எழுத்துகளை கலந்தார்கள். அப்படி கிரந்தத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகள், சுவடிகள் இருக்கின்றன. தமிழ் சுவடிகள் சிலவற்றில் சில இடங்களில் கிரந்த எழுத்துக்கள் காணக் கிடைக்கின்றன.

இன்றைய பேசுதமிழ் போன்ற தமிழ் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். குறைந்த நிதியை வைத்துக் கொண்டு தொய்வில்லாமல் வகுப்புகளை நடத்தி வருகிறேன். எனது மாணவர்களும், புதிய மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். தமிழ் அறிஞர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகளை அழைத்து மாதாந்திரச் சொற்பொழிவுகளை நடத்திவருகிறேன்.

தமிழ் ஆய்வுகளுக்கு சிறந்த பங்களிப்பு செய்பவர்களுக்கு விருதுகளை வழங்குகிறோம். நான் இதுவரை 30 நூல்களை எழுதியுள்ளேன். அவற்றில் 12 நூல்களானது சுவடிகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. 'எண்ணும் எழுத்தும்' என்ற எனது நூல் ஆறு பதிப்புகளைக் கண்டுள்ளது.

தமிழ் பற்றால் மட்டும் இந்த வகுப்புகளை நடத்தவில்லை. தமிழ் எனக்கு அடையாளமும்கூட. படிக்கப்படாத ஓலைச் சுவடிகள் இருக்கும் வரை, நமது கடந்த காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது' என்கிறார் மணிமாறன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments