FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தொடர் முயற்சி வெற்றியைத் தேடித்தரும்!

'ஓட்டப்பந்தயத்தை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது சில நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் ஒரு போட்டியாகத் தோன்றலாம்.

30 ஆகஸ்ட் 2026, 12:38 pm IST
பகிர்:

'ஓட்டப்பந்தயத்தை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது சில நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் ஒரு போட்டியாகத் தோன்றலாம். ஆனால், அந்த சில நிமிடங்களுக்குப் பின்னால் பல மாதங்களின் பயிற்சி இருக்கும், வியர்வை இருக்கும், வலி இருக்கும், சோர்வு இருக்கும், தோல்வி இருக்கும், மீண்டும் எழுந்து ஓடுவதற்கான மனவலிமை இருக்கும்' என்கிறார் ஓட்டப்பந்தய வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பெ.ரூபிகா. இவரிடம் மேலும் பேசியதிலிருந்து:

'எங்கள் பூர்வீகம் திருவண்ணாமலை. அப்பா பெரியசாமி காவல்துறையில் பணியாற்றுகிறார். அம்மா தேவி இல்லத்தரசி. மேல்நிலைக் கல்வியையும் அங்கே தான் முடித்தேன். அதில் 11,12-ஆம் வகுப்புகளில் வணிகவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். தற்போது சென்னை மீனம்பாக்கம் பகுதியில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் பாதுகாப்பு மற்றும் உத்திசார் துறையில் படித்து வருகிறேன்.

கல்வி அறிவை வளர்க்கிறது; விளையாட்டு ஆளுமையை வளர்க்கிறது. கல்வி சிந்திக்கக் கற்றுக் கொடுக்கிறது; விளையாட்டு செயல்படக் கற்றுக் கொடுக்கிறது. கல்வி தோல்விக்கான காரணத்தை ஆராயச் செய்கிறது; விளையாட்டு தோல்விக்குப் பிறகு மீண்டும் எழச் செய்கிறது. கல்வி இலக்கை உருவாக்குகிறது; விளையாட்டு அந்த இலக்கை நோக்கி ஓடுவதற்கான மன உறுதியைத் தருகிறது. எனவே, கல்வியும் ஓட்டமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; இரண்டும் ஒரே இலக்கை நோக்கிச் செல்லும் இரு கரங்கள்.

Advertisement

Advertisement

வாழ்க்கையும் ஓட்டப்பந்தயத்தைப் போன்றதுதான். தொடக்கத்தில் யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; பாதியிலேயே யார் சோர்ந்து நிற்கிறார்கள் என்பதும் முக்கியமல்ல; இறுதிவரை ஓடுபவர் யார் என்பதே முக்கியம்.

கால்கள் வலிக்கும் போது மனம் சொல்வது, 'இதுபோதும்'. ஆனால், கனவு சொல்வது, 'இன்னும் கொஞ்சம் ஓடு'. அந்த இன்னும் கொஞ்சம் என்பது தான் முயற்சிக்குக் கிடைக்கும் அங்கீகாரம். வெற்றியைப் பெறுவதற்கு முன் முயற்சி தேவை. முயற்சியைத் தொடங்கியவுடன், உடனடியாக வெற்றி கிடைத்து விடாது. ஆனால், தொடர்ச்சியான முயற்சி ஒருநாள் வெற்றியைத் தேடித்தரும்.

நான் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 97-ஆவது மாநில சீனியர் அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் 4-ஆம் இடம் பெற்றேன். 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 முதல் 10-ஆம் தேதி வரை, தமிழ்நாடு அத்லெட்டிக் அசோசியேஷன் சார்பில் மதுரையில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது இடம் பெற்றேன். 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 19 முதல் 21-ஆம் தேதி வரை செங்கல்பட்டு அத்லெடிக் அசோசியேஷன் சார்பில் வண்டலூரில் நடைபெற்ற 39-ஆவது தமிழ்நாடு ஜூனியர் அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது இடம் பெற்றேன்.

2026-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி தமிழ்நாடு அத்லெடிக்ஸ் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மண்டல அளவிலான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம். 2026 ஆண்டு மே10-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்தியன் அத்லெட்டிக்ஸ் தொடர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது இடம் பிடித்தேன். 2026- ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி இந்தியன் அத்லெட்டிக்ஸ் சங்கம் சார்பில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 7-ஆவது தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் 4- ஆம் இடம் பெற்றேன். இது போல மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு பதக்கங்கள், பரிசுகள் பெற்றுள்ளேன். இதற்கு முக்கிய வழிகாட்டியாக பயிற்சியாளர்

பிரதீப்குமார் மற்றும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்' என்றார் பெ.ரூபிகா.

-பொ.ஜெயச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments