தஞ்சை அருகே 400 ஆண்டுப் பழமையான நாயக்கர் கால நெற்களஞ்சியம்!
வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.
வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது. இதற்காக செங்கல் கட்டுமானத்தில் மிக உயர்ந்த கட்டடங்களை எழுப்பி, நெல் தானியம் பாதுகாக்கப்பட்டது. மதுரை கள்ளழகர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட திருக்கோவிலூர் அருகேயுள்ள ஆதிதிருவரங்கம் கோயில் ஆகியவற்றில் நெற் களஞ்சியங்கள் உள்ளன.
இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை ஸ்ரீபாலைவனநாத சுவாமி கோயில் நுழைவாயில் அருகே 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட நெற்களஞ்சியம் உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் தஞ்சாவூர் உதவி இயக்குநர் த. தங்கதுரை கூறியது:
Advertisement
Advertisement
'நாடோடியாக இருந்த தொல் பழங்கால மனிதர்கள் ஒரு காலகட்டத்தில் நிலையாகத் தங்கி, வேளாண்மை செய்து, உணவு உற்பத்தியைச் செய்யத் தொடங்கினர். இந்தப் புதிய கற்காலத்தில் தங்களுக்குத் தேவையான தானியங்களைச் சேமித்தனர். பின்னர் பானைகள், குழிகளில் தானியங்கள் சேமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பெருங்கற்காலத்தில் தானியங்கள் சேமித்ததற்கான பல சான்றுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் அகழாய்வில் தானியங்கள் சேகரிக்கும் தொட்டி ஒன்றும், பொருந்தல், கீழடி உள்ளிட்ட பல்வேறு அகழாய்வுகளில் தானியங்களைச் சேகரித்து வைத்ததற்கான பாத்திரங்களும் கிடைக்கப் பெற்றன.
பிற்காலத்தில் மண் தாலி போன்ற பெரிய குதிர் ஏற்படுத்தி, அதில் நெல் உள்ளிட்ட தானியங்களைச் சேமிக்கும் பழக்கம் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடுகளிலும் இருந்தது. வசதி படைத்தவர்களின் வீடுகளில் மரத்தாலான நெற் குதிர் இருந்தது. இது 'கொட்டாரம்' என அழைக்கப்பட்டது. ஊர் மக்களுக்காகவும், பொது பயன்பாட்டுக்காகவும் பெரிய அளவில் சேகரிக்க பல்வேறு இடங்களில் நெற்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
காவிரி டெல்டாவில் ஆற்றங்கரையோரம் விளையும் நெல்மணிகளைப் பதப்படுத்தி பாதுகாக்க கோயில்களிலும், தனி இடங்களிலும், அரசர்களின் குடியிருப்புகளிலும் பெரிய வகையான நெற்களஞ்சியங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதை 'பெருநெற்களஞ்சியம்' என அதன் அளவை கொண்டு குறிப்பிடப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பாபநாசம் திருப்பாலைத்துறையில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பாலைவனநாதசுவாமி கோயிலில் 1600 முதல் 1634 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த நாயக்க மன்னரான ரகுநாத நாயக்கர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் விளையும் நெல் பொதுமக்களுக்கும், கோயிலுக்கும் தேவைக்கேற்ப சேமித்துப் பயன்படுத்த நெற்களஞ்சியத்தை உருவாக்க விரும்பினார். மன்னரின் விருப்பத்தை அப்போதைய அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் நிறைவேற்றினார்.
இந்த நெற்களஞ்சியம் சுமார் 36 அடி உயரமும், 80 அடி சுற்றளவும் உடையது. இது 3 ஆயிரம் கலம் நெல்மணிகளையும், தானியங்களையும் சேமித்து வைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்டது. இந்தச் சுவரின் கணம் 90 செ.மீ., உள்விட்டம் 6.4 மீ., உயரம் 6.5 மீட்டர் உடையது. இதன் அடித்தளம் கருங்கல்லாலும், அதன் மீது செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது.
மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த நெற்களஞ்சியத்தில் முதல் அடுக்கு சுமார் 6 அடி உயரத்தில் திறக்கும் அமைப்பு உள்ளது. இதன் மூலம் தானியங்களை நிரப்பவும், வெளியே எடுக்கவும் முடியும். முதல் அடுக்கில் தானியங்கள் நிறைந்தவுடன், அதன் மீது தொடர்ந்து கொட்டும் வகையில் இரண்டாவது அடுக்கும் திறந்து, மூடும் அமைப்புடன் இருக்கிறது. மூன்றாவது அடுக்கு கூம்பு வடிவில் மழை நீர் உள்ளே புகாதவாறும், அதிலும் தானியங்களை நிரப்பும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பாபநாசம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பாலைவனநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் விளைந்த நெல்மணிகள், தானியங்களை இந்த நெற்களஞ்சியத்தில் சேமித்து வைத்துப் பயன்படுத்தினர். பஞ்சம் ஏற்படும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பெட்டகமாகவும் இந்த நெற்களஞ்சியம் திகழ்ந்தது. இதை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை புராதன சின்னமாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறது' என்கிறார் தங்கதுரை.
கூம்பு வடிவக் கட்டுமானம்
இந்தக் கட்டுமானம் குறித்து ஆய்வு செய்த தஞ்சாவூரைச் சேர்ந்த மூத்தக் கட்டடப் பொறியாளரும், உயர்கல்வி நிறுவனங்களின் வருகை தரு பேராசிரியருமான எஸ். ராஜேந்திரன் கூறியது:
'நெற்களஞ்சியம் செங்கல், சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டது. கார்பெலிங் முறையில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில் ஒரு வரிசையில் அடுக்கப்பட்ட செங்கற்கள் மீது அடுத்தடுத்து அடுக்கும்போது அரை அங்குலம் அளவுக்கு உள்நோக்கி இருக்கும். ஒவ்வொரு அடுக்கிலும் செங்கற்களை உள்புறமாக நகர்த்தி வைத்துக் கட்டி கூம்பு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
இதனால் உள்ளே ஈரம் இருந்தால் கூட செங்கற்களால் ஈர்த்து ஆவியாக்கிவிடும். இதன் மூலம் நெல் காய்ந்த நிலையில் கெட்டுப் போகாமல் இருக்கும். அதே சமயம் மேற்பகுதி கூம்பு வடிவத்தில் இருப்பதால் நெல்லுக்குத் தேவையான ஈரப்பதமும் கிடைக்கும். உள்புறமும், வெளிப்புறமும் பூச்சு இருக்காது. இந்த நெற்களஞ்சியம் மழைக்காலத்தில் தண்ணீர் உள்புகாத வகையிலும், பூஞ்சைகளால் பாதிக்கப்படாத வகையிலும் கட்டப்பட்டிருக்கிறது' என்கிறார் ராஜேந்திரன்.