FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சிங்கத்தைக் குகையிலேயே வெற்றி கொண்ட பிரக்ஞானந்தா!

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.

Updated On : 14 ஜூன் 2026, 4:02 am IST
பிரக்ஞானந்தா - மாக்னஸ் கார்ல்சன்
பகிர்:

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா. இதனால் 'சிங்கத்தை அதன் குகையிலேயே வீழ்த்திய வீரத் தமிழன்' என்ற சிறப்பை செஸ் வீரர் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.

செஸ் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் மாக்னஸ் கார்ல்ஸன் உலகின் நம்பர் 1 வீரர் என்ற சிறப்புடன் வலம் வருகிறார். ஐந்து முறை உலக சாம்பியன், ஆறு முறை உலக ரேபிட் சாம்பியன், ஒன்பது முறை உலக பிளிட்ஸ் சாம்பியன் என்ற பெருமை அவருக்குள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த மாக்னஸ் கார்ல்சனை ஆட்டத்தில் வீழ்த்துவது சிரமமானது.

இந்த நிலையில், மிகவும் கெளரவமிக்க நார்வே செஸ் போட்டியில் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் பிரக்ஞானந்தா நிகழ்த்தினார். விஸ்வநாதன் ஆனந்த்தும்கூட இத்தகைய சிறப்பை பெற்றதில்லை.

Advertisement

Advertisement

இரு முறை வீழ்ந்த கார்ல்ஸன்

உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்ஸனை நார்வே செஸ் போட்டியில் ரவுண்ட் 3, ரவுண்ட் 8 என இரண்டு முறை வீழ்த்தி வெற்றியை ஈட்டினார் பிரக்ஞானந்தா. 2007-இல் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே இருமுறை கார்ல்ஸனை வீழ்த்தி இருந்தார். அதன்பின்னர் பிரக்ஞானந்தா இச்சிறப்பை பெற்றுள்ளார்.

கடைசி சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீய்மரை வீழ்த்தி பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் சி.ஜோசப் விஜய் ரூ.50 லட்சம் பரிசளித்தார். மேலும், அவருடன் செஸ் ஆடி உற்சாகப்படுத்தினார்.

இதுகுறித்து பிரக்ஞானந்தா கூறும்போது, 'இந்த வெற்றியால் பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சி. கடந்த 10 மாதங்களாக இதற்காக கடினமாக உழைத்தேன். எனது சகோதரி வைஷாலி கேண்டிடேட்ஸ் தொடரில் பெற்ற வெற்றி, எனக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளாக பெரிய வெற்றிகளைப் பெற முடியாமல் இருந்தது. அதற்காக சோர்ந்து விடாமல் பயிற்சி பெற்றேன். நார்வே செஸ் போட்டியில் பட்டம் வென்றேன்' என்கிறார்.

அன்றும் இன்றும்!

சர்வதேச செஸ் அரங்கில் காஸ்பரோவ், கார்போவ், விளாடிமீர் கிராம்னிக், போரீஸ் ஜெல்பாண்ட், விஸ்வநாதன் ஆனந்த் போன்ற தலைசிறந்த வீரர்கள் எப்போதும் நினைவுகூரப்படுவர்.

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். அவருக்குப் பின்னர் நார்வே நாட்டின் மாக்னஸ் கார்ல்ஸன் தனது சிறப்பான, துடிப்பான ஆட்டத்தால் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வசப்படுத்தினார். சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 2013 நவம்பரில் நடைபெற்ற நிகழ்வில், அப்போதைய நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை 6.5-3.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி கார்ல்ஸன் பட்டம் வென்றார்.

ஏறக்குறைய பரிசுத் தொகையாக ரூ.10 கோடியை கார்ல்ஸன் பெற்றிருந்தார். விஸ்வநாதன் ஆனந்துக்குப் பின்னர் தமிழக வீரர்களான டி. குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், இனியன் உள்பட பலர் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments