முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விழிப்புணர்வை ஏற்படுத்திய பரதம்

பரதநாட்டியம் பக்தி, பாரம்பரியம், கலாசாரத்தை மையமாகக் கொண்ட கலை.

Updated On : 24 மே 2026, 4:13 am IST
பகிர்:

பரதநாட்டியம் பக்தி, பாரம்பரியம், கலாசாரத்தை மையமாகக் கொண்ட கலை. ஆனால், எல்லைகளைத் தாண்டி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் துன்புறுத்துதல், பெண்கள் மீதான வன்முறை, கல்வியின் அவசியம், குழந்தைகளின் மனநலம் போன்ற சமூகப் பிரச்னைகளைத் தன் நடனத்தின் மூலம் மேடையில் உயிரோட்டமாக வெளிப்படுத்துகிறார் பள்ளி மாணவி செ.ஸ்.தர்ஷ்னா சாய்.

சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட காரைக்குடி சூடாமணிபுரத்தில் வசிக்கும் மருத்துவத் தம்பதி சி.ஸ்டாலின் ராஜா -அமலா மகளான செ.ஸ்.தர்ஷ்னா சாயின் இந்த நிகழ்ச்சி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள எல்.சிடி.பில். பழனியப்ப செட்டியார் நினைவரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது. லேனாவிளக்கு பகுதியில் உள்ள தனியார் சர்வதேசப் பள்ளியில் தற்போது ஏழாம் வகுப்பு முடித்து, எட்டாம் வகுப்பு செல்ல இருக்கும் சிறுமியின் சாதனை குறித்து அவரது தாய் அமலாவிடம் பேசியபோது:

'கைப்பேசி, இணையத்தில் இளைய தலைமுறையினர் மூழ்கிக் கிடக்கின்றனர். குழந்தையின் மெளனத்தைக் கவனியுங்கள். பெண் குழந்தைகள் பாதுகாப்பு குடும்பத்திலிருந்தே தொடங்க வேண்டும். கல்வியே குழந்தைகளின் கவசமாகும். இதை பல இடங்களில் நான் விழிப்புணர்வாகப் பேசியிருக்கிறேன்.

Advertisement

Advertisement

பரதம் வழியே பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தனிப்பட்ட அடையாளத்துக்காக மட்டுமல்லாமல், மாற்றத்துக்காகவும் பரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். கலை என்பது மகிழ்விக்க மட்டுமா? சமூகத்தை சிந்திக்க வைக்கக் கூடாதா? என்ற எண்ணமே என் மகளின் கலைப் பயணத்துக்குத் திசை காட்டியது. அதன்பின்னர், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக வளர வேண்டும் என்றால், அவர்களுக்கு தன்னம்பிக்கை, உரிமை, உணர்வு, விழிப்புணர்வு அவசியமானது.

சிறு வயதிலேயே பரதநாட்டியத்தின் மீது ஈர்ப்பு கொண்டேன். அவளுடைய பரதநாட்டிய அரங்கேற்றத்தை பெண் குழந்தைப் பாதுகாப்பு, பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றை மையமாகக் கொண்டு நடத்த வேண்டும் என்று எண்ணினோம். அதனையும் அந்த நடன குருமார்களிடமும் தெரிவித்திருந்தேன். சரியான முறையில் பயிற்சியளித்து, அரங்கேற்றம் நடைபெற்றது.

எனது மகள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியம் வாய்மொழித் தேர்வு, செய்முறை ஆகியவற்றில் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

இந்தக் கலைப்பயணத்துக்காக 25-க்கும் மேற்பட்ட பரிசும், சான்றிதழும் பெற்றுள்ளார். இசைக்கருவி வாசித்தல், கைவினை, பேக்கிங், விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறார்.

காரைக்குடி முத்து டான்ஸ் அகாதெமி நிறுவனர் முனைவர் ம.முத்துமாரி இளஞ்செழியனும் வழிகாட்டியாக விளங்குகிறார்' என்கிறார் அமலா ஸ்டாலின் ராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.