சூரிய ஒளி அடுப்புகள்
பெட்ரோல், நிலக்கரி போன்ற எரிபொருள்கள் பூமியில் இன்னும் சில பத்தாண்டுகளில் பெருமளவில் குறைந்துவிடும் என நிலவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பெட்ரோல், நிலக்கரி போன்ற எரிபொருள்கள் பூமியில் இன்னும் சில பத்தாண்டுகளில் பெருமளவில் குறைந்துவிடும் என நிலவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். வெவ்வேறு நாடுகளுக்கு இடையேயான போர்ப் பதற்றம் போன்ற அசாதாரண சூழலில் இவை கிடைக்காத நிலையில், சூரிய ஒளிஅடுப்பு
களில் (சோலார் குக்கர்) சமையல் பணிகளைச் செலவின்றி முடிக்கலாம். திரவ பெட்ரோலிய வாயு உள்ளிட்டவை சென்று சேரமுடியாத மலைப் பகுதிகளிலும், கிராமங்களிலும்கூட இவை பயன்தரக்கூடியவை.
'பூமிக்கு ஆற்றலை வழங்கும் இயற்கைக் கொடையான சூரியனின் வெளிப்புறத்தில் இருக்கும் ஒளி அடுக்கான போட்டோஸ்பியரின் வெப்பநிலை சுமார் 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ், சூரியனின் மையப் பகுதியில் அதன் வெப்பநிலை பல மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். இவற்றைப் பயன்படுத்தினால் மனிதர்களின் பெரும்பாலான ஆற்றல் தேவைகள் இலவசமாக நிறைவேற்றப்படும்' என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாகும்.
Advertisement
Advertisement
சூரிய அடுப்புகளில் பெட்டி வடிவ சூரிய அடுப்பு, பலகை வடிவ சூரிய அடுப்பு, பரவளைய வடிவ சூரிய அடுப்பு, வெற்றிடக் குழாய் சூரிய அடுப்பு, கலப்பு (ஹைபிரிட்) சூரிய அடுப்பு, சூரிய கெண்டி அடுப்பு போன்ற பல வகைகள் உள்ளன.
மிகவும் பிரபலமான சூரிய அடுப்புகளில் ஒன்றான சூரியப் பெட்டி அடுப்பை, 1767-ஆம் ஆண்டில் சுவிஸ் இயற்கை அறிவியலாளரான ஹொரேஸ்-டி-சாஸர் என்பவர் வடிவமைத்தார். கண்ணாடித் தகடுகளாலான ஒரு பெட்டியின் பல அடுக்குகளுக்குள் வெப்பநிலை எந்த அளவு உயர்கிறது என்பதைச் சோதிக்கும் பொருட்டு, ஒன்றுக்குள் ஒன்று பொருந்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட ஐந்து சதுர வடிவக் கண்ணாடிப் பெட்டிகளைக் கொண்டு அவர் ஓர் ஆய்வை மேற்கொண்டார். அந்தப் பெட்டிகளின் வரிசையில், மிக உள்ளே அமைந்திருந்த பெட்டியின் வெப்பநிலை 87 டிகிரி செல்சியஸ் அளவை எட்டியதை அவர் கண்டுபிடித்தார்.
இந்தக் கண்டுபிடிப்பால் ஊக்கம் பெற்ற சாஸர், அரை அங்குலத் தடிமனுள்ள பைன் மரப்பலகைகளைக் கொண்டு ஒரு சிறிய செவ்வகப் பெட்டியை உருவாக்கினார். அதன் உள்புறம் முழுவதும் கருப்பு நிறத்தில் கார்க் தாள்களைப் பதித்து, அதன் மேற்பகுதியை மூன்று கண்ணாடித் தகடுகளால் மூடினார்.
அப்பெட்டியின் உட்புற வெப்பநிலை 108 டிகிரி செல்சியஸ் என்று பதிவானது. வெப்ப இழப்பைத் தடுக்கும் பொருட்டு, அவர் அந்தப் பெட்டியின் பக்கவாட்டிலும் அடிப்பகுதியிலும் கம்பளியைக் கொண்டு காப்பு அமைத்து, அதனை ஒரு பெரிய பெட்டிக்குள் வைத்தார். சூரிய ஒளிக் கதிர்கள் கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்டு முழுமையான கருப்பு பூசப்பட்ட உலோகப் பெட்டிக்குள் குவியப்படுத்தப்படுகிறது.
இப்படியாக அந்தக் காலத்தில் உருவான சூரிய அடுப்பு சில நூற்றாண்டுகளில் பல அறிஞர்களின் ஆய்வுக்கும் சோதனைக்கும் உள்பட்டு குறிப்பிடத்தக்க அதன் உருவத்திலும் அமைப்பிலும் திறனிலும் பலவகைகளில் மேம்பாடு அடைந்துள்ளது. சூரிய அடுப்புகள் தற்போது இணையத்திலும், வர்த்தக நிறுவனங்களிலும் கிடைக்கின்றன.
சூரிய ஒளியின் கிடைப்புத்தன்மை, நீண்ட சமையல் நேரம், சமையல் நுட்பங்கள் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் சூரிய ஒளி அடுப்புகள் வரம்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. இதனால், வழக்கமான அடுப்புகளைக் காட்டிலும் இவை குறைந்த பன்முகத்தன்மை கொண்டவையாக அமைகின்றன.
கல்வி நிறுவனங்களில் திட்ட மதிப்புரையை செய்யும் மாணவர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் இவற்றை இலகுவாக அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் ஆராய்ச்சி செய்து, புதிய பரிமாணத்துக்கு எடுத்து வந்தால், செலவில்லாமல் அனைத்து வீடுகளிலும் அடுப்பு எரியாமல் சமையல் நடைபெறும். இதனால் எரிசக்தித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.