FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எவராலும் ஏறப்படாத சிகரம்

பல்வேறு சிறப்புகளைக் கொண்டது, மிகச் சிறிய நாடான பூடான்.

10 அக்டோபர் 2026, 10:07 pm IST
- Christopher Fynn
பகிர்:

முனைவர் ஜி.குமார்

பல்வேறு சிறப்புகளைக் கொண்டது, மிகச் சிறிய நாடான பூடான். பரப்பளவில் உலகின் 133-ஆவது இடத்திலும், சுமார் 7 லட்சம் பேரைக் கொண்டு மக்கள் தொகையில் 160-ஆவது இடத்திலும் இருக்கும் பூடான், வடக்கிலும் வட மேற்கிலும் சீனா, தெற்கிலும் தென் கிழக்கிலும் இந்திய எல்லைகளைக் கொண்டது.

வஜ்ராயன புத்த மதத்தைப் பின்பற்றுவோர் அதிகம் உள்ள பூடான் நாட்டின் அரசர் பெருந்தன்மையுடன் தனது அதிகாரங்களைத் துறந்து 2008-ஆம் ஆண்டில் மக்களாட்சிக்கு வழிகாட்டினார்.

Advertisement

Advertisement

7 ஆயிரம் மீட்டருக்கு மேலுள்ள சிகரங்கள் பூடானில் அதிகம். 6 ஆயிரம் மீட்டருக்கு மேல் உயரம் உள்ள சிகரங்கள் புனிதமாகக் கருதப்படுவதால் மலையேற்றம் தடை செய்யப்பட்டிருக்கிறது. 'கங்கார் புன்ஸம்' என்ற சிகரத்தை உலகில் இதுவரை எவரும் அடைந்ததில்லை.

பெயர்க்காரணம்

'போட - அந்த' என்பதன் மூலம் பூடான் பிறந்தது என்பர். 'போட' திபெத் நாட்டைக் குறிக்கும். 'அந்த' என்பதற்கு வடமொழியில் 'முடிவு' என்பது பொருள். திபெத் தேசத்தின் முடிவில் (தென்புற எல்லையில்) இருப்பதால் பூடான். 'பூ உட்டான்' என்ற வடமொழி வார்த்தையிலிருந்து பூடான் பிறந்தது என்றும் கூறுவோர் உண்டு. 'பூ -பூமி ; உட்டான் - உயர்ந்தது. உயர்ந்த மலைகள் அதிகம் உள்ள நாடு என்பதால் பூடான்' என்ற பெயர் பெற்றது என்பது மற்றொரு காரணம்.

இருப்பினும், நாட்டு மக்கள் 'ட்ருக் யுல்' என்றே அழைக்கின்றனர். இமயமலையின் அருகில் உள்ளதால் இடி மின்னல்கள் அதிகம். 'ட்ருக் யுல்' என்பதற்கு 'இடியுடன் கூடிய டிராகன் தேசம்' எனப் பொருள் கொள்ளலாம்.

ஆன்மிக அதிசயம்

கி.மு. 748-இல் குரு பத்மசம்பவா புலியின் முதுகில் ஏறி பூடானின் பாரோ என்ற இடத்துக்குச் சென்றிருக்கிறார். அவர் அடைந்து தியானம் செய்த இடம் 'பாரோ தக்சங்' என்ற பெயர் பெற்றது. அந்தப் புனிதமான இடம் புலிக்கூடு மடாலயம் என்று இக்காலங்களில் அழைக்கப்படுகிறது.

'டோச்சு லா' என்பது திம்புவிலிருந்து புனாகா செல்லும்போது, மலை முகடுகளிடையே உள்ள கணவாய். சுமார் 3,150 மீ. உயரத்தில் உள்ள இந்தக் கணவாயில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் இல்லாமல் உள்ளபோது, இமாலயத்தில் பல சிகரங்களைக் காணலாம்.

பூடான் தலைநகர் திம்புவில் உள்ள ஒரு குன்றின் மேல் 177 அடி உயரமுள்ள புத்தர் சிலை 9 ஆண்டுகள் கட்டப்பட்டு, 2015-ஆம் ஆண்டில் மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. அமர்ந்த நிலையில் உள்ள உலகிலேயே மிகப் பெரிய புத்தர் சிலை இதுதான்.

சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திலிருந்துதான் பூடானில் தங்கள் பயணத்தைப் பெரும்பாலும் தொடங்குகின்றனர். இந்தப் புத்தர் சிலை 'டோர்டென்மா புத்தர்' என்று அழைக்கப்படுகிறார். இதற்கு 'முடிசூட்டப்பட்ட புத்தர்' என்பது பொருளாகும். வெண்கலத்தாலான சிலைக்குத் தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது. இந்தச் சிலையின் கீழ் தியான மண்டபமும் அமைக்கப்பட்டிருக்கிறது. தியான மண்டபத்துக்குள் சுமார் 12,500 சிறிய புத்தர் சிலைகள் உள்ளன.

விசித்திர நிகழ்வுகள்

புனாகா என்ற நகர் பழைய தலைநகராக இருந்திருக்கிறது. பாரோ நகரில்தான் சர்வதேச விமான நிலையம் உள்ளது. மலைகள் சூழ்ந்த நாடு என்பதால், குறைந்த எண்ணிக்கைகளிலேயே அங்கு விமானங்கள் இயங்குகின்றன.

'ஃபுண்ட்ஷூலிங்' என்ற வர்த்தகம் மிகுந்த நகர் இந்தியா - பூடான் எல்லையில் மேற்கு வங்கம் அருகில் அமைந்துள்ளது. சாலை வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் ஃபுண்ட்ஷூலிங் நகர் மூலமாகவே பூடானுக்குள் நுழைகின்றனர்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் முறையே கோ, கீரா என தேசிய உடைகள் உள்ளதால், நிகழ்ச்சிகளிலும், அரசு அலுவலகங்களில் தேசிய உடைகளே பயன்படுத்தப்படுகின்றன. தேசியக் கொடியின் நடுவில் டிராகன் படம் பதிக்கப்பட்டிருக்கிறது. 1999-ஆம் ஆண்டில்தான் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.

'மொத்த தேசிய மகிழ்ச்சி' என்பது பூடானில் பின்பற்றப்படும் தத்துவமாகும். இது உற்பத்தியைவிட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்வாக நினைக்கும் ஓர் அளவீடு.

சுற்றுச்சூழலை பூடான் வெகு கவனமாகக் கையாளுகிறது. உலகில் சில நாடுகளில் மட்டுமே கரியமிலவாயு உமிழ்வு மிக மிகக் குறைவு.

வாகனங்களின் வேகம் குறைவாக இயக்கப்படுவதாலும், மக்கள்தொகை அதிகமில்லாததால் போக்குவரத்து நெரிசலும் இருப்பதில்லை. பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது வண்டிகளை நிறுத்தி, அவர்களுக்கு முதலில் வழிவிடுகின்றனர். இதனால் சாலைகளில் விளக்குகள் இருப்பதில்லை.

பூடானின் தேசிய பானமான 'சுஜா' என்பது யாக் விலங்கின் பால் மூலம் கிடைக்கும் வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர். மக்கள் காரமான உணவுகளை விரும்பி உண்கின்றனர்.

மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் புகைப் பிடிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. புகையிலையும் பயிரிடப்படுவதில்லை. மாமிசத்தை அங்கு மக்கள் புசித்தாலும் புத்த மதத்தைப் பின்பற்றுவதால், எந்த விலங்குகளும் பறவைகளும் அங்கு கொல்லப் படுவதில்லை. இறைச்சி இறக்குமதி செய்யப்படுகிறது. பூடான் மக்களுக்கும் கல்வியும் மருத்துவ வசதிகளும் இலவசம்.

பூடானின் தேசிய மிருகம் டகின் எனும் ஆட்டின் தலையும் பசுவின் உடலும் கொண்ட விநோத மிருகம். இந்த மிருகம் புற்கள், தாவரங்களை உண்டு வாழ்கிறது. சுமார் 70 முதல் 140 செ.மீ. வரை உயரமும், 105 முதல் 215 செ.மீ. நீளமும் கொண்டவை. இந்த மிருகங்களை வேட்டையாடுவதோ, துன்புறுத்துவதோ கூடாது.

'úஸôங்கோ' என்பது மக்களால் பேசப்படும் மொழி. குல்டிரம் என்பது பூடானின் பணமாக இருந்தாலும், இந்திய ரூபாய் கடைகளில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளுடன் ஆங்கிலம், இந்தியில் மக்கள் சகஜமாகப் பேசி மகிழ்கின்றனர்.

1970-ஆம் ஆண்டு வரை பூடான் வெளியுலகுடன் தொடர்பில்லாமல் தனிமைப்பட்டிருந்தது. இப்போதும் தனது கலாசாரம், சுற்றுச்சூழலுக்குப் பங்கம் வராத அளவுக்கு மட்டும் பூடான் வெளியுலகுடன் உறவுகளை நீட்டித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பூடானின் வளர்ச்சி நிதிக்கு ஒரு சிறிய தொகை செலுத்த வேண்டியிருக்கிறது.

கட்டடக் கலை

கட்டடக் கலை இங்கு சிறப்புடன் இருப்பதோடு, வீடுகள், கோட்டைகள், புத்த மடாலயங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியன ஒரே கலையில் நேர்த்தியான முறையில் எழுப்பப்பட்டுள்ளன. 'úஸôங்' எனப்படும் அரசு அலுவலகக் கட்டடங்கள் ஒவ்வொரு பெரிய நகரிலும் கட்டடக்கலைக்கு முன்னோடியாக இருக்கின்றன. பலவித வண்ணங்கள், சிறிய கோபுரங்கள், சாய்வான கூரை ஆகியவைகளுடன் பெரும்பாலும் மர வேலைகள் நிறைந்து, கற்களுடன் கட்டடங்கள் நிறுவப்பட்டுள்ளன.

2003-ஆம் ஆண்டில் அஸ்ஸôமிலிருந்து வந்த கிளர்ச்சியாளர்கள் 30 கூடாரங்கள் அமைத்து, இந்திய அரசுக்கு எதிராகப் போராடலாயினர். அவர்களை பூடான் அரசு விரட்டியபோது, பூடான் சிப்பாய்கள் சிலரும் உயிர் துறக்க நேர்ந்தது. இந்த இடத்தில் 108 ஸ்தூபிகள் நினைவுச் சின்னமாகக் கட்டப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments