மனதை வெல்லும் ஓவியங்கள்!
காலத்தால் அழியாதவை நல்ல காவியங்கள் மட்டுமல்ல; மனதைக் கவரும் ஓவியங்களும்தான்.
காலத்தால் அழியாதவை நல்ல காவியங்கள் மட்டுமல்ல; மனதைக் கவரும் ஓவியங்களும்தான். மற்றவர்களை மகிழ்விக்கும் ஓவியங்களைக் காட்டிலும், அதன்மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓவியங்கள்தான் பயனுள்ளதாக அமையும்.
நாட்டில் நிகழும் சம்பவங்களை மணல் ஓவியமாக வடிப்பவர் ஒடிஸாவின் சுதர்சன்பட்நாயக். இவரைப் போன்று தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை ஓவியங்களாக வடித்து, அவற்றை மாணவர்கள் பார்வைக்கும், பொதுமக்கள் பார்வைக்கும் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் அறுபது வயதான ஓவியர் ந.தமிழரசன்.
கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட வேப்பூர் வட்டம், மன்னம்பாடி கிராமத்தைச் சேர்ந்த இவர், 'சமூகத்தின் பல தீமைகள் உருவாவது போதை வழியே' என்ற தலைப்பின் கீழ், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எழுபதுக்கும் மேற்பட்ட ஓவியங்களை மாணவ, மாணவியர் பார்வைக்கு அண்மையில் வைத்திருந்தார். போதையால் பாதை மாறினால் வாழ்வில் இழப்பவைகள் குறித்து அந்த ஓவியங்கள் மூலம் மாணவர்களிடையே அவர் விழிப்புணர்வு பாடம் நடத்தினார்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியின் இடையே அவரிடம் பேசியபோது:
'சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றேன். 'ஓவியம் காட்சிப் பொருளாக மட்டும் இருக்கக் கூடாது, கருத்துப் பதிவாக அமைய வேண்டும்' என்ற நோக்கில் ஒவ்வோர் தலைப்பையும் கொண்டு ஓவியங்களை வரையத் தொடங்கினேன். தொடக்கத்தில் தினமும் ஓரிரு ஓவியங்கள்தான் வரைய முடிந்தது. தற்போது 10 ஓவியங்களை வரைவேன்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சியை 16 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறேன். ஜூன், ஜூலை மாதங்களில் போதைத் தடுப்பு குறித்த விழிப்புணர்வுக்கான பயணத்தை மேற்கொள்கிறேன்.
'இயற்கையைக் காக்கும் பல்லுயிர்கள்' என்ற தலைப்பில் முதல் ஓவியக் கண்காட்சியை நடத்தினேன். எல்லா உயிர்களும் எப்படி இயற்கையைப் போற்றிப் பாதுகாக்கிறது. மனிதர்களாகிய நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதைச் சொன்னேன். அதில் கிடைத்த வெற்றி தற்போது வரை என்னைத் தொடர்ந்து ஓடச் செய்கிறது.
காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை அனைவரும் உணரத் தொடங்கி விட்டனர். இனி இயற்கையைப் பாதுகாத்தால் மட்டுமே நாம் பேரழிவுகளிலிருந்து தப்பிக்க முடியும். இதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் வேண்டும். ஓவியம் மூலம் நான் வெளிப்படுத்தும் விழிப்புணர்வு, அவற்றின் கருத்து, கண்கள் வழியாகப் பார்வையாளர்களின் மனதில் பதிய வேண்டும் என்பதற்காகத்தான்.
ஓவியக் கண்காட்சியை அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் 'ஈரநிலம்' என்ற ஓர் அமைப்பை தொடங்கினேன். சுழற்சி அடிப்படையில் அரசு, தனியார் கல்லூரிகளில் ஓவியக் கண்காட்சிகளை நடத்திவிட்டு, இறுதியாக கண்காட்சி நடைபெறும் கல்லூரிகளில் அந்த ஓவியங்கள் அனைத்தையும் வழங்கிவிடுவேன். அதற்காக அவர்கள் வழங்கும் தொகையை அடுத்த ஓவியக் கண்காட்சியின் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்வேன்.
ஓவியக் கண்காட்சியைப் பார்வையிடும் மாணவர்கள் பின்னர் நேரடியாக எனக்குக் கடிதம் எழுதி, இயற்கையையும், சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் நன்றாகப் புரிந்து விட்டது என்பதைக் குறிப்பிடுவது மகிழ்ச்சியாக உள்ளது.
ஆரம்பத்தில் ஆயில் பெயின்டிங்தான் முழுவதும் செய்தேன். அண்மைக்காலமாக 20 ஆயில் பெயிண்டிங், 15 ஒன்லைன் டிராயிங் செய்கிறேன். உலகில் ஏதாவது ஓர் இடத்தில் இயற்கைக்கு மாறான நிகழ்வுகள் நடைபெற்றால், அது மற்றொரு பகுதியையும் பாதிக்கும் என்பதை ஒப்பிட்டு ஓவியங்கள் வரைந்து வருகிறேன்.
மரங்களை கர்ப்பிணிகளுடன் ஒப்பிடுவது, ஒரு சிசுவைக் கொல்வதும், ஒரு மரத்தை வெட்டுவதும் ஒன்றுதான். இதன்வழியாக மரங்களின் அவசியம் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது, தாய் - குழந்தை உறவு, வறண்ட நிலத்தைக் கவலையுடன் பார்க்கும் விவசாயி, மது, புகைக்கு அடிமையாகும் இளைஞர்கள், அதன் பாதிப்பு போன்ற எண்ணற்ற ஓவியங்களை வரைந்துள்ளேன்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 'வனம்' என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சியை நடத்தினேன். 2027-ஆம் ஆண்டில் 'வனக் காவலர்கள்' என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளேன். வனக் காவலர்கள் யார்? காட்டில் உள்ள பல்லுயிர்கள், எறும்பு முதல் யானை வரை உயிரினங்கள் வனத்தை எவ்வாறு பரவலாக்குகின்றன என்பதை ஓவியங்கள் வாயிலாகக் குறிப்பிட உள்ளேன். அதற்கான பணிகளைத் தொடங்கி விட்டேன். ஜனவரியில் கள்ளக்குறிச்சியில் தொடங்கி, மார்ச்சில் கடலூரில் நிறைவு செய்ய இருக்கிறேன்'' என்கிறார் தமிழரசன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.