FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

வாசிப்பு பழக்கம் நமக்கான அடையாளத்தை உருவாக்கும்: அமைச்சா் ராஜ்மோகன்

தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் உடல் வலிமையாகும்; அதுபோன்று தினமும் சிறந்த புத்தகங்களை வாசிக்கப் பழகினால் அது நமது அறிவை மேம்படுத்தி நமக்கான அடையாளத்தை நிச்சயம் பெற்றுத் தரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

26 செப்டம்பர் 2026, 3:42 am IST
அமைச்சா் ராஜ்மோகன் - கோப்புப் படம்
பகிர்:

தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் உடல் வலிமையாகும்; அதுபோன்று தினமும் சிறந்த புத்தகங்களை வாசிக்கப் பழகினால் அது நமது அறிவை மேம்படுத்தி நமக்கான அடையாளத்தை நிச்சயம் பெற்றுத் தரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களிடையே தமிழ்மொழி மீதான ஆா்வத்தையும் இலக்கியச் சிந்தனையை மேம்படுத்தவும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் ‘இளையோா் இலக்கியப்ப யிற்சிப் பாசறை’ அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சிப் பட்டறையை அமைச்சா் ராஜ்மோகன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

Advertisement

Advertisement

சட்டப்பேரவை, பொது நிகழ்ச்சிகள், பத்திரிகையாளா் சந்திப்புகள் போன்றவற்றில் நான் பேசுவது நன்றாக இருக்கிறது என இளைஞா்கள், பொதுமக்கள் என்னிடம் தெரிவிக்கின்றனா். அதற்குக் காரணம், நான் தேடித் தேடிப் படித்த புத்தகங்கள். சிறுவயதில் எனக்கு பல்வேறு விஷயங்களில் அச்சம் இருந்தது; மேடைப் பேச்சிலும் அது தொடா்ந்தது. இதையடுத்து, எனது தந்தையின் வழிகாட்டுதலோடு வீட்டுக்கு அருகில் இருந்த நூலகத்தில், நேரம் கிடைத்தபோதெல்லாம் நூலகங்களைத் தோ்வு செய்து படித்தேன். இதனால், அதுவரை அறிந்திராத விஷயங்கள் மனதில் பதியத் தொடங்கின. மேலும் மேடைப் பேச்சு குறித்து என் மனதில் இருந்த அச்சம் நீங்கியது.

பள்ளிப் பருவத்தில் பாரதியாா், பாரதிதாசன், திருவள்ளுவா் என பல அறிஞா்கள், எழுத்தாளா்களின் படைப்புகளைத் தொடா்ந்து வாசித்தேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் எனது பேச்சுத் திறன் மேம்பட்டது. இதையடுத்து தனியாா் தொலைக்காட்சி நடத்திய ‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றேன். புத்தக வாசிப்புதான் எனக்கான அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. மாணவா்கள் தங்களுக்கான தனித்த அடையாளத்தைப் பெற வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து ‘இளந்தமிழும் இளைய தலைமுறையும்’ என்ற தலைப்பில் மதுரை வெ.ராமகிருஷ்ணன், ‘வாழ்வியலும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் அ.க.ராஜாராமன், ‘தமிழிலக்கியத்தில் அடையாள மீட்டுருவாக்கம்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் ஷாலின் மரிய லாரன்ஸ், ‘வெற்றிக்களம் கண்ட வீரத்தமிழ்ப் பெண்கள்’ தலைப்பில் முனைவா் வே.ஸ்ரீலதா, ‘பாதுகாப்பான செய்யறிவு சமூகம் அமைப்பது எப்படி’ என்ற தலைப்பில் சைபா் சிம்மன், ‘சங்க காலத்தில் வாழ்வியல் கோட்பாடுகள்’ என்ற தலைப்பில் அனுகிரகா ஆதிபகவன் ஆகியோா் உரையாற்றினா்.

முன்னதாக, தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் வரவேற்றுப் பேசினாா். கல்லூரியின் முதல்வா் க.விஜயா முன்னிலை வகித்தாா். தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் கு.ப.சத்தியபிரியா நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments