பணம் புழங்கும் நேரம்... தீபாவளி, போனஸ், வியாபாரம்
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக நாடு முழுவதும் வணிகம் பரபரப்பாகி விடுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக நாடு முழுவதும் வணிகம் பரபரப்பாகி விடுகிறது. எல்லாக் குடும்பங்களிலும் தீபாவளி புதிய உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கிவிடுகிறது. தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல; பொங்கல்தான் தமிழர் பண்டிகை என்று சிலர் வாதம் செய்தாலும், அவர்கள் வீட்டிலும் பெண்கள் எல்லாரும் தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தயாராகி விடுகின்றனர்.
வணிக நிறுவனங்கள் விற்பனையை மேலும் அதிகரிக்க பல சலுகைகளை அறிவிக்கின்றன. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், 40 சதவீதம் தள்ளுபடி என தீபாவளி ஆஃபர் வழங்குகின்றன. பட்டாசுக் கடைகள் திடீரென ஆங்காங்கே தோன்றிவிடுகின்றன. பட்டாசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் குழந்தைகளும் பட்டாசு வாங்கி வெடிப்பதில் மகிழ்ச்சி காண்கிறார்கள்.
தீபாவளி இத்தனை கொண்டாட்டங்களையும் கொண்டு வருவதற்கு நரகாசுரன் வதம் என்றும், ராமன் ராவணனைக் கொன்று சீதையை மீட்டு அயோத்தி திரும்பியபோது, வரவேற்பதற்காக ஏற்றப்பட்ட தீபங்களின் வரிசைதான் தீபாவளி என்றும் சொல்லப்பட்டாலும், தீபாவளி இந்த அளவுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு தருவதற்கு ஒரே காரணம் - போனஸ்.
Advertisement
Advertisement
போனஸ் என்ற சொல்லுக்கு லத்தீன் மொழியில் நல்லது, எதிர்பாராமல் கிடைக்கும் நன்மை, கூடுதலாக வழங்கப்படும் சன்மானம் என்று பொருள்.
இருப்பினும், தொழிற்சாலைகளில், கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடுதலாக ஒரு தொகையை வழங்கப்படுவதே போனஸ்.
அப்படி என்றால் போனசுக்கு என்று தனிச் சட்டம் இருக்கிறதா? முதலாளி கட்டாயமாக போனஸ் கொடுக்க வேண்டுமா? அது, அவர் விரும்பிச் செய்வது இல்லையா?
இந்தக் கேள்விகளுக்கு பொருளாதார நிபுணர் முனைவர் சோம. வள்ளியப்பன் கூறுவது இதுதான்:
'1914- 1918 ஆண்டுகளில் நெசவாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் பெரும் லாபம் ஈட்டின. அதில் ஒரு பகுதியை ஊழியர்களுக்கு, இப்போது சேவையைப் பாராட்டி நாம் தருகின்ற டிப்ஸ் போல ஒரு தொகையைத் தந்தன.
முதலாம் உலகப் போர் நடந்தபோது தொழில் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. லாபம் குறைந்ததால் போனஸ் கொடுப்பது நின்றது. போரைக் காரணமாக வைத்து போனஸ் தர மறுக்கிறார்கள் என்று தொழிலாளர் போராட்டங்கள் தொடங்கின. அதனால் அரசு தலையிட நேர்ந்தது. 1924 -இல் போனஸ் டிஸ்ட்ரிபியூட் கமிட்டி என்ற குழுவை அமைத்தனர். அந்தக் குழு ஆய்வு நடத்தி, போனஸ் என்பது கட்டாயம் இல்லை என்று முடிவு சொன்னது.
ஆனாலும், டாடா குழும நிறுவனங்களில் 1934 முதல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி, போனஸ் முறையை நடைமுறைப்படுத்தின.
அதற்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்திய அரசு பேமெண்ட் ஆப் போனஸ் ஆக்ட் 1965 என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. 2019 வரை அதுதான் சட்டம். பிறகு கோட் ஆப் வேஜஸ் என்ற புதிய சட்டத்தின் அங்கம் - ஐய அரசின் போனஸ் பட்டுவாடா சட்டம் அமலில் உள்ளது.
இந்தியாவில் தீபாவளி சமயத்தில் பெரும்பாலான ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கிறது. அதனால் போனஸ் என்றாலே தீபாவளி போனஸ் என்று இணைத்துப் பேசும் வழக்கம் இருக்கிறது.
லாபம் செய்தாலும் செய்யாவிட்டாலும், ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 31-ஆம் தேதியுடன் முடியும் நிதியாண்டின் இறுதி நாளிலிருந்து எட்டு மாதங்களுக்குள் ஒரு தொகை கொடுத்துவிட வேண்டும் என்பது சட்டம்.
அடிப்படை மற்றும் பஞ்சப்படி ஊதியம் மாதம் ரூ. 21 ஆயிரம் வரை வாங்குகிற ஊழியர்கள் குறைந்தபட்சம் 30 நாட்கள் ஒரு நிதியாண்டில் பணி செய்து இருந்தால், அவர்களுக்கு அவர்களுடைய ஆண்டு ஊதியத்தில் குறைந்தபட்சம் 8.33 சதவீதம் போனசாக வழங்க வேண்டும்.
20 நபர்களுக்கு அதிகமாக பணி செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்துக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். இன்னும் கூடுதலாக போனஸ் கேட்டு தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தும். 8.33 சதவீதத்துக்கு மேலாக தரப்படும் தொகையை எக்ஸ்கிரீசியா என்கிறார்கள். எட்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும்.
இந்தச் சட்டம் அரசு நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஆனாலும், உற்பத்தித் திறனுடன் இணைக்கப்பட்ட போனஸ் ப்ரொடக்டிவிட்டி லிங்குடு போனஸ் என்று அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது' என்று விளக்குகிறார்.
நம் நாட்டில் ஆண்டு முழுவதும் நடக்கும் மொத்த விற்பனையில் 25 முதல் 35 விழுக்காடு வரை தசரா காலகட்டத்தில் தான் நடக்கிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இந்தப் போக்கு அதிகம். புதிய வண்டிகள் வாங்குவது நகைகள் வீடுகள் வாங்குவது அதிகளவில் நடக்கிறது.
தவிர ஆடைகள் உணவுப் பொருள்கள் கூடுதல் விற்பனை ஆகின்றன. கண்பிடரேஷன் ஆப் ஆல் இந்தியா இஅஐப தகவல் படி தீபாவளி சீசனில் ஆறு லட்சம் கோடி ரூபாய் வரை வியாபாரம் நடக்கிறது. தமிழ்நாட்டில் என்று பார்த்தால், பட்டாசுகள் மட்டும் ரூ. 6 ஆயிரம் கோடிக்கு விற்பனை ஆகிறது. இதில் வருத்தம் அளிக்கும் தகவல், தீபாவளி சமயத்தில் மது விற்பனை தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. ரூ.400 கோடி, 500 கோடி ரூபாய் வரை அரசுக்கு கிடைக்கிறது.
வடநாட்டில் தசராவின் போது பொருள்களை வாங்குவது நன்மை தரும் என்று நம்புகிறார்கள். நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் அவர்களுக்குக் கிடைக்கும் போனஸ் பணத்தை இந்தச் சமயத்தில் செலவு செய்கிறார்கள்; அதனால் இந்த வாய்ப்புகளைத் தவறவிடாமல் கூடுதல் வியாபாரம் செய்வதற்காக வியாபார நிறுவனங்கள் கூடுதல் தள்ளுபடிகள் செய்கின்றன. புதிய மாடல்களை அறிமுகப்படுத்துகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.