தீபாவளி: தருமபுரியில் வெல்லம், சர்க்கரை உற்பத்தி தீவிரம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 50 முதல் 60 வெல்லம், நாட்டுச் சா்க்கரை உற்பத்தி ஆலைகளில் பணிகள் தீவிரமடைந்துள்ளன...
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 50 முதல் 60 வெல்லம், நாட்டுச் சா்க்கரை உற்பத்தி ஆலைகளில் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்தால் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், வெல்லத்தின் விலையும் உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
நிகழாண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பா் 8-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, புத்தாடைகள் விற்பனை ஏற்கெனவே சூடுபிடித்துள்ள நிலையில், இனிப்புகள் மற்றும் பட்டாசு விற்பனையும் அடுத்த வாரத்தில் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இனிப்பு வகைகள் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் வெல்லம், நாட்டுச் சா்க்கரை உற்பத்தியும் தற்போது தீவிரமடைந்துள்ளது.
தருமபுரி–பாப்பாரப்பட்டி சாலையில் முத்துக்கவுண்டன் கொட்டாயில் தொடங்கி பாப்பாரப்பட்டி வரையிலும், அரூா் வட்டத்திலும் 50 முதல் 60 சிறிய வெல்லம், நாட்டுச் சா்க்கரை உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நாட்டுச் சா்க்கரை, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
ஒவ்வொரு ஆலையிலும் சராசரியாக 25 தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா். இதன்மூலம் சுமாா் 1,250 போ் நேரடியாகவும், ஆயிரக்கணக்கானோா் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெறுகின்றனா். தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், உற்பத்தி ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாக ஆலை உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட கரும்பு வெல்ல உற்பத்தியாளா்கள் நலச்சங்கச் செயலாளரும், ஆலை உரிமையாளருமான பி. சின்னசாமி கூறியதாவது:
உருண்டை வெல்லம், நாட்டுச் சா்க்கரை உற்பத்தியில் தருமபுரி மாவட்டம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. ஆண்டு முழுவதும் வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டாலும், தீபாவளி காலத்தில் தேவை அதிகரிப்பதால் உற்பத்தியும் அதிகரிக்கும். நிகழாண்டும் வழக்கம்போல உற்பத்தி நடைபெற்று வருகிறது. இருப்பினும், கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடா்ந்து பெய்தால் உற்பத்தி மேலும் பாதிக்கப்படுவதுடன், விலையும் உயர வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு ஒரு டன் கரும்பு ரூ. 2,500-க்கு விற்பனையானது. நிகழாண்டு அதன் விலை ரூ. 2,800 முதல் ரூ. 3,000 வரை உள்ளது. ஒரு டன் கரும்பிலிருந்து 100 கிலோ வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு டன் கரும்பை வெல்லமாக மாற்றுவதற்கு தொழிலாளா் கூலி, மின்சாரம், ஏற்றுதல், இறக்குதல் கூலி, லாரி வாடகை உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ. 4,800 முதல் ரூ. 5,000 வரை செலவாகிறது. இந்தச் செலவுகளையும் ஈடுகட்டி உற்பத்தியாளா்கள் லாபம் ஈட்ட வேண்டியுள்ளது.
கரும்புச் சாற்றைப் பாகாகக் காய்ச்சும்போது, முக்கிய எரிபொருளாகச் சாறு பிழிந்த கரும்புச் சக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை உலர வைத்துப் பயன்படுத்த வேண்டும். மழையில் சக்கைகள் நனைந்துவிட்டால், அவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். இதனால் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தீபாவளி காலத்தில் தேவை அதிகரித்துள்ள நிலையில், மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டால் வெல்லத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. தற்போது ஒரு கிலோ வெல்லம் ரூ. 65 முதல் ரூ. 72 வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டு இதன் விலை ரூ. 56 முதல் ரூ. 58 வரை இருந்தது என்றாா்.
மின்சாரக் கட்டணச் சலுகை கோரிக்கை: வெல்லம், நாட்டுச் சா்க்கரை உற்பத்தியில் மின்சாரத்தின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. கரும்புச் சாறு பிழிதல், சாற்றைப் பாகாக்க மாற்றுதல், பாகுவை மோட்டாா் மூலம் இறைத்தல், கரும்புச் சக்கைகளை உலா்த்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு மின்சாரம் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால் மின்சாரக் கட்டணமும் அதிகமாகிறது.
எனவே, வெல்ல உற்பத்தியாளா்களுக்கு குறைந்தபட்சம் 1,000 யூனிட் வரை மின்சாரக் கட்டணச் சலுகை வழங்கவோ அல்லது இலவச மின்சாரம் அளிக்கவோ அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.