FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உப்பும் சர்க்கரையும் அதிகம் உள்ளதா?

பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் சிப்ஸ், பிஸ்கட், மிட்டாய், கேக் போன்ற பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருள்களை நாம் எல்லாரும் வாங்குகிறோம்.

5 செப்டம்பர் 2026, 8:26 pm IST
பகிர்:

பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் சிப்ஸ், பிஸ்கட், மிட்டாய், கேக் போன்ற பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருள்களை நாம் எல்லாரும் வாங்குகிறோம். நம்மில் 90 சதவீதம் பேர் வாங்கியவுடன் அதைப் பிரித்துச் சாப்பிடுகிறோம். பத்து சதவீதம் பேர் மட்டுமே அந்தப் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள - அதுவும் கண்ணுக்குத் தெரியாதபடி மிகச் சிறிய எழுத்துகளாக இருக்கும் - உற்பத்தி செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி ஆகியவற்றைப் பார்க்கிறார்கள்.

அந்தப் பாக்கெட்டில் அடைத்து விற்கும் பொருள்களில் கொழுப்புச் சத்து எவ்வளவு, புரதம் எவ்வளவு, சர்க்கரை அளவு என்ன பார்ப்போர் அந்தப் பத்துப் பேரில் ஓரிருவர் மட்டுமே.

பல ஆண்டுகள் போராடிய பின்னர், ஒரு கேக் தயாரிப்பில் முட்டை சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய அடையாளக் குறியீடு அச்சிட வேண்டும் என் நடைமுறையை இந்திய உணவுப்பொருள் மற்றும் தரநிர்ணய ஆணையம் உத்தரவிட்டது. முட்டை பயன்பாடு இல்லாமல் தயாரிக்கப்பட்ட கேக் பாக்கெட்டில், அதன் பிராண்ட் பெயர் இருக்கும் பகுதியில் ஒரு பச்சை சதுரமும் அதற்குள் ஒரு பச்சை வட்டமும் கொண்ட அடையாளக் குறியீடு இருக்கும்.

Advertisement

Advertisement

அந்தக் கேக்கில் முட்டை, மாமிசக் கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தால், அந்தப் பாக்கெட்டின் மீது சிவப்பு சதுரக் கோடும் அதற்குள் சிவப்பு வட்டமும் இருக்கும். பல ஆண்டுகள் போராடிய தன்னார்வ அமைப்புகள் இப்போது அடுத்தக் கட்டத்துக்கு நுழைந்திருக்கிறார்கள்.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருளில் அளவுக்கு அதிகமான உப்பு, அளவுக்கு மீறிய சர்க்கரை, அல்லது கொழுப்பு உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது? இதற்கும் இப்போது ஒரு அடையாளக் குறியீட்டை

உச்சநீதிமன்றத்தில் காட்டியுள்ளது இந்திய உணவுப்பொருள் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம். எண்கோணச் சிவப்பில் இருக்கும் இந்தக் குறியீட்டுடன் அதிக உப்பு, அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு என்ற வார்த்தைகளும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

'3எஸ் அன்டு ஹவர் ஹெல்த் சொசைட்டி' உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா, வினோத் சந்திரன் அமர்வு, 'எத்தனை காலம் இன்னும் இழுத்தடிப்பீர்கள். இரண்டு வாரத்தில் முடிவு சொல்லுங்கள்' என்று கண்டித்தவுடன்தான் இந்த அடையாளக் குறியீட்டை எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தெரிவித்துள்ளது. இனிமேல்தான் இது நடைமுறைக்கு வரும். விரைவில் அமலாகும் என நம்புவோம்.

அதிக உப்பு, அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு கொண்ட உணவுப் பொருள்கள் சுவையாக இருக்கின்றன. ஆனால், உடலுக்குக் கேடு விளைவிக்கின்றன. குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை பெரிதும் பாதிக்கின்றன.

2000-ஆம் ஆண்டில் சிறுவர்களில் 2 சதவீதம்பேர் உடல் பருமன் அதிகம் கொண்டிருந்தனர். இந்த எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டில் 10 சதவீதமாக உயர்ந்துவிட்டது. மற்றொரு ஆய்வில், பள்ளிக்கூடங்களைச் சுற்றியுள்ள கடைகளில் கிடைக்கும் உணவுப் பொருள்களில் 80 சதவீதம் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களே எனத் தெரியவந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் நடத்திய ஆய்வில் பஞ்சு மிட்டாயில் கலக்கப்படும் இளம்சிவப்பு வண்ணம் உடல்நலத்துக்கு ஆபத்தானது என்று தெரியவந்தது. அதையடுத்து தடை செய்தார்கள். பஞ்சு மிட்டாய் வெள்ளை நிறத்துக்கு மாறியது. ஆனால், அதன் அதிக இனிப்பு, அதன் உற்பத்தித் தரம் குறித்து யாரும் கவலைப்படவில்லை.

இந்தியாவில் உணவுப் பொருள்களை பாக்கெட்டில் அடைத்து விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் அதே பொருளை தரமாக விற்கின்றன. இந்தியாவில் விற்கும் அவர்களது தயாரிப்பை ஐரோப்பிய நாடுகளில் விற்றால் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

உதாரணமாக, லண்டனில் விற்பனை செய்யப்படும் பான்டா குளிர்பானம் 63 கலோரிகள் கொண்டிருக்கிறது. இனிப்பு குறைவு. ஆனால், இந்தியாவில் மூன்று மடங்கு கலோரிகள் அதிகம். இனிப்பும் மூன்று மடங்கு அதிகம்.

அண்மையில் இதுகுறித்துச் சுட்டிக் காட்டியபோது, இந்தப் பெருநிறுவனங்கள் சொன்ன பதில், இந்தியர்களின் உணவு முறை வேறு, அவர்கள் விரும்பும் சுவை வேறு என்பதுதான்.

மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படாமல் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்தப் பாக்கெட் உணவுப் பொருள்களால் பாதிக்கப்படுவது நம் குழந்தைகள். முதலில் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

-தி.செ.

மகாவீர் சந்த் போத்ரா

நடைமுறைக்கு வந்தால், நல்லது

உணவுப் பொருள்களின் தரம், தயாரிப்பு விவரங்களை நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார், சென்னையைச் சேர்ந்த மகாவீர் சந்த் போத்ரா.

வேர்ல்டு வெஜ் கவுன்சில் இயக்குநராகவும் இருக்கும் போத்ரா, இந்த வழக்குத் தொடர்பாகக் கூறியது:

'உணவுப் பாக்கெட்டில் எண்கோண சிவப்புச் சின்னம் அச்சிட வேண்டும் என்று இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு ஆணையம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இது நடை

முறைக்கு வந்தால்தான் பயன் தரும். இப்போது இவர்கள் சொல்வது, பாக்கெட்டில் விற்பனையாகும் உணவுப் பொருள்களுக்கு மட்டுமே.

சாதாரண இனிப்புக் கடையில் அந்த இனிப்பு எப்போது தயாரிக்கப்பட்டது என்பதை நுகர்வோருக்குச் சொல்கிறார்களா... இல்லை. அசினோமோட்டோ சேர்க்கப்பட்டுள்ளது என்பதைச் சொல்கிறார்களா? அதிக உப்பு ரத்த அழுத்த நோய்க்கு முதல் காரணம். உணவில் அதிக உப்பு சேர்ப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

ஒரு பிஸ்கெட் பாக்கெட்டில் உற்பத்தித் தேதி, காலாவதி தேதி இருக்கிறது. இனிப்புக் கடையில் அல்லது ஒரு டீக்கடையில் பாட்டிலில் வைத்துள்ள கேக், பிஸ்கெட் காலாவதி தேதி தெரியுமா? டீக்கடையில் விற்கப்படும் சமோசா எத்தனை நாள்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது?

நாம் பல விதத்திலும் ஏமாற்றப்படுகிறோம். உணவுதான் மனிதனின் உடல் நலத்தைத் தீர்மானிக்கிறது. அந்த உணவு எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு நுகர்வோரும் அறிந்துகொள்ள வேண்டும். இதற்கான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்' என்கிறார் போத்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments