FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

50 ஆண்டுகள்... 300 படங்கள்!

நாடகங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தேன். 'பயலு தாரி' படத்திலிருந்து நகைச்சுவை காட்சிகளில் நடிக்கத் தொடங்கினேன்.

26 செப்டம்பர் 2026, 8:17 pm IST
- IANS
பகிர்:

சக்கரவர்த்தி

'நாடகங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தேன். 'பயலு தாரி' படத்திலிருந்து நகைச்சுவை காட்சிகளில் நடிக்கத் தொடங்கினேன். 'தைர்ய லட்சுமி', 'நாரத விஜயா' போன்ற படங்களில் முழுமையான நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறேன். திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்களுக்கெனத் தனிப் பாத்திரம் அல்லது கதைக்களம் அமைக்கும் வழக்கம் இருந்தது.

ஆனால், எனது பன்முகத் திறனை உணர்ந்த எழுத்தாளர்களும் இயக்குநர்களும் அந்த வழக்கத்தை உடைத்து, எனக்கு குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பளித்தது என் அதிர்ஷ்டம். இப்போதும் திரைத்துறையில் பணியாற்றுவது எனக்கு எளிதாக இருக்கிறது. நாடகத் துறை உடல் ரீதியாக மிகுந்த சோர்வை ஏற்படுத்தக்கூடியது' என்கிறார் கன்னட நடிகர் அனந்த் நாக்.

Advertisement

Advertisement

அரசியலில் எம்.எல்.ஏ., எம்.எல்.சி, அமைச்சராகப் பணியாற்றியுள்ளார் அனந்த் நாக். ஐம்பது ஆண்டுகளில் 300 கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ளார். 2025-ஆம் ஆண்டில் அனந்த்துக்கு 'பத்ம பூஷண்' விருதும் வழங்கப்பட்டது. இப்போது அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

எழுபத்து எட்டு வயதான அனந்த் நாக்கின் நடிப்பு, எப்போதும் காட்சிகளை எதார்த்தமானதாக உணர வைப்பதாகவே அமைந்திருக்கும். படம் பார்ப்பவர்களுடன் இயல்பாக உரையாடுவது போலவே அவர் நடித்தார்.

1970-களில் மாற்றுத் திரைப்படங்கள் இந்தியாவில் பேசுபொருளானபோது, ஷியாம் பெனகலின் 'அங்குர்', 'நிஷாந்த்', 'மந்தன்' , 'பூமிகா' போன்ற படங்களில் அனந்த் நாக் நடித்தார். சாதாரண மனிதர்களுக்கிடையிலான உரையாடல்களில் காணப்படும் தடுமாற்றம், நகைச்சுவை, எரிச்சல் மற்றும் மெளனம் ஆகியவை அனந்த் நடிப்பில் வெளிப்பட்டன.

சிந்தனையைத் தூண்டும் திரைப்படங்கள், வெகுஜன பொழுதுபோக்குத் திரைப்படங்கள், நாடகம், நகைச்சுவை, கதாநாயகன், குணச்சித்திர வேடங்கள் என அனைத்திலும் இயல்பாகவே பங்களிப்பு செய்தார். 'கணேஷன மதுவே', 'கெளரி கணேஷா' போன்ற கன்னடத் திரைப்படங்களில், நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்தினார்.

அனந்த் நாக்கின் சகோதரர் சங்கர் நாக்குடனான கூட்டு முயற்சி, அவரை தொலைக்காட்சித் துறைக்கும் கொண்டு சென்றது. ஆர்.கே. நாராயணனின் 'மால்குடி டேய்ஸ்'-இல் அனந்த் நடிக்க, சங்கர் நாக் இயக்கி தயாரித்திருந்தார். அந்தத் தொடர் அன்றைய தலைமுறையின் கலாசார நினைவாக மாறியது.

'பான்-இந்திய' நடிகர் ஒரு சந்தை உத்தியாக மாறுவதற்கு வெகு காலத்துக்கு முன்பே, கன்னடம், ஹிந்தி, மராத்தி மொழிகளில் அனந்த் நாக் நடித்துள்ளார். 'கே.ஜி.எஃப்.: சாப்டர் 1' போன்ற நவீன அதிரடித் திரைப்படத்தின் பிரம்மாண்டமான சூழலிலும், அதே இயல்பான, நிதானமான நடிப்பை அவரால் வெளிப்படுத்த முடிந்தது.

திரையுலகில் வந்தது எப்படி?

இவர் விமானப் படையில் இணைந்து ராணுவச் சேவையில் ஈடுபட விரும்பினார். கன்னட வழிக் கல்வி பயின்ற கிராமப்புறச் சூழலிலிருந்து, பதின்ம வயதில் மும்பையில் உள்ள ஆங்கில வழிக் கல்விப் பள்ளிக்கு மாறியபோது, அந்தச் சூழல் மாற்றத்தைச் சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டார்.

இதனால் அவர், பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்தார். தனது 18-வது வயதில் யூனியன் வங்கியில் சிறிது காலம் பணியாற்றினார். அப்போது புனித சைதன்ய மகாபிரபுவைப் பற்றிய நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். சத்யதேவ் துபே, கிரிஷ் கர்நாட் போன்ற ஆளுமைகளுடன் நடித்தார். அந்த நாடகப் பின்னணியே அவரது திரைப்பயணத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

1973-ஆம் ஆண்டில் பி.வி. நஞ்சராஜா உர்ஸ் இயக்கிய 'சங்கல்ப' படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் நாக் அறிமுகமானார். 1974-இல் ஷியாம் பெனகலின் 'அங்குர்' படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகில் நுழைந்தார். 1970-களில் மாற்றுத் திரைப்பட இயக்கத்தின் முக்கிய முகமாக அவரை நிலைநிறுத்தியது.

கன்னடத் திரைப்படங்களில் சாமானிய மக்களுடன் எளிதில் ஒன்றிப்போகக்கூடிய கதாபாத்திரங்களில் நடித்ததற்காக அவர் பரவலாக அறியப்பட்டார். அவரது குறிப்பிடத்தக்க கன்னடப் படங்கள் 'பயலு தாரி', 'நா நின்னா பிடலாரே', 'சந்தனதா கோம்பே', 'பென்கிய பலே', 'கணேசன மதுவே', 'கெளரி கணேசா'.

இவர் தபேலா, ஹார்மோனியம் வாசிப்பதிலும், பாடுவதிலும், பாரம்பரிய மந்திரங்களை ஓதுவதிலும் வல்லமை மிக்கவர்.கன்னடத் திரைப்படவுலகில் டாக்டர் ராஜ்குமார் 1995-ஆம் ஆண்டில் தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றார். அவருக்குப் பின்னர் இவ்விருதைப் பெறுபவர் அனந்த் நாக்.

பாரதம் தர்மபூமி; கர்நாடகா கர்மபூமி!

புதுதில்லியில் அண்மையில் 72-ஆவது தேசியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்ற அனந்த் நாக், 'பாரதம் தர்மபூமி; கர்நாடகா கர்மபூமி' என்று கூற, அரங்கத்தில் இருந்தோர் எழுந்து நின்று கைதட்டி அவர் பேச்சை வரவேற்றனர். இந்த விழாவில் நடிகர்கள் மம்மூட்டி, தனுஷ், சஞ்சய் மிஸ்ரா, கார்த்திக் ஆர்யன் உள்ளிட்டோரும் பல பிரிவுகளில் தேசிய விருதுகளைப் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments