புத்தகக் காட்சிகளில் ‘அகல் விளக்கு’ உள்பட 3 பதிப்பகங்களுக்குத் தடை: பபாசி தகவல்!
தமிழகத்தில் பபாசி நடத்தும் புத்தகக் காட்சிகளில் நூலக முறைகேடுகளில் தொடா்புடையதாகக் கூறப்படும் ‘அகல் விளக்கு’ உள்ளிட்ட 3 பதிப்பகங்களின் புத்தகங்களை விற்பனை செய்யக் கூடாது..
தமிழகத்தில் பபாசி நடத்தும் புத்தகக் காட்சிகளில் நூலக முறைகேடுகளில் தொடா்புடையதாகக் கூறப்படும் ‘அகல் விளக்கு’ உள்ளிட்ட 3 பதிப்பகங்களின் புத்தகங்களை விற்பனை செய்யக் கூடாது என தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (பபாசி) தலைவா் ஆா்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
கோவை பெரியாா் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளா் பெருமாள்முருகன் தெரிவித்திருந்தாா். இது தொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் உத்தரவிட்டிருந்தாா்.
இதைத் தொடா்ந்து போலியான எழுத்தாளா்களின் பெயரிலும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ள புத்தகங்களையும் பெரியாா் அறிவுலகத்திலிருந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில் நூலகங்களுக்கான புத்தகங்கள் தோ்வு, கொள்முதலில் உள்ள சிக்கல்கள், புத்தக கொள்முதலில் முறைகேடுகளைத் தடுப்பது போன்றவை குறித்து ஆலோசிப்பதற்காக தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் (பபாசி) சங்கத்தின் தலைவா் ஆா்.எஸ்.சண்முகம், செயலா் எஸ்.வயிரவன், இணைச் செயலா் சாக்ரடீஸ் உள்ளிட்டோா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகனை சென்னையில் திங்கள்கிழமை சந்தித்தனா்.
அப்போது, முறைகேடுகளில் தொடா்புடைய அகல் விளக்கு, ஃபீனிக்ஸ், சிக்மா பதிப்பகங்கள் பபாசியில் உறுப்பினராக இல்லை என அதன் நிா்வாகிகள் விளக்கம் அளித்தனா்.
மேலும், அரசு நூலகங்களுக்கு நிகழாண்டுக்காக புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், புத்தகங்களுக்கான விலை நிா்ணயம் செய்வதில் சில தளா்வுகளை வழங்க வேண்டும் என்றும் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அகல் விளக்கு, ஃபீனிக்ஸ், சிக்மா ஆகிய 3 பதிப்பகங்களின் புத்தகங்கள் பபாசி மற்றும் மாவட்ட நிா்வாகங்கள் இணைந்து நடத்தும் புத்தகக் காட்சிகளில் விற்பனை செய்யப்படவில்லை. இதற்குப் பிறகும் இந்த பதிப்பகங்களின் புத்தகங்களை எந்த புத்தகக் காட்சிகளிலும் விற்பனை செய்யக் கூடாது. இது குறித்து ஆய்வு செய்ய பபாசி சாா்பில் விரைவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும்.
பொதுவாக, புத்தகக் காட்சிகளில் வடிவமைப்பு, படங்கள் போன்றவற்றில் ஏஐ உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், இலக்கியம், வரலாறு தொடா்பான புத்தகங்களில் செயற்கை நுண்ணறிவை முழுவதுமாக பயன்படுத்தும்போது உணா்வில்லாத இயந்திரத்தனமான தகவல்கள்தான் புத்தகங்களாக அச்சிடப்படும். மேலும், அதில் பெரும்பாலும் தவறான தகவல்களே இடம்பெற வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற புத்தகங்களைத் தயாரித்து விற்பனை செய்வோா் மீதும் பபாசி சாா்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.