சொல் தேடல் -27
வாழ்க்கையில்தான் எத்தனை அச்சம்! ""இன்ப நுகர்ச்சியில் நோய் உண்டாகிவிடுமோ என்னும் அச்சம்; நற்குடியில் பிறந்தவர்களுக்குத் தாழ்வு ஏற்பட்டுவிடுமோ என்னும் அச்சம்;
வாழ்க்கையில்தான் எத்தனை அச்சம்! ""இன்ப நுகர்ச்சியில் நோய் உண்டாகிவிடுமோ என்னும் அச்சம்; நற்குடியில் பிறந்தவர்களுக்குத் தாழ்வு ஏற்பட்டுவிடுமோ என்னும் அச்சம்; செல்வத்தில் புரள்வோர்க்குச் செல்வம் கொள்ளை போய்விடுமோ என்னும் அச்சம்; பெருமையில் சிறுமை நேர்ந்துவிடுமோ என்னும் அச்சம்; வலிமையில் பகைவர் தாக்குவார்களோ என்னும் அச்சம்; அழகாய் இருக்கும்போது மூப்பு வந்துவிடுமோ என்னும் அச்சம்; புலமையோடு திகழும்போது யாரேனும் வாதத்திற்கு அழைப்பார்களோ என்னும் அச்சம்; நேர்மையாக வாழும்போது தீயவர்கள் தூற்றுவார்களோ என்னும் அச்சம்; உயிர்வாழும் போது உடலழிவு குறித்து அச்சம். வாழ்க்கையில் எல்லாம் அச்சத்தோடு தொடர்புடையனவாய் இருக்கின்றன! துறவு ஒன்றே அச்சமற்றது'' என்கிறார் வடமொழிக் கவிஞர் பத்திரகிரியார். இவை காரணத்தோடு கூடிய அச்சம். இவற்றிற்கு அஞ்சத்தான் வேண்டும். "அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்' என்கிறது தமிழ்மறை.
சிலருக்கு வேறு சில அச்சங்கள் உண்டாகின்றன; இனம்புரியாத அச்சங்கள்: அடியற்ற அச்சங்கள். கணவனுக்கு அஞ்சாத பெண்கள் சிலரை எளிய கரப்பான்பூச்சி அலறவைத்து விடுகிறது. இப்படிக் கரப்பான் போன்ற பூச்சிகளுக்கு அஞ்சுவது Arachniphobia. பாரதியார் தம் காலத்திய இந்திய மக்கள் நிலைகுறித்து, "துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்' என்று பாடியுள்ளார். இப்படி ஆயுதங்களைக் கண்டு அஞ்சுவது Hoplophobia. . சாவை நினைத்து அஞ்சுவது Necrophobia இப்படி எத்தனையோ அச்சங்கள். அவற்றுள் ஒன்றே Claustrophobia.
சிலருக்குத் தனிமையில் ஓர் அறையில் முடங்கிக் கிடப்பது அச்சம்; சிலருக்குக் குறுகலான பாதையைக் கடப்பதில் அச்சம். சிலருக்கு நகர்படிக்கட்டில் ஏறுவதற்கு அச்சம். சிலர் மூடப்பட்ட அரங்குகளில் இருப்பதற்கு அஞ்சுவர். சிலர் சிற்றூரில் அடைபட்டுக் கிடப்பதற்கு அஞ்சுவர். சுருங்கச் சொன்னால் இவ்வச்சம் இடம் சார்ந்து உண்டாவது. இதனைக் குறிப்பதே Claustrophobia.. இச்சொல்லை 1979-இல் இத்தாலியில் பிறந்த மருத்துவர் பெஞ்சமின் பால் (Benjamin Ball) உருவாக்கினார். இது மூடப்பட்ட இடம் என்று பொருள்தரும் Clustrum என்னும் கிரேக்கச் சொல்லையும், அச்சம் என்று பொருள்படும்
Advertisement
phobos என்னும் இலத்தீனச் சொல்லையும் இணைத்து உருவாக்கப்பட்டது.
இதை, ராஜசிம்மன் தனிமைப் பயம் என்றும், ப.இரா. இராசஅம்சன் தனிமை மருட்சி, மூட்ட மருட்சி என்றும், என்.ஆர். ஸத்யமூர்த்தி தனிமை அச்சம், சிற்றிட அச்சம் என்றும், சந்திரா மனோகரன் ஒதுக்கிட பீதி, மறைவிட பீதி என்றும் குறிக்கலாம் என்கின்றனர். வ.மோ. கோட்டீஸ்வரன் குறுவெளிப் பேரச்சம், சிற்றிடப் பேரச்சம், சிறைபடு பேரச்சம் ஆகிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளார். கோ. மன்றவாணன் phobia என்பதை அச்சம், பீதி, கிலி, திகில், மருட்சி, மருள், வெருட்சி, வெருள், வெருவு, மிரட்சி ஆகிய சொற்களால் குறிக்கலாம் என்று தெரிவித்து, இச்சொல்லுக்குரிய தமிழாக்கங்களைத் தந்துள்ளார். அவர் தந்துள்ள சொற்கள் தனிமையச்சம், குறுகலிட அச்சம், சிற்றிட அச்சம், மூடறை அச்சம், அடைப்பிட அச்சம் என்பன.
கா.மு. சிதம்பரம் இச்சொல்லிற்கு மூடப்பட்ட இடம், தனியான இடம், குறுகலான இடம் ஆகியவற்றால் உண்டாகும் அச்சம் என்று விளக்கம் தந்து, இம்மூன்று பொருளையும் குறிக்கும் வகையில் சுருங்கைப் பேது என்னும் சொல்லைத் தெரிவித்துள்ளார். பேது என்பது அச்சத்தைக் குறிக்கும் அழகான சங்கச் சொல். "தாதுண் பறவை பேதுறல் அஞ்சி' (4) என்பது அகநானூறு. அவருடைய முயற்சி போற்றுதற்குரியது. ஆனால், சுருங்கை என்பதற்குத் தமிழ்ப் பேரகராதி, நீர்செல் சிறுவழி, கோட்டையிற் கள்ளவழி, நுழைவாயில், மாளிகையின் சாளரம் என்று பொருள் கூறுவதால், அதனை ஏற்க இயலவில்லை.
இச்சொல்லுக்குரிய எல்லாப் பொருளையும் உள்ளடக்கிய ஒரு சொல்லைப் படைப்பது அரிது. இது பல பொருளைத் தந்தாலும் மூடப்பட்ட இடத்தால் ஏற்படும் அச்சத்தை முதன்மைப்படுத்தியே உருவாக்கப்பட்டுப் பிறபொருளையும் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நாமும் ஒருபொருளை முதன்மைப்படுத்திச் சொல்லை உருவாக்கிக்கொள்வதே தக்கது. சிறுமை, குறுக்கம் ஆகியவற்றைக் குறிக்கும் நல்ல தமிழ்ச்சொல் இட்டிமை என்பதாகும். "ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை' என்பது திருக்குறள். இட்டிது - இட்டிமையின் மேற் பிறந்த ஒன்றன்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர் என்பது வை.மு.கோ. தந்துள்ள குறிப்பு. "இட்டிடை தளர நின்ற குழைநிற முகத்தினார்' (சிந்தா.1928) "இட்டிடை வருந்திச் சால இறுமெனத் துவண்டு வாட' (காஞ்சி. புரா, 377) என்று பெருங்கவிஞர்கள் இச்சொல்லை ஆண்டுள்ளனர். இதனையொட்டிச் சிறிய குறுகலான இடத்தால் உண்டாகும் அச்சத்தை இட்டிட வெருட்சி என்று குறிக்கலாம். அல்லது மூடப்பட்டிருத்தலை முதன்மைப்படுத்தி அடைப்பிட அச்சம் என்று கூறலாம்.
Claustrophobia - இட்டிட வெருட்சி (அ) அடைப்பிட அச்சம்.
அடுத்த வாரத்திற்குரிய சொல்:
கல்வி நிலையங்களில் வசூலிக்கப்படும் தொகையைக் குறிக்கும்
Capitation Fee