நகையும் உவகையும்...
உயர்ந்த பொருள் பொதிந்த கவிதையை இயற்றுவதால் கவிஞனின் மேன்மை அமைகிறது.
உயர்ந்த பொருள் பொதிந்த கவிதையை இயற்றுவதால் கவிஞனின் மேன்மை அமைகிறது. ரசனை மிக்கவர்களால் அந்தக் கவிதை காலங் கடந்து நிலைத்து நின்று விடுகிறது. தாம் படிக்கும் கவிதையில் நகை, அழுகை, இளிவரல், அச்சம், மருட்கை, பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய சுவைகளில் ஏதேனும் ஒன்றிலோ சிலவற்றிலோ ஆழ்ந்து தம்மை இழந்து விடுகின்றான் ரசிகன். கவிதையை வாசிக்காமல் சுவாசிக்கத் தொடங்கி, அதைக் காட்சிப்படுத்திப் பார்க்கின்றான். கன்னித் தமிழ் கன்னல் தமிழாய் மாறுவதற்குக் காரணம் இந்தக் காட்சி ரசனையே ஆகும்.
திருவிளையாடற் புராணம் இயற்றிய பரஞ்சோதி முனிவர் இறைவன் சோமசுந்தரர் மீது ஒரு துதியைப் பாடியுள்ளார்.
அதைக் காட்சிப்படுத்திப் பார்த்தோமேயானால் நம் மனதில் நகையும் உவகையும் ஒரு சேரத் தோன்றுவதை உணரலாம்.
Advertisement
Advertisement
"மீன் போன்ற கண்களையுடைய அன்னை மீனாட்சியை மணந்து உலகம் முழுவதையும் ஆண்ட சோமசுந்தரக் கடவுளை வணங்குவாம்' என்று முடிகிற அந்தப் பாடலின் பிற வரிகளைக் காட்சியாய்க் காணலாம்.
மீனாட்சியைத் திருமணம் செய்யும் பொருட்டுப் புறப்படும் சிவ
பெருமான் கண்ணாடியின் முன் நிற்கிறார். நீண்டு வளர்ந்து செஞ்சடைக் காடாய்க் காட்சி தரும் முடி, கைகளிலும் தலையிலும் ஆபரணமாய் விளங்கும் விடநாகங்கள், கையில் இடபக் கொடி என்று தம் அழகைக் கண்டு ரசித்துக் கொண்டே, என்ன புறப்படலாமா? என்று வினவுகிறார். எங்கே? என்று அருகிலுள்ளவர்கள் கேட்க, மதுரைக்குத்தான் என்கிறார் சிவன்.
இது என்ன அலங்காரம்? இந்தக் கோலத்திலா திருமணத்துக்குப் போவது? என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்த குபேரன், அவருடைய சடையை எடுத்துக் கட்டி, ஒளி வீசுகிற வைர, வைடூரியங்களுடன் கூடிய மகுடத்தால் சடைக் கற்றையை மறைக்கிறான்.
அழகிய கொன்றைமலர் மாலையை விடுத்து, வேப்பமாலையை அணிந்து கொள்ளுங்கள் அன்னை மீனாட்சிக்கு இந்த மாலை மிகவும் பிடிக்கும் என்றவுடன் சிரிப்புடன் அணிந்து கொள்கிறார். கைகளில் பூநாகப் பாம்புகளை அணிந்திருந்தால் புது மணப்பெண் மீனாட்சி உங்கள் அருகில் ஆசையாகப் பேச வருவாளா? அதற்காக என்ன செய்வது? நாகங்களையெல்லாம் எடுத்து விட்டு மாணிக்கத்தாலான இந்தக் கங்கணங்களை அணிந்து கொள்ளுங்கள் என்றவுடன் மறுபேச்சில்லாமல் பூட்டிக் கொள்கிறார்.
ஐயனே! கையிலிருக்கும் இடபக் கொடியைத் தாருங்கள்; பாண்டிய நாட்டுக்கே உரித்தான மீன் கொடியை ஏந்திக் கொள்ளுங்கள்.
அடியார்களுக்கு வீடுபேறு அருளும் நீங்கள்தான் பாண்டிய நாட்டு மருமகனாக வீட்டோடு மாப்பிள்ளையாகப் போகிறீர்களே!
என்று எல்லாவற்றுக்கும் சாட்சியாய் நிற்பவனைக் காட்சிப் பொருளாக்கிக் காட்டும் பரஞ்சோதி முனிவரின் அசதியாடல் பாடலைப் படித்து அசதியைப் போக்கிக் கொள்ளுங்கள்.
சடைமறைத்துக் கதிர்மகுடந் தரித்துநறுங்
கொன்றையந்தார் தணந்துவேப்பந்
தொடைமுடித்து விடநாகக் கலனகற்றி
மாணிக்கச் சுடர்ப்பூ ணேந்தி
விடைநிறுத்திக் கயலெடுத்து வழுதி மரு
மகனாகி மீனநோக்கின்
மடவரலை மணந்துலக முழுதாண்ட
சுந்தரனை வணக்கஞ் செய்வாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.