இலக்கியங்களில் அறம்
இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை.
இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. எல்லாவற்றையும் சமமாக நினைத்து வாழ்ந்தால்தான் இறைவனடி சேரமுடியும் என்பதை வள்ளுவர் "பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்' என்றார்.
இது குறித்து புறநானூற்றில்
பக்குடுக்கை நன்கணியார் என்ற
Advertisement
Advertisement
புலவர் வாழ்வின் நிலையாமை குறித்து "இழப்பை சிந்தனையி
லிருந்து விலக்கி இனியனவற்றை மட்டும் கண்டு வாழ்க்கையை ஓட்டி மகிழ்வீராக' என்று தனது பாடலின் மூலம் உணர்த்துகிறார்.
"ஓரில்நெய்தல்கறங்க, ஓர் இல்
ஈர்ந்தன் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி }அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பணி வார்பு} உரைப்பப்
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ்வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.
(புறம். 194)
ஒரு வீட்டில் ஓர் உயிர் பிரிந்து பறைஒலி ஒலிக்கிறது. இன்னொரு வீட்டில் இன வளர்ச்சிக்கு மணப் பந்தலுக்கு மங்கள இசையுடன் கால் நடுகின்றனர். இவ்வாறு பூவுலகில் யார்யாருக்கு எப்போது எது நடக்க வேண்டுமோ அந்தக் காலத்தில் நடக்க படைப்பவன் முன்பே எழுதிவிட்டான். எனவே, இதை உணர்ந்து யாவரும் வாழ வேண்டுமென்கிறார்.
மேலும் வாழுங்காலத்தில் கூற்றுவன் பாசக்கயிறு கட்டி இழுத்துச் செல்லுமுன் நல்வினைகள் செய்யாவிடினும் தீவினை செய்யாதிருங்கள் என்கிறார். அதுவே நம்மை யாவரும், நம் இறப்புக்குப் பிறகு புகழ்வார்கள்.
"நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படூ உம் நெறியுமார் அதுவே'.
(புறம். 195)
இதே கருத்தை வள்ளுவரும் தனது 114}ஆவது குறளில் வேறுவிதமாக
"தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்'
என்கிறார்.
ஒருவர் இறந்த பின்னரே அவரிடம் எஞ்சி நிற்கும் பழி அல்லலுறும் அறியலாம் என்கிறார்.
தண்டமிழாசான் சாத்தனாரோ நிலையாமையை சுட்டிக்காட்டி வாழும் காலத்தில் நல்லறம் செய்க என்கிறார்.
"பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு
இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக்
கொள்கலம்
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்'
(மணிமேகலை)
என்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.