முகப்பு
தமிழ்மணி

பறவைக் காதலன்

உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் தன் இனமாகக் கருதும் தன்மை மனிதம் எனப் போற்றப்படுகிறது. அத்தகைய மனிதத் தன்மைக்கு இலக்கணமாய் வாழ்ந்து சிறந்தவர்கள் வெகுசிலர்.

Updated On : 3 மே, 2026 at 5:52 PM
கோப்புப் படம்
பகிர்:

உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் தன் இனமாகக் கருதும் தன்மை மனிதம் எனப் போற்றப்படுகிறது. அத்தகைய மனிதத் தன்மைக்கு இலக்கணமாய் வாழ்ந்து சிறந்தவர்கள் வெகுசிலர்.

'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்' என்ற சிந்தனையுடையவர்கள் மறைந்தாலும் அவர்களின் புகழ் எல்லாக் காலங்களிலும் நிலைபெற்றிருக்கும் என்பது எவரும் மறுக்கவியலாத உண்மையாகும். 'ஆஅய் எயினன்' என்பவன் கொடை கொடுப்பதில் மிகச் சிறந்த வள்ளலாக விளங்கிய ஓர் அரசன். மனிதர்களிடம் மட்டுமல்லாது பறவைகளிடமும் அன்பு காட்டியவன்.

போர்க்களமொன்றில் மிஞிலி என்ற பகைவனுடன் போராடி மாண்டு போனான். அவனின் இறப்பையறிந்த பறவைகள் ஆற்றொணாத் துயரை அடைந்தன. இறந்தவனின் உயிரைக் காக்க முடியவில்லை. எனினும், தங்களிடம் அன்பு கொண்டவன் உடல் வெயிலில் கிடக்கிறதே என வருந்திய பறவைகள், அவ்வுடலுக்கு நிழல் கொடுப்பதன் பொருட்டு தன் சிறகுகளை விரித்து உடல் கிடந்த இடத்துக்கு மேலாகப் பறந்தன.

Advertisement

'துன்அருங் கானமும் துணிதல் ஆற்றாய்

---------

அடுபோர் மிஞிலி செருவேல் கடைஇ

முருகுஉறழ் முன்பொடு பொருதுகளம் சிவப்ப

ஆஅய் எயினன் வீழ்ந்தென ஞாயிற்று

ஒண்கதிர் உருப்பம் புதைய ஓராங்கு

வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு

விசும்பிடை தூர ஆடி மொசிந்து உடன்

பூவிரி அகன்துறைக் கணைவிசைக் கடுநீர்க்

காவிரிப் பேர்யாற்று அயிர்கொண்டு ஈண்டி

எக்கர் இட்ட குப்பை வெண்மணல்''

(அகநானூறு 181)

ஆஅய் எயினன் மீது பாசம் கொண்ட அந்தப் பறவைகள் அருகிலுள்ள காவிரியாற்றங்கரையில் பரவிய மணலைக் கொண்டு வந்து அவன் உடலின் மீது இட்டு மணல் மேடாக்கின. மற்றொரு பாடலிலும் ஆஅய் எயினன் இறப்பு குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. அதில் பகற்குருடாகிய கோட்டான் இறந்த மன்னனைப் பார்க்க முடியாமல் மனத்துயரை அடைந்தது என்ற செய்தி அமைந்துள்ளது.

'பனைத்திரள் அன்ன பருஏர்எறுழ்த் தடக்கை

-------

நெடுந்தேர் மிஞிலியொடு பொருது களம்பட்டெனக்

கானிய செல்லாக் கூகை நாணிக்

கடும்பகல் வழங்கா தாஅங்கு இடும்பை

(அகநானூறு 148)

பறவையின் மேல் அன்பு செலுத்திய ஆஅய் எயினனின் குணமும் பறவைகளின் பரிவும் காலத்தால் அழியாதது. அகநானூற்றின் 208-ஆம் பாடலும் பறவைகள் ஆஅய் எயினன் உடலுக்கு நிழல் கொடுத்ததைக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.