FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வாழ்ந்துகொண்டே இருப்பார்!

மாபெரும் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என்ற பன்முகத் தன்மைகளைக் கொண்ட சிங்கீதம் சீனிவாசராவ், தனது தொண்ணூற்று ஐந்து வயதில் மறைவுற்றார்.

10 அக்டோபர் 2026, 10:31 pm IST
பகிர்:

இந்தியத் திரைப்பட உலகுக்குத் தன் புதுமையான பார்வைகளாலும், வியக்க வைக்கும் கற்பனைத் திறனாலும் புதிய கதவுகளைத் திறந்துவைத்த மாபெரும் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என்ற பன்முகத் தன்மைகளைக் கொண்ட சிங்கீதம் சீனிவாசராவ், தனது தொண்ணூற்று ஐந்து வயதில் மறைவுற்றார். இவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளில் தடம் பதித்த இவர், வெறும் இயக்குநர் மட்டுமல்ல; திரைப்படக் கலை எனும் வித்தையைக் கரைத்துக் குடித்த ஒரு பேராசான். இதனால் அவரை 'திரைக்கலைத் தாத்தா' என்று அழைக்கலாம்.

1931-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த சிங்கீதம் சீனிவாசராவ், இயற்பியல் பட்டதாரியாகத் தன் வாழ்வைத் தொடங்கியபோதிலும், கலை மீதிருந்த பேரார்வம் அவரைத் திரையுலகை நோக்கி ஈர்த்தது. புகழ்பெற்ற இயக்குநர் கே.வி. ரெட்டியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, நுணுக்கங்களைக் கற்றார்.

Advertisement

Advertisement

தெலுங்கில் 'நீதி நிஜாயிதி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், கதைகளைத் தேர்வு செய்வதிலும், அதைக் காட்சிப்படுத்துவதிலும் தனித்துவத்தைக் காட்டினார். சினிமா தொழில்நுட்பத்தில் அசாத்திய நம்பிக்கையும், புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் துணிச்சலும் சிங்கீதம் சீனிவாசராவின் முதன்மை அடையாளம்.

'வசனம் மட்டுமே முதன்மையானது' என்ற பிம்பத்தை உடைத்து, ஒரு வார்த்தைகூடப் பேசாத 'புஷ்பக விமானம்' என்ற சைலன்ட் திரைப்படத்தைக் கொடுத்து திரை உலகையே பேச வைத்தார். கமல்ஹாசன் என்ற பண்பட்ட கலைஞரும், சிங்கீதமும் இணைந்து கொடுத்திருந்த இந்தப் படைப்பு இன்று வரை மாஸ்டர்பீஸôக உள்ளது. நகைச்சுவையும் உணர்ச்சியும் ததும்பிய இத்திரைப்படம், சிங்கீதம் மற்றும் கமல் ஆகியோரின் சிறந்த படங்களில் ஒன்று. தென்னிந்திய சினிமாவின் டைம் டிராவல் கதையான 'ஆதித்ய 369' மூலம் அறிவியல் புனைகதைத் திரைப்படங்களுக்கு வலுவான அடிக்கல் நாட்டினார்.

1990-களிலேயே நேரடி ஆக்ஷன் திரைப்படங்களுடன் கார்ட்டூன், அனிமேஷன் கூறுகளை இணைத்து, குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒரே நேரத்தில் கவரும் கலைநுட்பத்தைக் கையாண்டார்.

சிங்கீதம் சீனிவாசராவ் என்றதும் கமல்ஹாசனுடனான அவரது கலைக் கூட்டணி சட்டென்று நினைவுக்கு வரும். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் சினிமாவின் மைல்கற்கள். இவர் தமிழில் இயக்கிய படங்கள் மொத்தமே 9 படங்கள்தான். அதில் கமல்ஹாசனுடன் இணைந்த படங்கள் ஆறு.

கமல்ஹாசனின் முதல் தயாரிப்பான 'ராஜ பார்வை' படத்தை இயக்கியவர் சிங்கீதம்தான். அது சிங்கீதத்துக்கு தமிழில் 2-ஆவது படமாகும். பரீட்சார்த்த படமான அந்தப் படத்தை விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற வைத்தது சிங்கீதம் - கமல்ஹாசன் - இளையராஜா கூட்டணி. 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில், குள்ள மனிதனாக கமல்ஹாசனை நடிக்கவைத்து, அன்றைய காலகட்டத்தில் கணினித் தொழில்நுட்பம் ஏதுமின்றி, கேமரா கோணங்கள், லென்ஸ் மாயாஜாலங்கள் மூலமே சாதித்துக் காட்டிய விதம் உலகத் திரைப்பட வரலாற்றிலேயே போற்றத்தக்கது.

'மைக்கேல் மதன காம ராஜன்' படத்தில் நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களின் குழப்பமான நகைச்சுவைக் காட்சிகளை, மிகத் துல்லியமான திரைக்கதையாலும் வேகமான படத்தொகுப்பாலும் செதுக்கி, இன்றளவும் நகைச்சுவைத் திரைப்படங்களுக்கு ஒரு பாடப்புத்தகமாகத் திகழச் செய்தார். இருவரும் இணைந்த 'மகளிர் மட்டும்', 'காதலா காதலா' ஆகிய படங்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. சமூகக் கருத்துகளையும், எல்லை மீறிய நகைச்சுவையையும் மிக இயல்பாகத் திரையில் கொண்டுவந்து வெற்றி கண்டார் சிங்கீதம்.

சினிமாவை வியாபாரமாக மட்டும் பார்க்காமல், அதைக் கதைகூறும் ஓர் உயரிய கலையாகப் பார்த்தவர் சிங்கீதம். கன்னடத் திரையுலகில் டாக்டர் ராஜ்குமாருடன் இணைந்து அவர் தந்த 'ராஜாகோபி', 'மயூரா' போன்ற திரைப்படங்கள் கன்னடச் சினிமாவின் பொற்காலப் படைப்புகள். இவர் சிறந்த இசையமைப்பாளராகவும் பணியாற்றி, தன் பல்துறை ஆற்றலை நிரூபித்தவர்.

மொழி எல்லைகளைக் கடந்து சிந்தித்த மிகச் சில இந்திய இயக்குநர்களில் சிங்கீதம் சீனிவாசராவ் முதன்மையானவர். நுட்பமான நகைச்சுவை, வேகமான திரைக்கதை, தொழில்நுட்பப் பரிசோதனைகள், மனித உணர்வுகளின் ஆழம் ஆகியவை இவரது படைப்புகளின் பொதுவான பண்புகளாக இருந்தன. தலைமுறை கடந்து இன்றுவரை இளைய தலைமுறை இயக்குநர்களுக்கு ஒரு மாபெரும் உத்வேகமாக இவரது படைப்புகள் விளங்குகின்றன.

தனது 94 வயதிலும் கூட இளைஞர் போல மனதளவில் சுறுசுறுப்பாகக் காணப்பட்ட சிங்கீதம், கடைசியாக இயக்கிய படம் சிங் கீதம். 2026-ஆம் ஆண்டில் இப்படம் வெளியாகி, அவரது இயக்கத் திறமையை ஜென் சீ தலைமுறைக்கும் உணர்த்திச் சென்றுள்ளது.

திரைப்படங்களில் புதிய கதவுகளையும் சாத்தியக் கூறுகளையும் திறந்துவைத்த ஒரு முன்னோடியை இந்தியத் திரையுலகம் இன்று இழந்து நிற்கிறது. காலத்தால் அழியாத தன் கலைப் படைப்புகளின் மூலமும், அவர் விட்டுச் சென்ற புதுமை விரும்புதலின் மூலமும் சிங்கீதம் சீனிவாசராவ் என்றும் ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments