துன்பக் கடல் என்பதேன்?
ஆழ்ந்து அகன்று நிற்கும் நீர்ப்பரப்பை ஆழி என்றும் ஆர்கலி என்றும் வாரிதி என்றும் உலகில் உள்ள நிலப்பரப்பை சூழ்ந்து நிற்கும் பெருநீர்ச் சூழலை புணரி என்றும் ஓயாது நீரலையால்...
ஆழ்ந்து அகன்று நிற்கும் நீர்ப்பரப்பை ஆழி என்றும் ஆர்கலி என்றும் வாரிதி என்றும் உலகில் உள்ள நிலப்பரப்பை சூழ்ந்து நிற்கும் பெருநீர்ச் சூழலை புணரி என்றும் ஓயாது நீரலையால் ஒலித்துக் கொண்டிருக்கும் பெருநீர் விரிவைக் கடல், பெருங்கடல் என்றும் உப்பு நீர்த்தன்மையால் உவரி என்றும் இன்னும் பல பெயர்களில் 'கடல்' தமிழ் இலக்கியங்களில் பயன்பாட்டில் உள்ளது.
இன்பமும் துன்பமும் கலந்து தோய்ந்து மனித வாழ்க்கையில் அவை அனுபவிக்கும் பொருளாகி அதன் வேறுபாடு பொருட்டு உள்ளுணர்வுகள் மாற்றம் பெறுகின்ற அமைப்பில் மக்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்றனர்.
கடல் என்ன துன்பம் தருவதா?. கடல்தான் லட்சக்கணக்கான உயிர்வகைகளின் உறைவிடமாக இருந்து உணவளிக்கிறது. அப்படியிருக்க அதன் அளவிட இயலாத பெரும்பரப்பளவைக் கருத்தில் கொண்டு துன்பத்தைக் கடலாக உவமையாக்கியுள்ளனர்.
Advertisement
Advertisement
இன்பத்தை மழை, வெள்ளம் என்றும் அருவி என்றும் நீர்வீழ்ச்சி, பெருகும் நதி என்றும் ஓடை என்றும் இன்ப ஊற்றுக்கேணி என்றும் குறிப்பிடும் நம் புலவர்களும் கவிஞர்களும் துன்பத்தை மட்டும் எல்லையற்று பறந்து கிடக்கும் கடலோடு ஒப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
கொள்ள மாளா இன்ப வெள்ளம்
கோதுஇல தந்திடும் என் வள்ளலேயோ
-(திருவாய்மொழி)
ஆற்று இன்ப வெள்ளமே- திருவாசகம்
ஆட்டும் சுட்டு விரல் கண்டே ஆடிற்று வையம் என்று
கேட்டு நான் இன்ப ஊற்றுக்கேணியில் குளிப்பது எந்நாள்?
-(பாரதிதாசன் கவிதை )
பிறவியைத் துன்பமாகக் கருதி அதில் இருந்து மீண்டு இறைப்பதத்தை அடையவேண்டும் என்பதே ஆன்மநேயர்களின் உள்ளக்கிடக்கையாக, தேடலாக உள்ளது.
அதனால் பிறவிப்பெருங்கடலை நீந்திக் கரை சேர்பவர் இறைவன் அடி சேர்பவர் என்று வள்ளுவர் பதிவு செய்தார்.
தமிழ் இலக்கியங்களில் துன்பத்தை, துயரத்தை, இடரைக் கடலோடு ஒப்பிட்டு பாடியதற்கான சான்றுகள் உள்ளன.
'செய்யசுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று'
-நாலாயிர திவ்வியப் பிரபந்தம் -
முதல் திருவந்தாதி - பொய்கையாழ்வார்
என்புருகி இனவேல் நெடுங்கண்கள்
இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர்
தோணி பெறாது உழல்கின்றேன்
- நாச்சியார் திருமொழி
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்
- திருவாசகம்
கடல் போல துன்பம் பெரிதென்று காட்டினார்கள். கடலும் தன்னைப்போல துன்பப்படுவதாக அமைத்துப் பாடியது எல்லையற்ற துன்பமே துன்பப்படுவதைப் போன்றது.
நெய்தல் நிலத்தில் வாழும் தலைவியானவள் தலைவனின் பிரிவால் மனம் வருந்தி கடற்கரையில் அமர்ந்திருக்கும் நள்ளிரவு வேளையில் வெள்ளிய மலர்களை உடைய தாழைகளின் மீது மோதி இடையறாது ஒலி எழுப்பும் ஆரவாரக் கடல் அலைகளைக் கண்டவுடன் தன்னைப் போலக் கடலும் துன்பப்படுவதாக எண்ணி 'நீ யாரை நினைத்து வருந்துகிறாய்' என்பதாக கடலைப்பார்த்து தலைவி கேட்பதாக அம்மூவனார் பாடுகிறார்.
யாரணங் குற்றனை கடலே!...
.....
வெள்வீத் தாழை திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே
-குறுந்தொகை 163
கீழ்க்கண்ட குறளில் இன்பத்தைக் கடலோடு வள்ளுவர் ஒப்பிடுகிறாரே என்று பார்த்தால் அதற்குப் பிறகுவரும் துன்பம் அக்கடலை விட பெரிதானதாக இருக்கிறது என்று வரையரைக்குள் அடக்காமல்
துன்பத்தைக் கூறியுள்ளார்.
இன்பம் கடல்மற்றுக் காமம்; அஃதுஅடும்கால்
துன்பம் அதனின் பெரிது.
- திருக்குறள் 1166
இன்பத்தை சுவையாகக் கண்டதால்தான் அதை நந்நீர்ச் சுனைகளாக, வெள்ளமாக, நீர்வீழ்ச்சியாக, ஊற்றுக்கேணியாக எடுத்துக்காட்டியுள்ளனர்.
துன்பத்தை வேண்டாததாக, ஏற்றுக்கொள்ள இயலாததாகக் கருதியதால் உப்புநீர்க் குவியமாக இருக்கும் கடலை அதற்கு உதாரணமாக்கியுள்ளனர் என்றும் ஒரு கோணத்தில் பொருள் கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.