தொன்றுதொட்டுத் தொடரும் கார்த்திகை தீபம்
இறைவனே தீப்பிழம்பாய்த் திருவண்ணாமலையாய் நின்றதற்கான அடையாளமாய் கார்த்திகைத் தீப விளக்கு வழிபாடாகத் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு தொடர்கிறது.

- தமிழாகரர் தெ. முருகசாமி
இறைவனே தீப்பிழம்பாய்த் திருவண்ணாமலையாய் நின்றதற்கான அடையாளமாய் கார்த்திகைத் தீப விளக்கு வழிபாடாகத் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு தொடர்கிறது.
அகநானூறு, களவழி நாற்பது போன்ற சங்க நூல்களில் இக்கார்த்திகை விளக்கு பற்றிய குறிப்புகள் குவியலாக உள்ளன. பின்னர் மலர்ந்த சமய நூல்களில் 'கார்த்திகை விளக்கீடு காணாது போதியோ' என திருஞானசம்பந்தர் தம் மயிலாப்பூர் திருமுறை பதிகத்தில் இறந்த பூம்பாவையை எழுப்பும் நிமித்தமாகக் கார்த்திகையை நினைவூட்டினார்.
Advertisement
Advertisement
17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கற்பனைக் களஞ்சியமாம் நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சோணசைலமாலை என்னும் நூல், திருவண்ணாமலை பற்றிய அதி அற்புத நூலாகத் திகழ்கிறது. திருவண்ணாமலை பற்றிய புராண முன்னெடுப்புகளுள் மகுடமாகத் திகழ்வது கார்த்திகை விளக்காகும். அது பற்றிய கற்பனையை வாரி இறைக்கும் நூலாக சோணசைலமாலை உள்ளது.
கார்த்திகை விளக்கு பற்றி சிவப்பிரகாசர் உள்ளவாறே கூறினாலும், இவ்விளக்கு சமயப் பாங்கோடு சமூகப் பாங்கின் பங்களிப்பாக ஏற்றப்படுவதாகக் கூறும்போது,
கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து
கண்டவர் அகத்து இருள் அனைத்தும்
சாய்த்துநின் றெழுந்து விளங்குறும் சோண
சைலனே! கயிலைநா யகனே!
-(சோணசைலமாலை 8)
என்றார். விளக்கு என்றால் இருட்டை விலக்கிப் பொருளை விளங்கக் காட்டுவது என்று பொருள். பகலன்ன வாய்மை எனக் கூறும் புறப்பொருள் வெண்பா மாலைத் தொடர், பகலுக்கான விளக்கு சூரியன் என்பதைச் சொல்லாமல் சொல்லிக் காட்டியது. இது சமூகப் பாங்காயினும் இச்சமூகப் பாங்கே சமயப் பாங்கில் பரிமளிக்கும் போது ஆன்மாவின் அக இருட்டை அகற்றி, ஞான வெளிச்சத்தைத் தருவதற்கான ஞான விளக்கே கார்த்திகை விளக்காம் என்பது சிவப்பிரகாசரின் கற்பனை.
அடிப்படையான சமய சமுதாய இருட்டை நீக்கும் கார்த்திகை விளக்கு பற்றிய கற்பனையை நீட்டி உரைக்கும் சுவாமிகள், பிறவி என்னும் கடலைக் கடக்கத் தத்தளிக்கும் ஆன்மாவாம் மரக்கலத்திற்குத் திசையை அறிவித்துக் கரை சேர்க்கும் கலங்கரை விளக்காக உள்ளதே திருஅண்ணாமலை என்கிறார்.
கார்த்திகை தீபம் ஏற்றும் நாள் முழு நிலா நாளாகும். வெண்ணிறமுடைய அந்த நிலா வெண்ணிற அன்னப் பறவை போலுள்ளதாம். அது மெல்ல மெல்ல நகர்ந்து செந்நிறமுடைய மலை உச்சியின் தீபத்தை நெருங்கும் காட்சியானது செந்தாமரை மலரை நாடும் அன்னம் போல் உள்ளதாம் (பாடல் 5).
அதுமட்டுமன்றி இறைவன் தன் முடியில் பிறையைத்தான் எப்போதும் சூடியிருந்தாலும் நெருப்பு மலையான அண்ணாமலையானின் கார்த்திகை நாளில் அச்சிவன் முழு நிலவைச் சூடிக் கொள்ளுவதான கற்பனையானது பிறையான குறை நிலா, நிறை நிலாவாக (பெளணர்மி) அத்தீபத் திருநாளில் மட்டுமே கூறப்படுவதாகச் சிலாகித்துள்ளார் சிவப்பிரகாசர்.
அத்தீபத் திருநாளன்று மட்டுமே கிழக்கே முழு நிலாத் தோற்றமும் மேற்கே அஸ்தமனமாகும் முழு சூரியத் தோற்றமும் வானத்தில் தோன்றும்போது இத்தோற்றத்தை உதயகிரி அஸ்தமன கிரி என்பதாகக் கூறுவர். இவ்விரு மலைகளுக்கும் இடையில் ஓங்கிய திருவண்ணாமலையின் கார்த்திகைத் தீபமானது இரண்டு பக்கங்களில் கட்டப்பட்ட குடங்களுடன் கூடிய காவடியை ஒருவர் தூக்கி வந்து இறக்கி வைப்பது போன்ற காட்சியாய்ச் சித்திரிக்கின்றார் சிவப்பிரகாசர் (பாடல் 39).
இத்திருநாளன்று மலை வலம் வருவோரைப் பார்க்கும் மேலுலகத் தேவர்கள் தமக்குக் கால்கள் இருந்தால் நாமும் சுற்றி வந்து ஈசன் அருள் பெறலாமே எனத் தமக்குப் பூமியில் போகக் கால் இல்லாமைக்காக வருந்துவதாக சிவப்பிரகாசர் பாடுவது (பாடல் 74) கார்த்திகை தீப நாளில் ஏராளமானோர் கூடும் சிறப்பைக் கூறும் கற்பனையின் மகுடமாகும் எனலாம்.
பொதுவாக இறைவனை மனத்துக்கு எட்டாத நுண்ணியன் என்றும் மறை ஆகமங்கள் எல்லாம் கூறி அலறினும் காண முடியாதவன் என்றும், கூறும் குறைகளை அகற்றி அவனை எளிதாக எல்லோரும் கண்ணாரக் கண்டு மகிழுமாறு பெரிய மலை வடிவில் அதிதூல வடிவினனாக உள்ளவனாய்ச் சிவப்பிரகாசர் கூறும் திருவண்ணாமலை பற்றிய கருத்து (பாடல் 7) இதுவரை எவரும் கூறாத கற்பனை கடந்த கடவுள் பற்றிய புதுக்கருத்து எனலாம்.
கேளீர் தமிழ் வரலாறு-15
'தீங்கற்ற சென்னைத் தினசரி!' பாரதிதாசன் பாராட்டிய 'சுதேசமித்திரன்' பேராசிரியர் ய. மணிகண்டன் எழுதும் தொடர் கதிரில் இடம்பெற்றுள்ளது.