FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்த வாரம் கலாரசிகன் - 06-09-2026

ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற திருமுறை மாநாடு-திருமந்திரக் கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.

6 செப்டம்பர் 2026, 6:52 pm IST
பகிர்:

புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்துடன் இணைந்து ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற திருமுறை மாநாடு-திருமந்திரக் கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். கவிஞர் தங்கம் மூர்த்தி, புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலாளர் புதுகை ச.பாரதி தொடங்கி பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும், இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் ஆகம வழிபாட்டு ஆய்வுக் குழுவின் தலைவருமான மாண்பமை நீதிபதி மெ.சொக்கலிங்கத்துக்கு 'அருள்மொழிச் செல்வர்' என்கிற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார் பேரூர் ஆதீன குருமகா சந்நிதானம் தவத்திரு மருதாசல அடிகளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிக்கொணரப்பட்ட 'திருமந்திர ஆய்வுரைக்களஞ்சியம்' என்ற நூலின் மறுபதிப்பு அந்த மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

திலகவதியார் திருவருள் ஆதீனம் தொடங்கப்பட்டதன் வரலாற்றைக் கேள்விப்பட்டபோது வியப்பு மேலிட்டது. அப்போது ஆதீனகர்த்தர்களாக இருந்த பேரூர் சாந்தலிங்க அடிகளாரும், குன்றக்குடி அடிகளாரும் ஆசி வழங்கி உருவாக்கிய ஆதீனம் திலகவதியார்திருவருள் ஆதீனம். ஆன்மிகப் பேச்சாளராக இருந்து சைவ நெறி பரப்பிக் கொண்டிருந்த, சாயிமாதா சிவ பிருந்தாதேவியால் நிறுவப்பட்ட திலகவதியார் ஆதீனம்தான், தமிழகத்தின் முதலாவது பெண் ஆதீனமாகத் திகழ்கிறது.

Advertisement

Advertisement

அந்த ஆதீனத்தின் இரண்டாவதுகுருமகா சந்நிதானமாகப் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கும் தவத்திருதயானந்த சந்திரசேகர சுவாமிகளுக்கு அந்தப் பெயரை வழங்கியவர் காஞ்சி மகாமுனிவர் என்று போற்றப்படும் சங்கராச்சாரியார் ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி என்று கேள்விப்பட்டபோது, அந்த ஆதீனம் குறித்தும், குருமகா சந்நிதானம் குறித்துமான எனது மரியாதை மேலும் உயர்ந்தது. தனது பெயரே அவருக்கும் இருப்பதால், 'தயானந்த' என்பதை இணைத்துக் கொள்ளச் சொல்லி, அருளாசி வழங்கினாராம் காஞ்சிப் பெரியவர்.

மீள் பதிப்புக் கண்டிருக்கும் திருமந்திர ஆய்வுரைக்களஞ்சியம் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகளால் தொகுத்துப் பதிப்பிக்கப் பட்டது. திருமந்திரத்தின் ஒன்பது தந்திரங்களில் உள்ளவற்றைப் பல்வேறு தலைப்புகளாகப் பிரித்து, 97 ஆய்வுக் கட்டுரைகளாக வழங்குகிறது இந்த நூல். சுவாமி தயானந்த சரஸ்வதியும், அருட்செல்வர் நா. மகாலிங்கமும் அணிந்துரை வழங்கிய ஆய்வுரைக்களஞ்சியம் எனும்போது அதன் சிறப்புக் குறித்துச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த ஆய்வுரைக்களஞ்சியத்தின் முதலாவது கட்டுரையே, பேரூர் ஆதீன குருமகா சந்நிதானமாக விளங்கிய தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் திருமந்திரம்-பாயிரம் குறித்தது. ''நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழியாகிய மந்திரத்தைப் பற்றுக''; 'பற்றற்றான் பற்றினைப் பற்ற முழுமையாக முயலுக என்பதாம் பாயிரப் பகுதியின் முடிந்த முடிவு' என்கிறார் அவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின், சைவ சித்தாந்தத் துறையின் மேனாள் தலைவர் முனைவர் வை. இரத்தின சபாபதி, புதுச்சேரி மூதறிஞர் தி.வே.கோபாலய்யர் உள்ளிட்ட பல அறிஞர்களின் கட்டுரைகள் இந்த ஆய்வுரைக்களஞ்சியத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இதில் கட்டுரை வழங்கி இருக்கும் பல தமிழறிஞர்கள் இப்போது நம்மிடையே இல்லை. அவர்களது தமிழ்ப் பற்றையும், சொல் வளத்தையும் பறைசாற்றுவதாக அமைகிறது இந்த நூல்.

இது வரை 13 நூல்களை எழுதி இருக்கும் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள், இதேபோல திருவாசக ஆய்வுரைக்களஞ்சியத்தையும் வெளியிட்டிருக்கிறார். தனது குருவான சாயிமாதா சிவ பிருந்தாதேவி குறித்து 'ஒரு பெண் துறவியின் சமய வாழ்வும்-சமுதாய வாழ்வும்' என்கிற நூலும், 'வள்ளலார் நோக்கில் நால்வர் பெருமக்கள்', 'சிலம்பு ஒலிக்கும் சிந்தனைகள்' உள்ளிட்ட புத்தகங்களும் எழுதி இருக்கிறார் அவர்.

புதுக்கோட்டை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது, அங்கே முனைவர் சண்முக. செல்வகணபதியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரும், அவரது மகள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இசைத்துறையின் தலைவர் முனைவர் செ. கற்பகமும் இணைந்து மிகப் பெரிய பணியொன்றை செய்து வருகிறார்கள்.

தமிழகம் பல தலைசிறந்த இசைக் கலைஞர்களை வழங்கி இருக்கிறது. அந்த இசைக் கலைஞர்கள் குறித்த தகவல்களோ, புகைப்படங்களோ அடுத்த தலைமுறைக்குப் பாதுகாக்கப்படவில்லை என்பது நமது துரதிருஷ்டம். அந்தக் குறையை ஓரளவுக்குத் தீர்க்கும் நல்லதொரு அரிய முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் தந்தையும், மகளும்.

முனைவர் சண்முக.செல்வ கணபதி திருவீழிமிழலையில் பிறந்தவர்.

திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும், முப்பதுக்கும் அதிகமான விருதுகளையும் பெற்றிருக்கும் முனைவர் சண்முக. செல்வகணபதி, இசைத் தமிழ், நாட்டியத் தமிழ் குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நிகழ்த்தி வருபவர். அவரது ஆய்வுகளுக்கு இடையில் ஆற்றிவரும் அரும்பணிதான் இசைத் தமிழ் அறிஞர்கள் குறித்த தொகுப்பு.

இதுவரையில் இரண்டு தொகுப்புகள் அவரால் வெளிக்கொணரப்பட்டிருக்கின்றன. சீர்காழி முத்துத்தாண்டவர், தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை, சீர்காழி அருணாசலக் கவிராயர், கோபால கிருஷ்ண பாரதியார், தஞ்சை நால்வர் குறித்து இன்றைய தலைமுறையினர் பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்கள் குறித்து முறையாக நாம் ஆவணப்படுத்தவில்லை. அந்தக் குறையைத் தீர்க்க உதவுகிறது

சண்முக. செல்வகணபதியும், செ. கற்பகமும் இணைந்து வெளிக்கொணர்ந்திருக்கும் 'இசைத்தமிழ் அறிஞர்கள்' தொகுதி.

மாண்பூண்டியா பிள்ளை, புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை குறித்தெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கும் செய்திகளும், கேள்விப்படாத தகவல்களும் இரண்டாம் தொகுதியில் இடம்பெற்றிருப்பதைப் படித்து மகிழ்ந்தேன். யாராவது புரவலர்கள் முனைவர் சண்முக. செல்வகணபதிக்கு ஆதரவளித்து அனைத்து இசைக் கலைஞர்களையும் ஆவணப்படுத்தும் வகையில் 'காஃபி டேபிள் புக்' வெளிக்கொணர பணிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

இவர்களையும் விட்டுவிட்டால், இசைக் கலைஞர்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்ய அடுத்த தலைமுறையில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது கவிஞர் புஷ்பா குமாரின் 'உணர்வின் துளிகள்' கவிதைத் தொகுதி. அதில் இடம்பெற்றிருந்த 'ஆழி' என்கிற கவிதையில் இடம்பெற்றிருக்கின்றன இந்த வரிகள்.

ஆழியே, உன் ரகசியம் என்ன?

உயிருள்ளவரை வைத்துக் கொள்கிறாய்

உயிரற்றவற்றை உமிழ்ந்து விடுகிறாய்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments