FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வெள்ளிமணி

சௌபாக்யம் அருளும் கௌரி விரதங்கள்!

சென்னை பராசக்தி பல்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும் துதிக்கப்படுகிறாள். அந்த வடிவங்களில் "கெளரி ரூபம்' தனித்துவமான சிறப்புகொண்டது.

Updated On : 8 ஜூன் 2018, 12:00 am IST
பகிர்:

சென்னை பராசக்தி பல்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும் துதிக்கப்படுகிறாள். அந்த வடிவங்களில் "கெளரி ரூபம்' தனித்துவமான சிறப்புகொண்டது. ஒருமுறை ஈசன் தேவியுடன் தனிமையில் இருந்தபோது விளையாட்டாக அம்பிகையின் கரியநிறத்தைச் சுட்டிக் காட்டி "காளி' என்று விமர்சிக்க, அதனால் பொய்க் கோபம் கொண்ட அன்னை, தனது கருநிறத்தை நீக்கி, வெண்ணிறம் பெற்றாள். தேவியின் அந்த வெண்மையான எழில் வடிவமே "கெளரி' ஆகும். அம்பிகையினிடமிருந்து நீங்கிய கரிய உருவம் காளியாக உருப்பெற்றது. 

அருணகிரிநாதர் கெளரி தேவியை, "உலகு தரு கெளரி' எனப் போற்றுகிறார். கெளரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடாகும். கெளரி வடிவங்கள் 108 என்று புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் 16 வடிவங்கள்(சோடஷ கெளரிகள்) மிகச் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. 

ஞானத்தைக் கொடுப்பது "ஞானகெளரி', ஆயுள் விருத்தி அளிப்பது "அமிர்த கெளரி', அன்பை விதைப்பது "சுமித்ர கெளரி', சகல சம்பத்துக்கள் அருள்வது "சம்பத் கெளரி', யோக சித்தி அளிப்பது "யோக கெளரி', தேக பலம் அளிப்பது "வஜ்ரச்ருங்கல கெளரி', வேண்டியதை அருள்வது "த்ரைலோக்ய மோஹன கெளரி', நல்ல கணவனைத் தந்தருள்வது "சுயம்வர கெளரி', குழந்தை பாக்யம் அருள்வது "கஜகெளரி', நல்ல புகழ், கீர்த்தியை தருவது "கீர்த்திகெளரி', துணிவைக் கொடுத்து எதிரிகளை விரட்டுவது "சத்யவீர கெளரி', வரங்களை அளித்து தம்மை வணங்குபவர்களை கொடை வள்ளல்களாக மாற்றுவது "வரதான கெளரி', செல்வ வளங்களை அளிப்பது, "சுவர்ணகெளரி, ராஜயோகம்
அருள்வது "சாம்ராஜ்ய கெளரி', கஷ்டங்கள் நீக்குவது, "அசோககெளரி', நம் விருப்பங்களை நிறைவேற்றுவது "மனோரதபூர்த்தி கெளரி' என்ற இந்த சோடச கெளரி மூர்த்தங்களை விரதமிருந்து வழிபடுவது அதிக பலனைத் தரும்.

Advertisement

Advertisement

கெளரி வழிபாடு, பல்வேறு புராணங்களிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் இந்த ஜூன் மாதம் 14-ஆம் நாள், "புன்னாக கெளரி' விரதமும், 17-ஆம் நாள், "கதலி கெளரி' விரதமும், 19 -ஆம் நாள், "ஆரண்ய கெளரி' விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றன. 

புன்னாக கௌரி விரதம்: புன்னை மரத்தடியில், நன்றாக சுத்தம் செய்து, கோலமிட்டு, மேடை அமைத்து, பூக்களால் அலங்கரித்து அதன் மீது அம்பிகையின் படத்தைவைத்து பூஜிக்க வேண்டும். புன்னை மரம் அருகில் இல்லாவிட்டால் பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து, அலங்கரித்து, கோலமிட்ட ஓர் ஆசனத்தில் புன்னைஇலைகள், பூக்களைப் பரப்பி, அதன்மீது அம்பிகையின் படத்தை வைத்து ஷோடச உபசாரங்களுடன் புன்னை இலைகளாலும் புன்னை பூக்களாலும் அர்ச்சனை செய்யவேண்டும். இந்த பூஜை செய்வதன் மூலம் மன சஞ்சலங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமையும்.

கதலி கௌரி விரதம்: ஒரு நல்ல வாழை மரத்தடியில் மேற்சொன்னவாறே செய்யலாம். அல்லது வீட்டிலேயே சுத்தமான இடத்தில் கோலமிட்டு வாழை இலையை வைத்து அதன் மீது அம்பிகை படம் பூஜிக்க வேண்டும். இந்த பூஜையில் 108 வாழை பழங்களை நிவேதனம் செய்து அதை எட்டு வயதுள்ள சிறுமிகளுக்கு தர வேண்டும். இதனால் ஜாதகத்தில் சுக்கிர கிரகத்தால் ஏற்பட்டுள்ள களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். வாழையடி வாழையாகக் குலம் தழைக்கும்; குழந்தை செல்வம்கிட்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஆரண்ய கெளரி விரதம்: அம்பிகையின் தெய்வீக சக்தி அனைத்திலும் கொலுவிருக்கிறது. காடு, மலை, மரங்கள், நதி என அனைத்து இயற்கை வடிவங்களையும் தெய்வீக சக்தியின் வெளிப்பாடாக எண்ணிப் பூஜிப்பது நம் பண்பாடு. அந்த வகையில், வன ரூபமாக காட்சிதரும் தேவியை பூஜிப்பதே "ஆரண்ய கெளரி விரதம்' அல்லது வன கெளரிவிரதம். 

இந்த விரதமானது நாம் விரும்புகின்ற தெய்வ தரிசனத்தையும், திருமணம் வரத்தையும், நோய் நிவாரணத்தையும் நிறைவேற்றித் தரும். 

மேற்கண்ட எல்லா விரதத்திற்கும் விரதம் இருக்கும் தினத்தன்று காலையில் எழுந்து நீராடி, வேண்டுதலுக்கேற்றபடி சங்கல்பம் செய்து கொண்டு விரத பூஜையைச் செய்யவேண்டும். அன்று முழுவதும் பால், பழங்கள் மட்டுமே உண்டு, உபவாசம் இருந்து, முறைப்படி அன்னையை வணங்கி வழிபட வேண்டும். அம்பிகையின் படத்தைவைக்காமல் பூர்ண கும்பத்தில் அம்பிகையை ஆவாஹனம் செய்து வழிபடுவதுண்டு. சில பகுதிகளில் நோன்புச் சரடு கட்டிக் கொள்வதும் வழக்கத்தில் இருக்கிறது. 

ஆரண்ய கெளரி விரத பூஜை நிறைவில், ரிக் வேதத்தில் இருந்து "அரண்ய சூக்தம்' பாராயணம் செய்வதை பூஜையின் ஒரு பகுதியாக வைத்திருக்கிறார்கள். 

நிலைத்த செல்வம், தகுந்த உத்தியோகம், பெண்களுக்குப் பூப்பு, மாதவிடாய் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். தக்க வயதில் கன்னிப் பெண்கள் பூப்படைவர்.
திருமணமானவர்களுக்கு மக்கட்பேறு கிட்டும். குழந்தைகள் நோய் நொடியின்றி நலமுடன் வாழ்வார்கள். தானிய விளைச்சல் பெருகி, சுபிட்சம் ஏற்படும் என்பது 
ஐதீகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments