சங்கடம் தீர்க்கும் சங்கர நாராயணர்
சங்கரநாராயணரை வழிபட்டால் குழந்தைப்பேறு, செல்வம், நோய் தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்..
சைவமும் வைணவமும் ஒன்றே என்பதை உணர்த்தும் வகையில், சிவனும் விஷ்ணுவும் இணைந்து ஒரே வடிவாக அருளும் கோலம் சங்கரநாராயணர் திருக்கோலம். சங்கரன்கோவிலில் சங்கரநாராயணன் இருப்பதைப் போல, தஞ்சாவூரிலும் சங்கரநாராயணன் கோயில் ஒன்றுள்ளது.
இங்கு கோயில் உருவானதன் பின்னணியில் ஒரு சம்பவம் உள்ளது. ஆதியில், பீம சோழன் என்னும் மன்னன் கரிகாலனுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்தான். இவன் கமல பத்ராக்ஷி என்ற கேரள தேசத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். இவள் சங்கரநாராயணனின் தீவிர பக்தையாவாள்.
தஞ்சாவூரில் சங்கரநாராயணனை வழிபாடு செய்ய கோயில் இல்லையே என்ற ஏக்கம் நிறைந்தவளாகக் காணப்பட்டாள். அவளுக்குக் குழந்தைப் பேறும் இல்லாமல் போனதால், அந்த ஏக்கமும் சேர்ந்துகொண்டது.
Advertisement
Advertisement
பீம சோழ தம்பதியருக்கு நீண்டநாள்களாக குழந்தைப்பேறு இல்லை. தங்களுக்கு மக்கட் செல்வம் ஏற்பட வேண்டும் என்று மனமுருக சிவபெருமானை பிரார்த்தித்தனர்.
சிவபெருமான் ஒருநாள் பீம சோழன் மனைவியின் கனவில் தோன்றி, "தஞ்சை பெரிய கோயிலில் வீற்றிருக்கும் பிரகதீசுவரருக்கும் மேலராஜ வீதியில் வீற்றிருக்கும் கொங்கணேசுவரருக்கும் இடையில் சங்கர நாராயணர் என்ற பெயரில் எனக்கும் விஷ்ணுவுக்கும் சேர்த்து ஒரு கோயிலைக் கட்டுங்கள். நான் அங்கு லிங்க ரூபமாக இருக்கிறேன். உன் கணவன் பீம சோழன் இப்பணியைச் செய்தால், உங்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும்' என்று கூறி மறைந்தார்.
தான் கண்ட கனவை தன் கணவனிடம் அரசியார் கூற, பீம சோழன் மனமகிழ்ந்து தன் மனைவி மந்திரிகளுடன் சென்று பார்த்ததில் பிரகதீசுவரர் கோயிலுக்கும் கொங்கணேசுவரர் கோயிலுக்கும் நடுவில் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் சுயம்பு லிங்கம் இருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்று, கனவில் சிவபெருமான் கூறியபடி அந்த லிங்கத்துக்குக் கோயில் கட்டினான். திருச்சுற்றில் பார்வதிதேவி, லட்சுமி தேவி சமேதராக சங்கரநாராயணனுக்கு சிலைகள் செய்து பிரதிஷ்டை செய்தான்.
தினமும் சிவகங்கை குளத்தில் மூழ்கி பக்தி சிரத்தையுடன் ஸ்நானம் செய்து, சங்கர நாராயணரை வணங்கி வந்தான். காலக்கிரமத்தில் பீம சோழன் தம்பதியருக்கு ஆண் மகவு ஒன்று பிறந்தது என்பது வரலாறு.
இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியான சிவன் லிங்க வடிவில் சங்கரநாராயணனாகவும்; கோமதி அம்மன் பாலாம்பிகையாகவும் தரிசனம் தருகிறார்கள். இதுதவிர லட்சுமி, பார்வதி தேவி சமேத சங்கரநாராயணன் முழுவுருவத்திலும் எழுந்தருளியுள்ளனர்.
சைவ, வைணவ ஒற்றுமையின் பொருட்டு எழுந்தருளியுள்ள மூர்த்தி சங்கரநாராயணர். இவ்வுருவம் ஒரே கல்லில் வலப்பக்கம் ஜடை, கங்கை, சந்திரன், நெற்றிக் கண், திருநீறு, மகர குண்டலம், பாம்புடன் கூடிய ருத்ராட்ச மாலை, மழு, அபயஹஸ்தம், புலித்தோல் முதலியவற்றுடன்கூடிய சிவபெருமான் வடிவாகவும், இடப்பக்கம் கிரீடம், திருநாமம், திருவாபரணங்கள், சங்கஹஸ்தம், பஞ்சகச்சம் இவற்றுடன் கூடிய திருமாலாகவும் காட்சியளிக்கிறார். இதற்கேற்ப இருபுறமும் பார்வதி, லட்சுமி உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
திருச்சுற்றில் செல்வகணபதியும், அருகில் நாகர், வள்ளி } தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர், கஜலட்சுமி, லட்சுமி தேவி மற்றும் பார்வதிதேவி சமேதராக சங்கரநாராயணன், சீதை சமேத ராமபிரான், லட்சுமணனும், தனி சந்நிதியில் அனுமன், காசி விசுவநாதர், விசாலாட்சியும் அருள்கின்றனர். விசாலாட்சி சந்நிதியில் ஓர் அம்மையார் அமர்ந்துள்ள சிற்பம் ஒன்றுள்ளது. அதனை ஒளவையார் என்கிறார்கள்.
நவகிரக சந்நிதி அருகில் தனி மேடையில் சனீஸ்வரன், சூரியன், காலபைரவரும் எதிரே ஜுரஹரேசுவரரும் உள்ளனர். சண்டிகேசுவரர் சந்நிதி அருகில் தலமரமான வில்வமரம் உள்ளது.
பிரதோஷம், தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி மற்றும் சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. அக்டோபர் 25}ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஐப்பசி மாத பெüர்ணமியை முன்னிட்டு மாலை 5 மணிக்கு கோயிலில் அன்னாபிஷேகம் விமரிசையாக நடைபெற இருக்கிறது.
சங்கரநாராயணரை வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும், செவ்வாய் தோஷம் , சர்ப்ப தோஷம் விலகும், நோய் பாதிப்புகள் விலகும், சங்கடங்கள் தீரும், பணவரவு உண்டாகும் என்பது நம்பிக்கை.
காலை 7 மணிமுதல் பகல் 12 வரையும், மாலை 5 மணிமுதல் இரவு 8.30 வரையும் தரிசனத்துக்காக திறந்திருக்கும் சங்கரநாராயணன் கோயில்
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா நுழைவாயில் அருகில் மேலவீதியில் அமைந்துள்ளது. விசேஷ தினங்களில் கூடுதல் நேரம் திறந்திருக்கும்.
- தஞ்சாவூர் இரா. சுரேஷ்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.