FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பள்ளிப்படைக் கோயில்கள்

போரில் வீர மரணமடைந்த அல்லது இயற்கையாக இறந்த மன்னர்கள், அரசிகள், தளபதிகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின்மேல் அவர்களின் நினைவாகக் கட்டப்படும் கோயில்கள் 'பள்ளிப்படைக் கோயில்கள்' என அழைக்கப்படுகின்றன.

10 அக்டோபர் 2026, 8:02 pm IST
பஞ்சவன் மாதேவீச்சுரம்
பகிர்:

போரில் வீர மரணமடைந்த அல்லது இயற்கையாக இறந்த மன்னர்கள், அரசிகள், தளபதிகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின்மேல் அவர்களின் நினைவாகக் கட்டப்படும் கோயில்கள் 'பள்ளிப்படைக் கோயில்கள்' என அழைக்கப்படுகின்றன.

இவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மீது லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வர். பொதுவாக இவை நம் தமிழ் மண்ணில் தொன்று தொட்டு சிவன் கோயில்களாவே அமைக்கப்பட்டு வந்துள்ளன. இவ்வாறு இறந்தவர்களின் ஆன்மா சாந்தி நிலை அடைந்து முக்தி பெறவும், எதிர்காலச் சந்ததியினர் அவர்களை நினைவுகூரவும் பிற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டிய மன்னர்கள் காலத்தில் இம்முறை பின்பற்றப்பட்டது.

இவ்வாறான முறையில் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் முதலில் திருநீறு, உப்பு, மிளகு, சங்குக்காய், ஜடாமஞ்ஜி, வெட்டிவேர், சுக்கு, திப்பிலி, பஞ்ச கவ்யம், நவதானியங்கள், வில்வ இலைகள், துளசி இலைகள், தர்ப்பை புல் ஆகியவை அடுக்கப்படும். அதன் மீது இறந்த உடல் வைக்கப்பட்டு மீண்டும் மேற்கூறிய பொருள்கள் அடுக்கப்படும். இதனைத்தான் பள்ளிப்படைமுறை என அழைக்கின்றனர். இந்த முறையில் புதைக்குழியில் உப்பு, மிளகு போடுவதால் இறந்த உடல் பதப்படுத்தப்படும். எளிதாக அந்த உடல் மக்கிப் போகாது.

Advertisement

Advertisement

பஞ்சவன் மாதேவீச்சுரம்

தஞ்சை மாவட்டம், பட்டீஸ்வரத்துக்கும் திருவிடைமருதூருக்கும் அருகே அமைந்துள்ள பழையாறை என்னும் ஊரில் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில் உள்ளது. ராஜராஜ சோழனின் மனைவியரில் ஒருத்தியும், பழுவேட்டரையரின் மகளுமான பஞ்சவன் மாதேவி ராஜேந்திர சோழனின் சிற்றன்னை ஆவார். இக்கோயில் 'பஞ்சவன் மாதேவீச்சுரம்' என அழைக்கப்படுகிறது. ஆனால், உள்ளுர் மக்கள் பேச்சு வழக்கில் இதனை 'ராமசாமி கோயில்' என அழைக்கின்றனர்.

முதலாம் ராசேந்திர சோழனால் தனது சிற்றன்னை மீது கொண்ட பாசத்தால் எடுக்கப்பட்ட கற்றளியாலான பள்ளிப்படை கோயில் இது. உள்ளே முன்பகுதியில் பஞ்சவன்மாதேவி சிலை உள்ளது. இக்கோயில் பழுவேட்டரையரின் கட்டுமான திறமையை பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

ராசேந்திர சோழன் எடுத்த இப்பள்ளிப்படைக் கற்கோயில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் உள்ளது. இப்பள்ளிப்படை தாயின் மீது அவர் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்த கட்டப்பட்ட ஒரு கலைக் கருவூலமாகவும் அமைந்துள்ளது.

ஆதித்தேஸ்வரம்

ஆதித்தேஸ்வரம்

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது தொண்டமானாற்றூர். இங்கு கோதண்டராமசுவாமி கோயில் என்ற ஆதித்தேஸ்வரம் பள்ளிப்படைக் கோயில் உள்ளது.

விஜயாலய சோழனின் (காலம் கி.பி. 846-881) மகனாகிய முதலாம் ஆதித்த சோழன் (காலம் கி.பி.871-907) கி.பி.907-ஆம் ஆண்டு தொண்டமானாற்றூர் என்னுமிடத்தில் இறந்து போனார். இவரது மரணம் குறித்து, 'தொண்டைமானாற்றூர் துஞ்சின உடையார்' என்ற சிறப்புப் பெயருடன் உத்தமசோழனின் திருமால்புரம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

முதலாம் ஆதித்த சோழனின் அஸ்தியின் மீது முதலாம் பராந்தக சோழன் தொண்டமானாற்றூரில் எடுப்பித்த பள்ளிப்படைக் கோயில் (காலம் கி.பி 880-906) இதுவாகும்.

சோழமண்டலத்தின் கஜானாவாக ஸ்ரீகாளஹஸ்தி இருந்துள்ளது. வசூலிக்கப்பட்ட வரியை வாங்கிச் செல்வதற்கு வந்த முதலாம் ஆதித்த சோழன் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இத்தல ஈஸ்வரனை 'மேற்கே எழுந்தருளிய தேவர்' எனப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

சுந்தரபாண்டிய ஈஸ்வரம்

சுந்தரபாண்டிய ஈஸ்வரம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பாண்டிய நாட்டு பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தைச் சுற்றி ஓடும் குண்டாற்றின் கிழக்குக் கரையில் உள்ளது 'சுந்தரபாண்டிய ஈஸ்வரம்' என்னும் பள்ளிப்படைக் கோயில்.

மூன்றாம் ராஜசிம்மன் மகனான சுந்தரபாண்டியன் அரசு அலுவல் விசயமாக இப்பகுதிக்கு வந்த சமயத்தில் இறந்து போனான். மூன்றாம் ராஜசிம்மனின் இளைய மகனும் சுந்தரபாண்டியனின் தம்பியுமான வீரபாண்டியன் (கி.பி. 946-966) தனது தமையனின் நினைவாக இந்தப் பள்ளிப்படைக் கோயிலை எழுப்பினான். தற்போது இக்கோயில் காளைநாதசுவாமி கோயில் என்றும், ஊர்ப்பெயர் பள்ளிமடம் என்றும் அழைக்கப்படுகிறது.

மூலவரை 'திருச்சுழியல் பள்ளிப்படை சுந்தரபாண்டிய ஈசுவரத்து மகாதேவர்' எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பக்தர்கள் அமாவாசை நாள்களில் குண்டாற்றங்கரையில் முன்னோர் வழிபாடுகளை செய்துவருகின்றனர்.

அரிஞ்சிய ஈஸ்வரம்

அரிஞ்சிய ஈஸ்வரம்

முதலாம் பராந்தக சோழனின் மகன் அரிஞ்சிய சோழன் (காலம் கி.பி. 953-960) வேலூர் அருகே ஆற்றூரில் மரணமடைந்தான். அவனது நினைவாக, தற்போதைய வேலூர் மாவட்டம், மேல்பாடியில் பொன்னை ஆற்றங்கரையில் முதலாம் ராஜராஜனால் 'அரிஞ்சிய ஈஸ்வரம்' என்ற பள்ளிப்படைக் கோயில் எழுப்பப்பட்டது. இது முதலாம் ராஜராஜ சோழன் தனது தாத்தா அரிஞ்சய சோழனின் நினைவாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எழுப்பிய ஒரு பள்ளிப்படைக் கோயிலாகும்.

இதன் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டில் இக்கோயில், 'ஆற்றூர் துஞ்சிய தேவர்க்கு பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீராஜராஜன் எடுப்பித்த கற்றளி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இக்கோயில் மூலவரை 'அரிஞ்சிகை ஈஸ்வரம் உடைய மகாதேவர்' என்று அடையாளப்படுத்துகிறது.

கருவறை வெளிச்சுவர்களில் கண்ணப்பர் வரலாறு, பிச்சாடனர் போன்ற அற்புதமான பழந்தமிழ்ச் சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இது பெளர்ணமி நாள் மட்டும் தரிசனத்துக்குத் திறக்கப்படுகிறது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

முதலாம் ராஜேந்திர சோழன் இறந்த பிறகு அவருக்கு முறையான பள்ளிப்படைக் கோயில் எழுப்பப்பட்டதா என்பது குறித்து வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும், காஞ்சிபுரம் அருகே உள்ளே பிரம்மதேசம் மற்றும் நட்டேரி பகுதிகளில் உள்ள சில சிவன் கோயில்கள் இவரது பள்ளிப்படையாகக் கருதப்படுகின்றன. இவ்வட்டார மக்கள் ஆண்டுதோறும் ராஜேந்திர சோழன் நினைவாக விழா எடுத்துக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பள்ளிப்படைக் கோயில்கள் பல வரலாற்றுத் தகவல்களை தாங்கியும், காலங்கள் கடந்தும் தமிழ் மண்ணின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை உலகுக்கு எடுத்துச் சொல்லியும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments