கோயில்களின் பரிமாணங்கள்
காலங்கள் பல கடந்தும் இயற்கையின் சீற்றங்களையும், வரலாற்று மாற்றங்களையும் கடந்து இன்றளவும் கம்பீரமாக நிற்கின்றன கோயில்கள். இதன் கட்டடக்கலை, மனிதனின் கலைத்திறனுக்கும் இறை நம்பிக்கைக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை உணர்த்துகிறது.
காலங்கள் பல கடந்தும் இயற்கையின் சீற்றங்களையும், வரலாற்று மாற்றங்களையும் கடந்து இன்றளவும் கம்பீரமாக நிற்கின்றன கோயில்கள். இதன் கட்டடக்கலை, மனிதனின் கலைத்திறனுக்கும் இறை நம்பிக்கைக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை உணர்த்துகிறது. இந்தியக் கோயில் கலை, கட்டடக்கலை மற்றும் பாரம்பரிய விழிப்புணர்வு பரப்புவதில் முன்னணி ஆசிரியராகவும் பயிற்சியாளராகவும் விளங்குகிறார், தூத்துக்குடியைப் பூர்விகமாகக் கொண்ட
ஸ்ரீ சிவசங்கர் பாபு. சென்னையில் வசித்து வரும் அவர் மத்திய அரசின் 'இன்கிரெடிபில் இந்தியா' திட்டத்தின் கீழ் 'மேம்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சுற்றுலா வழிகாட்டியாக' உள்ளார். அவர் தனது பாபு4ஹெரிடேஜ் என்ற அமைப்பின் கீழ் கோயில் கலைகள், கட்டடக்கலை மற்றும் வரலாறு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கி வருகிறார். 2026 ஜனவரியில் 'கட்டட நுண்ணறிவு' என்ற தொடரில் முதல் புத்தகமாக 'தமிழ்நாட்டு கட்டடக் கலை' என்ற கையேடு பதிப்பித்துள்ளார். இதே வரிசையில் வெகு விரைவில் 'தென்னக கோபுரங்கள்' என்ற புத்தகம் தமிழில் வெளிவருகிறது. மேலும் ஜனவரி 2027 - ஆம் ஆண்டில், 'மல்லை ஒரு கலை நுணுக்க கையேடு' என்ற புத்தகத்தைப் பதிப்பிக்க உள்ளார். அமிர்தா விஸ்வ வித்யா பீடம், சேட் அகாடமி போன்ற பல்வேறு அமைப்புகள் மூலம் கோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை மற்றும் ஆகம விதிகள் பற்றிய வகுப்புகள் நடத்துகிறார்.
அவரிடம் பேசியபோது:
Advertisement
Advertisement
'இந்தியாவில் வேத காலத்தில் திறந்த வெளியில் தீ வளர்த்து யாகம் செய்வதே முக்கிய வழிபாடாக இருந்தது. பின்னர் படைக் கருவிகள், உருவ ஓவியம், சிலை இவற்றை மரத்தடியிலும், பின்னர் மூடப்பட்ட இடங்களிலும் வைத்து அலங்காரம், படையல் வைத்து வழிபடும் இடமே கோயில் ஆனது. இக்கால கோயில்கள் காலப்போக்கில் இடிந்து, புனரமைப்பு செய்யப்பட்டன. எனவே இந்தியாவில் முதல் கோயில் எது என்று உறுதியாக ஒன்றைச் சொல்ல முடியாது. இந்த வகையில் தென்னிந்தியாவில் பழைமையான கோயில் திருப்பதி அருகே உள்ள குடிமல்லம் சாதவாகனர் கால பரசுராமேஸ்வரர் கோயில். இதில் உள்ள முகலிங்கம் கி.மு.1- ஆம் நூற்றாண்டு என்கிறார்கள்.
மறைந்து போன மாக்கல் கட்டுமானம்
மாக்கல்லில் மிக நுணுக்கமான வகையில் செய்யப்படும் ஹோய்சால கட்டடக் கலை 12, 14-ஆம் நூற் றாண்டுகளில் உச்சத்தில் இருந்தது. அதன்பின்னர் இந்தக் கலை மரபு காணாமல் போய் விட்டது. காகதீயர் இதை ஓரளவு தொடர்ந்தாலும், பின்னர் விஜய நகர காலத்தில் இந்த அளவு வரையான நுணுக்கங்களை இதை விட உறுதியான கருங்கல்லில் செய்ய ஆரம்பித்து, இதன் மறைவுக்கு ஒரு காரணமாகும். கருங்கல்லில், மாக்கல்லை விட உயரமான மற்றும் அகலமான கட்டுமானங்கள் செய்ய முடியும்.
ஆகம / சாஸ்திர விகிதாச்சாரங்கள்
தமிழகத்தில் 20 அடி சிறிய விமானமும் 200 அடி பெரிய விமானமும் பார்க்க ஒரே மாதிரியாக தெரிவது ஏன்? இந்தச் சிறப்பின் அடிப்படை 5-6 நூற்றாண்டுகளில் இருந்து எழுதப்பட்ட ஆகம மற்றும் சாஸ்திர விதிகள் விமானத்தின் நீளம் / அகலம் விகிதம், விமான 8 அடுக்கு உறுப்புகளின் உப விகிதம், உயரத்தில் ஒவ்வொரு தளத்தின் விகிதம் இவற்றைப் பாட்டுகளாகச் சொல்கின்றன. எனவே இந்த விகிதங்களை வைத்துக் கட்டப்பட்ட எந்த விமானமும் ஒரே மாதிரியாகத்தான் தெரியும். இதுவே நமது கோயில்களின் வியக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.
கலைநயத்துடன் பொறியியல் உறுப்புகள்
நமது முன்னோர் கட்டுமானத் தொழில் நுட்பங்களை மிக அழகான முறையில் கலைநயத்துடன் அமைத்துள்ளனர். எடுத்துக்காட்டு... சரிவான அடித்தளங்களின் அழகு, தூண் போதிகைகளில் வேறுபாடு, சிற்பங்களுடன் கூடிய கூட்டுத் தூண்கள், உயரமான விமான எடை தாங்கக்கூடிய இரட்டைச் சுவர் சாந்தார அமைப்பு, மணல் படுகையில் குறைந்த ஆழத்தில் தாங்கு தளம் மற்றும் உறுப்புகளின் கணித விகிதங்கள். இவற்றை இக்கால சிமென்ட், கான்கிரீட், இரும்புக் கம்பி மூலம் இன்னும் அழகாக அமைக்கலாம்.
கோயில் புனரமைப்பு
பாரம்பரிய சிற்பங்களில் மூன்று வகை உண்டு. கருங்கல், மரம், சுண்ணாம்புச் சுதை. இவற்றில் கருங்கல் சிற்பங்களில் படிந்த எண்ணெய், சுண்ணாம்பு, சிமென்ட் படிமங்களை வாட்டர் ஜெட் கொண்டு சுத்தம் செய்யாமல் ரசாயன அறிவியல் முறையில் செய்தால் சிதைவு இருக்காது. மரம், சுதை சிலைகள் 200 வருடங்களுக்குப் பின்னர் சிதைய ஆரம்பிக்கும். அப்போது மறுபடியும் பூச்சு வேலை செய்ய வேண்டும்.
கேரள ஸ்ரீகோயில்
இந்தியாவின் கோயில் கருவறை அந்தந்தப் பகுதி ஆகம விதிகளின்படி நிறுவப்பட்டு உயிரூட்டப்படுகின்றன. கட்டுமான ரீதியில் கேரள கோயில் கருவறை (ஸ்ரீகோயில்) மற்ற திராவிட, நாகர கோயில்களைப் போல மற்றவற்றுடன் ஒட்டாமல் தனித்து நிற்கும்.
கோயில் - ஒரு சமூக கூடம்
மன்னர்கள் கோயில் கட்டியதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆன்மிக ரீதியான காரணங்களைத் தவிர, தங்கள் ஆட்சியின் பலம் மற்றும் செழுமையைக் காட்டவும் கோயிலை எழுப்பினார்கள். கோயில்களில் தெய்வ வழிபாடு தவிர அந்தக் கிராமத்துக்குத் தேவையான பல சமூக அமைப்புகளும் இருந்தன. ஆடல் கலைகள், மருத்துவ சாலை, பொக்கிஷம், பாடசாலை, தானியக் களஞ்சியம், கிராம சபை நீதிமன்றம், நீதிமன்ற சுவர்களில் ஆவணக் காப்பகம், பேரிடர் கால தங்குமிடமாகவும் கோயில்கள் விளங்கின. பிற்காலக் கோயில்கள் பல பிரகாரங்கள், பெரிய மதிகளுடன் கோட்டை நகரமாக அமைந்தன.
கோயில்களில் நீர் மேலாண்மை
கோயில்களில் தெய்வ நீராட்டல், சமையல், பக்தர்கள் உபயோகத்துக்குத் தனிக் கிணறுகள் இருந்தன. தெப்பத் திருவிழா, பக்தர்கள் குளிக்க, பாசனம் என்று குளங்கள் கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தன. கருவறை -கடவுள் நீராட்டல் திரவியங்கள் பிரணாளம் மூலம் வடக்குப் பக்கம் வெளிப்பட்டு கோயில் குளத்தில் சேர்ந்தது. விமானத்தில் பெய்யும் மழை சலீலாந்தரா என்ற இடுக்குகளின் மூலம் வடிந்து வெளியேறும். மண்டபக் கூரையில் பெய்யும் மழை, அழகான யாழி, குரங்கு, சிங்க வாய் மூலம் வடிந்து வெளியேறும்.
குளிர்பதன கோயில்கள்
கோயில் கருவறை வெளிச்சமின்றி இருக்கும். ஆனால், மண்டபங்களில் தூண்களுக்கு இடையில் பலகணிகளும், சாளரங்களும் வெளிச்சம், காற்றோட்டத்துக்கு உதவுகின்றன. கருங்கல்லில் செய்த மண்டபங்கள், கொடும் வெயிலிலும் வெப்பத்தை உறிஞ்சி, உள்ளே குளுமையாக வைக்கின்றன. விஜயநகர மண்டபங்களில் நவரங்க நாடு பகுதி கூரையை சற்று உயரமாக்கி சாளரங்கள் வைப்பதால் வெப்பக் காற்று வெளிச்செல்லும்; மேலிருந்து வெளிச்சமும் வரும்.
ஆய்வுகள் மற்றும் ஆவணப்படுத்துதல்
கட்டடக் கலை ஆவணப்படுத்துதலில், மின்னணு படங்கள் மிக முக்கியமானவை. இவற்றில் பெரும் பகுதி பொதுமக்கள், மற்றும் கலை ஆர்வலர்களால் எடுக்கப்படுகின்றன. சமீப காலத்தில் கோயிலில் புகைப்படக் கருவிகள் மீதான தொடரும் தடைகள், பிற்போக்கானவை; நீக்கப்படவேண்டியவை. கோயில்களின் கால கணக்கை கல்வெட்டுகள் மூலம் வரையறை செய்யும் பாணியில் இருந்து, அறிவியல் முறையில், கட்டுமானப் பொருள்கள், கட்டட விகிதாச்சாரங்கள், உறுப்புகளின் வடிவங்கள் இவற்றின் மூலம் வரையறை செய்யும் முறைகள் வளரவேண்டும்' என்றார்.
-சமாத்மிகா