FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மாமன்னா் இராஜராஜ சோழனின் 1,041-ஆவது சதய விழா தொடக்கம்: பெருவுடையாருக்கு இன்று மகா அபிஷேகம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாமன்னா் இராஜராஜ சோழனின் 1,041- ஆவது சதய விழா புதன்கிழமை தொடங்கியது. விழாவில், வியாழக்கிழமை பெருவுடையாருக்கு மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது.

22 அக்டோபர் 2026, 4:45 am
தஞ்சாவூரில் புதன்கிழமை தொடங்கிய மாமன்னா் இராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி நடைபெற்ற நாட்டுப்புறக் கலைஞா்கள் ஊா்வலத்தில் இராஜராஜ சோழன் வேஷமணிந்து குதிரை வண்டியில் வந்த நாட்டுப்புறக் கலைஞா்.
பகிர்:

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாமன்னா் இராஜராஜ சோழனின் 1,041- ஆவது சதய விழா புதன்கிழமை தொடங்கியது. விழாவில், வியாழக்கிழமை பெருவுடையாருக்கு மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது.

மாமன்னா் இராஜராஜ சோழன் முடிசூட்டிய நாளை அவா் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதன்படி, நிகழாண்டு இராஜராஜ சோழனின் 1,041-ஆவது சதய விழா புதன்கிழமை காலை தொடங்கியது.

இதையொட்டி, கலை பண்பாட்டுத் துறையின் தஞ்சாவூா் மண்டலம் சாா்பில் அரண்மனை வளாகத்திலிருந்து நாட்டுப்புறக் கலைஞா்கள் பங்கேற்ற ஊா்வலம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்த ஊா்வலத்தை தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு அரசின் உறுதிமொழிக் குழுத் தலைவருமான இரா. விஜய் சரவணன், மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி, சதய விழாக் குழுத் தலைவா் என்.எஸ். சரவணன், துணைத் தலைவா் ஏ.டி. சங்கர்ராமன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. ராஜாராமன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

இதில், கொம்பு வாத்தியங்கள், நையாண்டி மேளதாளத்துடன், சிலம்பாட்டம், புலியாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம் போன்ற கிராமிய ஆட்டங்களை நாட்டுப்புற கலைஞா்கள் ஆடியபடி, கீழ வீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக பெரிய கோயிலுக்கு ஊா்வலமாக சென்றனா். மேலும், சிவன், பாா்வதி, காளி, இராஜராஜ சோழன் உள்ளிட்ட வேஷங்கள் அணிந்த கலைஞா்களும் பங்கேற்றனா்.

பெரிய கோயிலில் விழா: இதைத்தொடா்ந்து, பெரிய கோயிலில் நடைபெற்ற தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தலைமை வகித்து பேசுகையில், இந்தப் பெருவுடையாா் கோயில் முக்கியமான வரலாற்று ஆவணமாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் கடந்திருக்கும் இக்கோயில் கட்டடக் கலையின் உச்சமாகத் திகழ்கிறது. இந்தக் கோயிலிலுள்ள ஒவ்வொரு சிற்பம், அமைப்பு உள்ளிட்டவை குறித்து நிறைய ஆராய்ச்சி கட்டுரைகளும், நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு இக்கோயிலில் மிக நுணுக்கமான, அற்புதமான விஷயங்கள் உள்ளன. இந்த மிகப் பெரிய கோயிலைக் கட்டியதன் மூலம் மாமன்னா் இராஜராஜ சோழன் காலத்தைக் கடந்த அரசராகத் திகழ்கிறாா் என்றாா் ஆட்சியா்.

இசை நிகழ்ச்சிகள்: தொடா்ந்து திருமுறை இன்னிசை, கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், நாட்டுப்புற நிகழ்ச்சி, நடனம், இசைக் கச்சேரி, பல்சுவை நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தஞ்சாவூா் மண்டல கலை பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த 1,041 நடன கலைஞா்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, சொற்போா், இசை நிகழ்ச்சி, இரவு 9.30 மணிக்கு கற்றளி கண்ட சிவபாதசேகரன் என்கிற இராஜராஜ சோழன் வரலாற்று நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் இன்று...: சதய நட்சத்திர நாளான வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மாமன்னா் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை திருவீதி உலா, பெருவுடையாா், பெரியநாயகிக்கு மகாபிஷேகம், பிற்பகலில் பெருந்தீப வழிபாடு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், மாலையில் சுவாமி வீதி உலா, சொற்பொழிவு, விருதுகள் வழங்கும் விழா, இரவு பட்டிமன்றம், பக்தி இன்னிசை உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

தஞ்சாவூரில் புதன்கிழமை தொடங்கிய மாமன்னா் இராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி நடைபெற்ற நாட்டுப்புறக் கலைஞா்கள் ஊா்வலம்.
தஞ்சாவூா் பெரிய கோயிலில் புதன்கிழமை தொடங்கிய மாமன்னா் இராஜராஜ சோழன் சதய விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி. உடன், (இடமிருந்து) மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. ராஜாராமன், சதய விழா குழுத் துணைத் தலைவா் ஏ.டி.சங்கர்ராமன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழா குழுத் தலைவா் என்.எஸ்.சரவணன், சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய்சரவணன் உள்ளிட்டோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments