FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராகு - கேது தோஷம் போக்கும் தலம்!

ராகு–கேது தோஷம் நீங்கி, மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தர்ப்பணம் செய்தால் முன்னோர் ஆசிர்வாதம் கிடைக்கும்...

25 செப்டம்பர் 2026, 1:43 pm IST
பகிர்:

தேவாரப் பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் சோழ நாட்டு காவிரி தென்கரைத் தலம், வேதாரண்யம். 64 சக்தி பீடங்களில் இது சுந்தரி பீடமாகும். ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம்.

இத்தலத்தில் எலி ஒன்று மூலஸ்தானத்தில் விளக்கை நன்கு எரியும்படி தூண்டியதால் மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்ததாகக் கூறப்படுகிறது. தாயுமானவர் மற்றும் திருவிளையாடல் புராணம் எழுதிய பரஞ்சோதி அவதரித்த திருத்தலமாகும்.

மூலவர் திருமறைக்காடர், இறைவி வேதநாயகி. அகத்தியர் போன்ற முனிவர்களும், தசரதன், விசுவாமித்திரன், ராமபிரான், வசிஷ்டர் போன்ற இதிகாச காலத்துப் பெருமக்களும், முசுகுந்த சக்கரவர்த்தி போன்ற புராணக் காலத்து மன்னர்களும், பின்னர் வாழ்ந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

அகத்திய மாமுனிவருக்கு தமது திருமணக் கோலத்தை சித்திரை மாதம் வளர்பிறையில் சப்தமி திதியில் இத்தலத்தில் காட்டியருளினார் இறைவன். இதன்படி கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்குப் பின்னர் இறைவனும், இறைவியும் திருமணக் கோலத்தில் புடைப்புச் சிற்பங்களாக எழுந்தருளியுள்ளனர். இந்தத் திருமணத் திருவிழா ஒவ்வோராண்டும் சித்திரைத் திங்களில் இத்தலத்தில் நிகழ்த்திக் காட்டப்பெறுகிறது.

இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று. முசுகுந்த சக்கரவர்த்தி தேவலோகம் சென்று, தேவர்களுக்கு ஆதரவாகப் போரிட்டு வெற்றி பெற்றதன் காரணமாக இந்திரன் அளித்த ஏழு விடங்கர்களில் ஒன்றான மரகதலிங்கம் இத்தலத்தில் முசுகுந்த சக்கரவர்த்தியினால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்தலத்தின் தியாகராஜர் புவனவிடங்கர் என்றும், அவரது நடனம் ஹம்சபாத நடனம் என்றும், இங்குள்ள நடராஜ சபை தேவ சபை என்றும் சொல்லப்படுகிறது.

மூலவர் சுயம்பு லிங்கத் திருமேனி. கருவறை சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் அருள்கின்றனர். துர்கை தெற்கு நோக்கி காட்சி தருகின்றார். நவகிரகங்கள் அனைத்தும் இறைவனது திருமணக் கோலத்தைக் காண ஒரே திசையில் காட்சி தருகின்றனர். அம்மன் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் வேதநாயகி எனவும், தமிழில் யாழைப் பழித்த மொழியாள் என்றும், வடமொழியில் வீணாவாத விதூஷணி எனவும் அழைக்கப்படுகிறார்.

அம்மன் கோயில் முன் மண்டபத்தில் மேல்புறம் வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து தலவிநாயகர், காட்சி கொடுத்த நாயனார், ஆறுமுகர், ஜுரதேவர், சனி பகவான், வீணை இல்லாத சரஸ்வதி, அன்னபூரணி, துர்கை, சோழீஸ்வர லிங்கம் ஆகிய சந்நிதிகளைக் காணலாம். அதற்கடுத்து பள்ளியறை, பைரவர், சூரிய சந்திரர்கள் சன்னதிகள் உள்ளன.

இது ராகு - கேது தோஷங்கள் போக்கும் தலமாகும். தலவிருட்சம் வன்னி மரம். இதில் இறைவனும் இறைவியும் சூட்சும ரூபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. திருமணம் வேண்டி பக்தர்கள் மஞ்சள் முடித்த கயிறு கட்டியும், குழந்தைப் பேறு வேண்டி தொட்டில் கட்டியும் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறும் இத்தலத்தில் சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம் உள்ளது. இதில் பக்தர்கள் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி ஆறுகளில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆண்டுதோறும் பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று கங்கை தனது பாவங்கள் நீங்க வேண்டி இந்தத் தீர்த்தத்தில் நீராடி வேதாரண்யேஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதிகம். இது தவிர விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம், திருக்கோடி தீர்த்தமும் உள்ளது.

செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 10-ஆம் தேதி மகாளய அமாவாசை வரை மகாளய பட்ச தினங்கள். இந்நாள்களில் ஒருநாள் பக்தர்கள் கோயில் அருகிலுள்ள கடலில் நீராடி, தர்ப்பணம் கொடுத்த பிறகு, கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மணிகர்ணிகை தீர்த்தக் குளத்திலும் நீராடி, வேதாரண்யேஸ்வரரை வழிபட்டால், வாழ்வில் சகலப் பேறுகளும் கிட்டும் என்பது நம்பிக்கை.

மகாளய அமாவாசையன்று அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் கோயிலில் இருந்து கல்யாணசுந்தர சுவாமி (இறைவன்}இறைவி திருமணக் கோலம்) கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெறும். அதன் பின், கோயிலில் உள்ள வேதாரண்யேஸ்வரர், வேதநாயகி அம்மன் மற்றும் புவனவிடங்க தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

காலை 6.30 முதல் நண்பகல் 12.30 வரையும், மாலை 4.30 முதல் இரவு 9 மணிவரையும் திறந்திருக்கும் வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சுமார் 65 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

- தஞ்சாவூர் இரா.சுரேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments