ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்:விரைந்து முடிவெடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்பெறுவதற்கு இந்தியாவுக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன. இது குறித்து விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்பெறுவதற்கு இந்தியாவுக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன. இது குறித்து விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி-4 நாடுகளின் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கல், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே, பிரேசில் அதிபர் தில்மா ரூசேப் கலந்துகொண்டு பேசினர். அப்போது பேசிய தலைவர்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம்பெற தங்களுக்குப் போதிய தகுதிகள் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்பெற இந்தியாவுக்கு அனைத்துத் தகுதிகளும் இருப்பதாகவும் இது குறிந்து விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் குறித்த காலத்துக்குள் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தையும் அவர் முன்வைத்தார்.
Advertisement
Advertisement
இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளாகும். சர்வதேச அளவில் பொருளாதாரத்தை வலுப்படுத்த காரணமாக இருப்பவை. இந்த நான்கு நாடுகளுமே சர்வதேச அளவில் பொறுப்புகளை ஏற்றுச் செயல்படத் தயாராக இருக்கின்றன. பருவநிலை மாற்றமும், பயங்கரவாதமும் உலகில் நமக்கு பெரும் சவாலாக உள்ளன. இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆண்டாண்டு காலமாகப் கடைப்பிடித்து வரும் மனோநிலையை மாற்றிக்கொண்டு புதிய உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் குறித்து அவ்வப்போது பேசப்பட்டு வந்த போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஐ.நா. பொதுச்சபையின் 70-வது ஆண்டுக் கூட்டம் நடைபெறும் இந்த சமயத்தில் இது குறித்து முடிவு எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
ஐ.நா. சபை உதயமான பிறகு, உலகில் பல்வேறு அடிப்படை மாற்றங்களுடன் நாம் வாழ்ந்து வருகிறோம். உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையும் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. சிக்கலான இப்பிரச்னைக்கு நாம் தீர்வுகாண வேண்டும் என்றார் பிரதமர் மோடி.
பின்னர் இந்த மாநாடு தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என்றும் அதற்கான சட்டப்படியான தகுதி அவற்றுக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்கும்பட்சத்தில் இந்த நான்கு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படவும் உறுதி தெரிவித்துள்ளன. நான்கு நாடுகளுமே பரஸ்பரம் ஒன்றையொன்று ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.